இன்றைய தரிசன நேரத்தில், நாளைய சிவாங்கா சாதானா நிறைவிற்கு வருகை தந்திருக்கும் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கூடியிருக்க..., தியான அன்பர்கள், பக்தர்கள், பார்வையாளர்கள் என்று பலரும் சத்குருவிடம் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்களில் சில .உங்களுக்காக... படித்து மகிழுங்கள்.

6:25

நாளைய தைப்பூசத்திற்கும் பெண்களுக்கான சிவாங்கா சாதனா நிறைவிற்கும் இன்றே வருகை தந்திருக்கும் 500க்கும் மேற்பட்டோர் கூடியிருக்க, சத்குரு தரிசனம் தந்தார். ஈஷா இசைக்குழு வடமொழி பாடலொன்றைப் பாடி உருகவைத்தது போதாதென்று, "இயற்கையென்னும் இறைவன் கண்டேன்" பாடலையும் இசைக்க, பக்திப்பெருக்கில் அனைவரும் கரைந்துவிட்டனர். அதன்பின் சத்குருவைப் பின்தொடர்ந்து அனைவரும் ஆதிசங்கரரின் யோகரத்தோவா பாடலைப் பாடினர்.

6:41

கடந்த மாதத்தில் நிகழ்ந்திருப்பது, ஜனவரி 5-ஆம் தேதி நிகழ்ந்த சேலம் லிங்கபைரவி பிரதிஷ்டை முதல், குடியரசு தினத்தில் ஒபாமா வருகை தந்திருந்தது, ஐதராபாத்தில் அரசாங்கம் முழுவதுமே தியானம் செய்யத் துவங்கியிருப்பது, என்று அனைத்தும் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

6:47

"நமக்கு ஈஷா வித்யா போன்ற பள்ளிகள் நிறையத் தேவை. அதற்கு என்னை நானே கொடுக்கிறேன். இதை எப்படி நிகழ்த்திட?" என்று ஒருவர் கேட்க, "இப்படி என்னிடம் நிறையபேர் வருகிறார்கள். ஆனால் செய்யத்தேவையானது என்னவோ அதைச் செய்யமாட்டார்கள். உண்மையில் செய்யத்தேவையானது அனைத்தையும் செய்யத்தயாராக இருந்தால் சொல்லுங்கள். பிறகு பார்ப்போம். நிறைய வேலைகள் இருக்கிறது. இல்லாவிட்டால் உங்கள் வேலையை பார்த்துக்கொள்ளுங்கள் போதும்." என்றார் சத்குரு.

6:55

"என் கேள்வி இன்றைய இளைஞர்கள் பற்றியது. இளைஞனாக நான் எல்லாவற்றுடனும் போராடுகிறேன். எப்படி இதைக் கையாளுவது?" என்று ஒரு இளைஞர் கேட்க, "பச்சிழம் குழந்தைகள் என்றால் பிரச்சனை. குழந்தைகளும் பிரச்சனை. இளைஞர்களும் பிரச்சனை. நடுவயதினரும் பிரச்சனை. முதியவர்களும் பிரச்சனை. இறந்தவர்கள் மட்டும்தான் பிரச்சனையில்லாமல் இருக்கிறார்கள். இளைஞராக நீங்கள் ஆர்ப்பரித்தால் அடக்கப்படுவீர்கள். இளைனராக உங்களால் உங்கள் வாழ்க்கையை விரும்பும்விதமாக உருவாக்கிட முடியும். உங்கள் எண்ணங்களும் உணர்ச்சிகளும் உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கிக்கொள்வதே. உங்கள் மனதில் பேய் பிசாசுகளை நீங்களே உருவாக்கிக்கொண்டு அதனுடன் போராடவும் செய்கிறீர்கள். உங்கள் பேய் உங்கள் பேச்சைக் கேட்காவிட்டால் உலகில் எல்லாம் தவறாகிவிட்டது போலத் தோன்றும். உலகம் நன்றாகவே இருக்கிறது, நீங்கள் சரியாக இருந்தால் எல்லாம் சரியாகவே இருக்கும். இளமை என்பது பொற்காலம், போராடும் காலமல்ல. உங்கள் சக்திகள் உச்சத்தில் இருக்கும் இவ்வேளையை சரியாக பயன்படுத்துங்கள்." என்று தெளிவுதந்தார் சத்குரு.

7:15

உக்கிரமாக இருப்பதென்றால் என்னவென்று ஒருவர் கேட்க, "உக்கிரமாக இருப்பதென்பது ஒருவர் தேர்வு செய்யக்கூடியதல்ல. உங்கள் சக்திகள் ஒருவிதமான தீவிரத்தில் இருந்தால் அது உக்கிரமாக இருக்கும். காட்டில் பல மிருகங்கள் இருந்தாலும், ஒரு புலி தனித்துவமானது. அது இருக்கும் தன்மையிலேயே உக்கிரமாக இருக்கிறது. அதனால் உக்கிரமாக இருக்க முயற்சிக்காதீர்கள். தீவிரம்தான் முக்கியம். உங்கள் தீவிரத்தை அதிகரித்திடவே ஈஷா யோகப் பயிற்சிகள் முழுவதும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்பமாக தீவிரத்துடன் இருந்தால் அற்புதமாக இருக்கும். கோபத்துடன் காழ்ப்புடன் தீவிரமாக இருந்தால் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்வீர்கள், சமூகத்துடன் ஒத்துப்போகமாட்டீர்கள். சரியாக ஊட்டமளித்து உங்களை வளர்த்துக்கொண்டால், தீவிரம் தானாக வரும்" என்று சத்குரு விளக்கினார்.

7:30

"நான் ஒரு குடும்பத்தலைவியாக என் வீட்டில் எப்படி இருக்கிறேனோ அது அனைவரையும் பாதிக்கிறது. என்னை நான் அமைதியாக என்னை எப்படி வைத்துக்கொள்வது?" என்று ஒரு பெண்மணி கேட்க, "நீங்கள் மனிதராக இருந்தால் உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள முடியும். வாழ்க்கையில் நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்தில் நீங்கள் சிக்கியிருந்தால் எதுவும் செய்யமுடியாது. அதனால்தான் தியானம் கற்றுக்கொடுத்தோம், வெறும் உயிராக இருந்திடுங்கள், அமைதி தானாக நிகழும்." என்றார் சத்குரு.

7:38

"நான் யார்?" என்று ஒருவர் கேட்க, "இந்தக் கேள்வியை ஒருவர் தனக்குத் தானே கேட்டுக்கொண்டால் உள்முகமாகத் திரும்பிட அது வேலை செய்யும். இதை வேறு ஒருவரிடம் கேட்டுவிட்டால் மிகவும் அபத்தமாகிவிடும். நீங்கள் செய்யும் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியோடு இக்கேள்வி உங்களுக்குள் தீயாய் எரிந்தால் இது உங்களுக்கு அற்புதமாக பதிலளிக்கும்." என்றார் சத்குரு.

7:51

அனைவரும் பசியுடன் இருப்பார்கள் என்று சொல்லி விடைப்பெற்றிட சத்குரு தயாராகிட, ஈஷா இசைக்குழு "கனலே கனலே" பாடலை இசைத்தது.