கேள்விகள்தான் மனிதனை சிந்திக்கச் செய்யும் கருவிகளாகின்றன. கேள்விகள் கேட்பது நல்லது. அதிலும், ஞானியிடம் கேட்கப்படும்போது அந்தக் கேள்விகள் சிந்திக்க வைப்பதைத் தாண்டி, நல்ல தெளிவையும் தருகிறது. சத்குருவிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் இங்கே...!

Question: தீர்க்க தரிசனம் சாத்தியமான ஒன்றா? அப்படி என்றால் உலகில் நடப்பவை எல்லாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா?

சத்குரு:

மாமர விதை ஒன்றைப் பார்க்கும்போது அது மாமரமாக வளரும் என்று சொல்லி விட முடியும். இதற்கென்று பெரிதாக தீர்க்க தரிசனம் எதுவும் தேவையில்லை. ஆனால் அந்த மாமரம் முழு வளர்ச்சியைப் பெறுவது நடைமுறை விஷயங்களைச் சார்ந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அந்த விதை முளைத்து செடியாகும் வேளையில் கால்நடைகள் ஏதாவது அதனை சாப்பிட்டுவிடக் கூடும். யாராவது மிதித்து அழித்து விடக்கூடும். அல்லது போதிய வளர்ச்சி இல்லாமல் மிகவும் பலவீனமானதாக வளரக்கூடும். ஒரு விதைக்குள்ளேயே எதிர் காலத்தில் உருவாகப் போகிற விருட்சம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கையின் சூழ்நிலைகளுக்கேற்ப அந்த வளர்ச்சி முழுமையாகவோ, அரைகுறையாகவோ நிகழ்ந்தேறுகிறது. அதேபோல ஒரு மனிதனுக்குள் இருக்கக்கூடிய வளர்ச்சிக்கான சாத்தியங்களை கணித்துச் சொல்ல முடியும். அவற்றை நோக்கி முழுமையாக வளர்வது அந்த மனிதனின் ஆற்றலையும், புறச்சூழ்நிலைகளையும் பொறுத்திருக்கிறது.

அதே நேரம் மாவிதைக்கும், மனிதனுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. மாவிதை தன்னுடைய வளர்ச்சிக்கென்று தானாக எதையும் செய்து கொள்ள முடியாது. ஆனால் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு வளர்ச்சிக்கான சாத்தியங்களை கொண்டிருக்கிறானோ அந்த அளவு அவற்றை மேம்படுத்துவதற்காகவும் தன்னுடைய உச்சபட்ச வளர்ச்சியை தொடுவதற்காகவும் அவனால் முயற்சி எடுக்க முடியும். எனவே உங்கள் எதிர்காலத்தை யாராவது கணித்துச் சொல்ல வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். உங்களுக்கிருக்கிற சக்தியின் உச்சம் தொடுவதற்கு வேண்டிய அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.

Question: மக்கள் உங்களை ‘குரு’ என்றும், தன்னை உணர்ந்தவர் என்றும் அழைக்கிறார்கள். ‘தன்னை உணர்ந்தவர்’ என்றால் என்ன பொருள்?

சத்குரு:

நீங்கள் பிறக்கும்போது இவ்வளவு சிறியதாகத்தான் இருந்தீர்கள், இல்லையா? தற்போது இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறீர்கள். இந்த வளர்ச்சி வெளியில் இருந்து நிகழ்த்தப்படவில்லை. உள்ளிருந்தே நிகழ்ந்திருக்கிறது. ஒருவேளை இதற்குத் தேவையான உட்பொருள்களை நீங்கள் வெளியிலிருந்து உணவு என்று பெயரில் தந்திருக்கலாம். ஆனால் இதை உருவாக்கியவர் உள்ளேதான் இருக்கிறார். இதை இயக்குபவர் உள்ளிருந்துதான் இயக்கியிருக்கிறார் அல்லது படைப்பின் மூலமானது உங்களுக்கு உள்ளேதான் இருக்கிறது. படைப்பிற்கான விதை உங்களுக்குள்ளேதான் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் படைப்பின் ஒருதுளியாக இல்லாமல், படைப்பின் மூலமாக உணரத் தொடங்கிவிட்டால் உங்களை தன்னை உணர்ந்தவர் என்று சொல்லலாம். நீங்கள் படைப்பின் ஒரு துளியாக இருந்தாலும், படைப்பின் மூலமானது தொடர்ந்து உங்களுக்குள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. படைப்பின் மூலத்தை உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நீங்கள் உணரத் தொடங்கிவிட்டால் அப்போது அத்தகைய மனிதர்தான் தன்னை உணர்ந்தவர் எனப்படுகிறார்.

Question: எதை நினைக்கக்கூடாது என்று நினைக்கிறேனோ அது என் மனசை முழுக்க ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்த நினைப்புக்கு எதிரான நினைப்பும் என் மனதிலேயே உதிக்கிறது. இரண்டு நினைப்புகளுக்கும் இடையே மனக்கலக்கத்தில் சண்டை நடப்பதுபோல் உள்ளது. இதற்குத் தீர்வு என்ன?

சத்குரு:

உங்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று தெரியவில்லை. அதனால், ஒன்றை நினைக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டு அதையே நினைக்கிறீர்கள். இவையெல்லாம் வேண்டாம், இவையெல்லாம் கூடாது என்று யோசிக்கிறபோதே உங்கள் மனதில் சந்தேகம் எழுகிறது. உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவோ, கையாளவோ தெரியாதபோது விரும்பியதை எப்படி எட்டப் போகிறீர்கள்?

முதலில் உங்களுக்கு வேண்டியது என்னவென்று முடிவெடுங்கள். ஒன்றை நினைக்கக்கூடாது என்று எதிர்மறையாக உங்கள் சிந்தனையைத் தொடங்காதீர்கள். உங்கள் எண்ணத்தின் சக்தியை மற்றவர்களை பலவீனப்படுத்தினால் அந்த சூழலைக் கையாள முடியும். ஆனால் நீங்களே அதனை பலவீனப்படுத்துவது என்பது மிகவும் மோசமான விஷயம். உங்கள் எண்ணங்களின் அதிர்வுகள் வெறும் நம்பிக்கை சார்ந்ததல்ல. அவற்றுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரமும் உண்டு.

எனவே உங்களுக்கு என்ன வேணடுமென்று முதலில் தீர்மானம் செய்துகொண்டு அதை நோக்கி நடக்கத் தொடங்குங்கள். 'இது வேண்டாம்', 'இது கூடாது' என்ற எதிர்மறையான பட்டியலை உருவாக்கிக் கொண்டு உங்களுடன் நீங்களே போராடாதீர்கள்.