Question: எங்கள் மதத்தில் பாவங்கள் செய்தவன் நரகத்துக்குச் செல்வான் என்றும், கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவான் என்றும் எங்கள் மதத் தலைவர்கள் சொல்கிறார்கள். இங்கே சந்தோஷங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு, பிறகு சொர்க்கத்திற்குப் போவதா, அல்லது இங்கே ஜாலியாக எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு, பிறகு நரகத்திற்குப் போவதா என்று குழப்பமாக இருக்கிறது.

சத்குரு:

நரகம் என்று ஒன்று இருக்கிறது. அங்கே நீ எண்ணெய் கொப்பரையில் வதக்கப்படுவாய்... அணையாத நெருப்பில் எரிக்கப்படுவாய் என்றெல்லாம் சொல்பவர்களுக்குத்தான் எத்தனை அரக்கத்தனமான மனது.

உங்களிடம் மனிதநேயம் முழுவீச்சில் இயங்கினால், சொர்க்கம், நரகம் பற்றி பயமுறுத்தி, ஒழுக்கங்களைக் கற்பித்தால்தான் உங்களைச் சரியான பாதையில் செலுத்தமுடியும் என்பது இல்லை.

அடிப்படை மனிதத்தன்மைகூட இல்லாமல், இப்படிப்பட்ட கொடூரமான எண்ணங்கள் கொண்டதற்காக அவர்களை அல்லவா அப்படிப்பட்ட நெருப்பில் இட்டு பொசுக்க வேண்டும்? வன்மையான மிருகங்கள்கூட ஒரே அடியில் தாக்கிக் கொல்லப் பார்க்குமே அன்றி, சதா எரியும் நெருப்பில் இட்டுச் சித்திரவதை செய்து வேடிக்கை பார்க்காது. இப்படிப்பட்ட வக்கிரமான மனம் கொண்டவர்கள், எப்படியோ மதத் தலைவர்களாக இயங்க ஆரம்பித்துவிட்டதுதான் துரதிருஷ்டம்.

ஒரு குள்ளநரிக்கு வயதாகிவிட்டது. ஒரு முயலைக்கூடப் பிடிக்க முடியவில்லை. அந்த நரி எலிகள் நிறைந்த ஒரு வளைக்கு அருகில் போய் முன்னங்கால்களைத் தூக்கியபடி, இரண்டு கால்களில் நின்றுகொண்டது. முகத்தை வான் நோக்கித் திருப்பி, வாயைப் பெரிதாகத் திறந்து வைத்துக்கொண்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முதலில் பயந்த எலிகள், நரி வெகுநேரம் அசையாமல் அப்படியே நிற்பது கண்டு தைரியம் கொண்டன. எலித் தலைவர், 'எதற்காக இரண்டு கால்களில் நிற்கிறாய்?' என்று கேட்டது.

'நான் சித்தனாகிவிட்டேன். தவம் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். உயிர்களைக் கொன்று புசிப்பதை விட்டுவிட்டேன். வெறும் காற்றை மட்டுமே உணவாகக்கொள்கிறேன். அதற்காகவே, வாயை திறந்து வைத்திருக்கிறேன்' என்று பதில் வந்தது.

'எதற்காக அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்கிறாய்?'

'நான் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன். வேறு எங்கும் பார்க்கமாட்டேன்'.

எலிகள் சமாதானமாகின. வளைக்குள் திரும்பவேண்டிய நேரம் வந்தபோது, ஒவ்வொன்றாக நரியின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுப் போயின. நரி காத்திருந்து, கடைசியாகச் சென்ற நான்கைந்து எலிகளைப் பிடித்து விழுங்கிவிட்டு, மீண்டும் பழைய தவக்கோலத்தில் நின்றது.

இது தெரியாமல் எலிகள் நரியைத் தினமும் பக்தியுடன் வணங்கிப் போயின. காற்றை மட்டுமே சாப்பிடுவதாகச் சொன்ன நரி, நாளாக நாளாக பருமனாகிக்கொண்டே போனது. எலிகளின் கூட்டம் குறைந்துகொண்டே வந்தது.

இப்படித்தான் மதங்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு சிலர் தவமாய் நின்றுகொண்டு இருக்கிறார்கள். ஆனால், பிடித்து விழுங்குவதற்கு வாயைத் திறந்து வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் போதனைகளால், நிற்பது பாவமோ, உட்கார்வது பாவமோ என்று ஒவ்வொன்றைப் பற்றியும் அச்சம் கொண்டு, குற்றவுணர்வால் தவிப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். உண்மையில், அச்சமூட்டி யாரையும் நல்லவர்களாக்கிவிட முடியாது.ஒன்றைத் தவிர்க்கப் பார்க்கும்போது, அதுபற்றிய கவனம் அதிகமாகி, அதில் இருந்து விடுபட முடியாமல் சிக்கிப்போகிறவர்களே அதிகம்.

கவனித்துப் பாருங்கள். பாவங்கள் பற்றிப் பேசும் சமூகத்தில்தான் ஒழுங்கீனம் தலைவிரித்து ஆடுகிறது. செய்ய நினைப்பதைச் செய்துவிட்டு கதறி அழுதுகொண்டு இருப்பார்கள்... அவ்வளவுதான்!

உங்கள் மதம் அமைத்துக்கொடுத்த நம்பிக்கைகளின் பேரில் கேள்வி கேட்காமல் நீங்கள் செயல்படும்போது, உங்களை உணர்ச்சிவசப்பட வைப்பது சுலபமாகிவிடுகிறது. உங்கள் கடவுளின் பெயரைச் சொல்லி வன்முறை, தீவிரவாதம் என்று எதில் வேண்டுமானாலும், உங்களைத் திசைதிருப்ப முடிகிறது.

எந்தச் செயலையும், ஆழ்ந்த விழிப்புணர்வோடு செய்கையில்தான் அது புனிதமாக முடியும். இப்போது நீங்கள் இருக்கும் இடம் பாதையின் ஆரம்பமாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் போய்ச் சேரவேண்டிய இடத்தை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் போதுமானதாக இருக்கலாம். ஆனால் எங்கு நிற்கிறோம் என்பதே தெரியாமல், யாரோ சொன்னதற்காக நேரெதிர் திசையில் பயணம் செய்ய ஆரம்பித்தால், எப்போது, எங்கே போய்ச் சேர்வீர்கள்?

வாழ்க்கையின் மூலத்தைத் தொடுவது என்பது இன்னொரு பரிணாமத்திற்குள் நுழைவது. அங்கு உங்களை அழைத்துச் செல்வதே உங்கள் மதத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கு மதம் என்பது புத்திசாலித்தனத்தின் உச்சகட்டமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் அடிமட்டத்தில் இருக்கும் சிலர்தான் மதங்களின் பாதுகாவலர்களாகத் தங்களை அறிவித்துக் கொள்கிறார்கள்.

உங்களிடம் மனிதநேயம் முழுவீச்சில் இயங்கினால், சொர்க்கம், நரகம் பற்றி பயமுறுத்தி, ஒழுக்கங்களைக் கற்பித்தால்தான் உங்களைச் சரியான பாதையில் செலுத்தமுடியும் என்பது இல்லை. யாரோ சொல்லும் போதனைகளின் மீது நம்பிக்கைகளின் அடிப்படையில், ஆன்மீகம் அமைவது இல்லை. அது நாடுதல், தேடுதல் என்று இன்னொரு கட்ட மனநிலையில் நிகழ்வது. எந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல், எதையும் அனுபவரீதியாகப் பரிசீலனை செய்யுங்கள்.