தேர்தல் - மக்களின் பொறுப்பு?

அரசியல்வாதிகள் என்றாலே ஊழல்வாதிகள் எனவும், அரசியல் தலைவர்கள் மாறினால்தான் எல்லாம் சரியாகும் எனவும் ஒரு பொதுவான பார்வை உள்ளது. இந்த அமைப்பிற்கு (System) உட்பட்டு அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் நிர்பந்தங்களையும் தடைகளையும் இங்கே சுட்டிக்காட்டும் சத்குரு, இதில் மக்கள் ஏற்க வேண்டிய பொறுப்பு என்ன என்பதையும் அறிவுறுத்துகிறார்!
தேர்தல் - மக்களின் பொறுப்பு?, Therthal - makkalin poruppu?
 

அரசியல்வாதிகள் என்றாலே ஊழல்வாதிகள் எனவும், அரசியல் தலைவர்கள் மாறினால்தான் எல்லாம் சரியாகும் எனவும் ஒரு பொதுவான பார்வை உள்ளது. இந்த அமைப்பிற்கு (System) உட்பட்டு அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் நிர்பந்தங்களையும் தடைகளையும் இங்கே சுட்டிக்காட்டும் சத்குரு, இதில் மக்கள் ஏற்க வேண்டிய பொறுப்பு என்ன என்பதையும் அறிவுறுத்துகிறார்!

சத்குரு:

உயர்ந்த பதவிகளில் இருக்கும் சில அரசியல்வாதிகளை நான் அறிவேன். தனிப்பட்ட முறையில் அவர்கள் அற்புதமான மனிதர்களாகவும், நகைச்சுவை உணர்வுள்ளவர்களாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால், பொது வாழ்க்கை என்று வரும்போது, அந்த நகைச்சுவை உணர்வும், நம்பகத் தன்மையும் இருப்பதில்லை. இந்த நிலையை மாற்ற அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்திடமுடியாது... ஏனெனில் அவர்கள் ஒரு நிர்ப்பந்தத்திற்குள் செயல்படுகிறார்கள். இப்படி ஓர் அமைப்பைத்தான் நாம் உருவாக்கி வைத்துள்ளோம்.

மக்கள் டீ குடித்துக்கொண்டே, ஒரு பிரதம மந்திரி எப்படிச் செயல்பட வேண்டும், முதல் மந்திரி எப்படி செயல்படக் கூடாது என்றெல்லாம் யோசனை சொல்வார்கள். ஆனால், தாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள்.

அவர்களைத் தேர்வு செய்யும் பொதுமக்களும், நாட்டின் நன்மைக்காக அவர்களைத் தேர்வு செய்வதில்லை. ‘நான் உனக்கு வாக்களித்தால், நீ எனக்கு என்ன செய்வாய்?' என்று கேள்வி கேட்கவே விரும்புகிறார்கள். ‘நான் உனக்கு 25 ஓட்டுகளைப் பெற்றுக்கொடுத்தால், 50 ஓட்டுகளைப் பெற்றுக்கொடுத்தால், 1000 ஓட்டுகளைப் பெற்றுக்கொடுத்தால், நீ எனக்கு என்ன செய்வாய்?’ இப்படித்தான் நமது அமைப்பு இருக்கிறது. நமது அரசியல் அமைப்பு இப்படி இருக்கும்போது... ஓட்டு வாங்கி வெற்றி பெறுபவர் இது போன்ற ஒரு கட்டாயத்தில் இருக்கும்போது... அவர் அறிவுடன் செயல்பட வழியே இல்லை.

அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என அவர் விரும்பினால், தான் வெற்றி பெற உதவியவர்களின் கோரிக்கைகளை இந்த 5 வருடங்களில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். இப்படி இருக்கும்போது தேசத்தை முழுமையான நலன் நோக்கி அவரால் அழைத்துச் செல்ல முடியுமா?

அரசியல்வாதிகளின் தவறுகளை அனைவரும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், அதில் வெகு சிலரே தீர்வை எதிர்பார்க்கிறார்கள். டீக்கடைப் புரட்சிகள் ஆங்காங்கே எப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. மக்கள் டீ குடித்துக்கொண்டே, ஒரு பிரதம மந்திரி எப்படிச் செயல்பட வேண்டும், முதல் மந்திரி எப்படி செயல்படக் கூடாது என்றெல்லாம் யோசனை சொல்வார்கள். ஆனால், தாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள். மக்களின் பிரச்சினையே இதுதான். பிரதமரின் வேலை பற்றி முழுதாகத் தெரிந்திருப்பார்கள், ஆனால் ஒரு நல்ல டீ எப்படிப் போடுவது என்று அவர்களுக்குத் தெரியாது. இப்படித்தான் டீக்கடைப் புரட்சிகள் எல்லா இடங்களிலும் தங்குதடையின்றி நடக்கிறது. இவையெல்லாம் நோக்கமற்ற வெற்றுப் பேச்சுக்கள்.

நடைமுறைக்கு ஒவ்வாத தீர்வையே மக்கள் அதிகம் சிந்திக்கிறார்கள். அரசியல் அமைப்பு பற்றியும், அரசியல்வாதிகளின் பொறுப்பு பற்றியும் மக்கள் மணிக்கணக்கில் அக்கறையுடன் பேசுவார்கள். ஆனால், அந்த அக்கறையை ஒரு செயலிலும் காட்டமாட்டார்கள். ஓட்டு போடுவதற்குக்கூட வீட்டைவிட்டு நகர மாட்டார்கள். ஓட்டு போட நீங்கள் அவர்களைக் கெஞ்ச வேண்டும். அவர்களை ஓட்டு போடவைப்பதற்குக்கூட கட்சியிலிருந்து கார் அனுப்ப வேண்டும். இதுதான் பல இடங்களில் நடக்கிறது, இல்லையா? ஓட்டு போடுவதற்குக்கூட முன்வராதவர்கள், அடுத்த தேர்தல் வரை எதைப் பற்றியும் வாயே திறக்கக் கூடாது.

நீங்கள் இப்படி இருக்கும்போது, உங்கள் தலைவர்கள் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? நம் நாட்டை பல வழிகளிலும் முன்னேற்றத் தவறிய அரசியல்வாதிகளின் செயல்களை நான் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. ஒரு தலைவர் சரியில்லை என்றால் 5 வருடங்களுக்குள் அவரை நீங்கள் எளிதாக மாற்ற முடியும். நீங்கள் ஜனநாயக நாட்டில் இருக்கிறீர்கள். அடுத்த தேர்தலில் அவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்காமல் இருக்க முடியும்.

சாதாரண மனிதர்களின் தன்மையை மாற்றவில்லை என்றால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் அதே தன்மையில்தான் இருப்பார்கள்.

ஆனால் இப்போதுள்ள அமைப்பில், யாராவது ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்தாலும் கூட, அப்படிச் செய்வதில் அவர்களுக்கு பல தடைகள் இருக்கிறது. அத்தடைகளை மீறி அவர் ஏதேனும் செய்ய வேண்டுமெனில், அரசியலில் உள்ள எல்லாத் தந்திரங்களையும் அவர் தெரிந்துவைத்திருக்க வேண்டும்! இந்த நிலை மாற வேண்டுமென்றால், சாதாரண மனிதர்களை முதலில் மாற்ற வேண்டும். ஆனால், சாதாரண மனிதர்களை மாற்றுவது என்பது பெரிய வேலை. உண்மையான பிரச்சினை இங்குதான் இருக்கிறது. நிலத்தின் தன்மையைப் பொறுத்தே விளைச்சலும் இருக்கிறது. நீங்கள் மரத்தில் உள்ள பழங்களின் பருமனைத்தான் பார்க்கிறீர்கள். மரத்தைப் பார்க்க மறுக்கிறீர்கள். பழத்தின் பருமனும் தன்மையும் மண்ணைப் பொறுத்தே இருக்கிறது. எனவே, சாதாரண மனிதர்களின் தன்மையை மாற்றவில்லை என்றால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் அதே தன்மையில்தான் இருப்பார்கள்.

தற்போதுள்ள அமைப்பு மாற வேண்டுமெனில், அந்த மாற்றத்தில் தொழில் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்த மாற்றத்தில் பங்கேற்றால், இயல்பாகவே அரசியல் மற்றும் அதிகாரவர்க்கம் அதில் இணைவார்கள். தற்போதைக்கு அணுகுவதற்கு மிகவும் கடினமாக இருப்பது அரசியல்வாதிகள்தான். அதிகாரிகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், முனைந்து தற்போதைய அமைப்பில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். அவர்கள் முற்பட்டால், அவர்களால் எளிதாக அரசியலையும் இணைத்துக்கொள்ள முடியும். ஏனெனில், அரசியலை இணைக்காமல் அவர்களால் செயல்பட முடியாது.

முதலில் நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கைக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். வாக்களிக்கும் பொறுப்பைக் கூட நம்மில் பலர் நிறைவேற்றுவதில்லை. இருப்பதிலேயே யார் சுமார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களையாவது நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எனவே, ஒவ்வொரு தனி மனிதரும் இந்த விஷயத்தில் தனக்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் இதைச் செய்ய முடியாது. ஏதாவது ஒரு தலைவர் இதைச் செய்ய முடியாது. ஒவ்வொரு தனி மனிதரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

எப்போதும் தலைவர்களால் வழிகாட்ட மட்டுமே முடியும். மக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்!