'கேள்விகள் கேட்பது ஈஸி, பதில் சொல்வதுதான் கஷ்டம்!' என வேடிக்கையாக சொல்வதுண்டு! நமக்கு கிடைக்கும் பதில், சொல்பவர்கள் யார் என்பதைப் பொறுத்தே தெளிவாகவும், ஆழம் நிறைந்ததாகவும் அமையும். இங்கே சத்குரு 2 கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். பதில் எப்படி என்பதை நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள்!

Question: சத்குரு, உலகத்தில் ஏமாற்றுபவர்கள், பொய் சொல்கிறவர்கள், தப்பு செய்பவர்கள் எல்லாரும் நன்றாகத்தானே இருக்கிறார்கள். ஆனால் நேர்மையாக இருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இயற்கையில் ஏன் இந்த அநீதி நடக்கிறது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

நேற்று நீங்கள் காட்டில் இருந்தீர்கள், மிகவும் நல்லபடியாக வாழ்ந்தீர்கள். இன்று பெரிய நகரத்திற்கு வாழ வந்திருக்கிறீர்கள். நேற்று காட்டில் வாழ்ந்தது போலவே இன்று நகரத்திலும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? நமக்கு பாதிப்பு வந்து விடுமா, இல்லையா? நிச்சயமாக வரும். எப்போதும் சூழ்நிலை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். சூழ்நிலை புரியாமல் நடந்து பாதிப்பு தேடிக்கொள்ளும் போது முட்டாளாகத்தான் தெரிவீர்கள். நீங்கள் மிகவும் நல்லவர்தான், ஆனால் முட்டாளாக வாழ்கிறீர்கள். அப்படி வாழும்போது பாதிப்பு வரத்தானே செய்யும்.

யாரோ மற்றவர்களை ஏமாற்றி நன்றாக வாழ்வதாக நினைத்தீர்கள், ஆனால் அவர்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் எப்படி சொல்லமுடியும்? வசதியாக வாழ்வதாலேயே ஆனந்தம் வந்துவிடுமா? அவர் தூக்கம் வராமல் கூட அவதிப்படலாம். நமக்கு ஒன்றும் அவரைப் பற்றி முழுமையாகத் தெரியாது. ஆனால் அப்படி ஏமாற்றுபவர்களுக்கு தேவையான உதவி இந்த சமூகத்தில் கிடைக்க முடியாதபடி நாம் செய்ய வேண்டும்தானே? ஏமாற்றுகிறார் என்று தெரிந்தே அவருக்கு உதவினால், அவருக்கு சக்தி கிடைக்கும்படி செய்தால், அவர் ஏமாற்றிக் கொண்டுதானே இருப்பார்?

அது வீடாக இருந்தாலும் சரி, ஊராக இருந்தாலும், நாடாக இருந்தாலும் சரி, ஏமாற்றும் ஆளுக்கு நாம் சக்தி கொடுக்கக்கூடாது. இல்லையென்றால் அவர் செய்வதே சரி என்று ஆகிவிடும். இப்போது நமது கலாச்சாரத்தில் அப்படி ஆகிக் கொண்டு வருகிறது. திருடுவது சரிதான் என்பது போல கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. இப்போதே நாம் தடுக்கவில்லை என்றால் வெளியே நடக்கும் ஊழல் வீட்டிற்கு உள்ளேயும் வந்துவிடும், இல்லையா?

Question: சத்குரு, நான் எப்பொழுதும் எந்தக் காரியத்திலும் என் சுயநலத்தைத்தான் பார்க்கிறேன். அடுத்தவர் மீது அன்பு செலுத்துவது எப்பொழுதும் முடியாத காரியமாக இருக்கிறது. இது தப்பா?

சத்குரு:

நீங்கள் அடுத்தவர் மேலெல்லாம் அன்பு செலுத்த வேண்டாம். உங்களுக்கேன் இந்த பிரச்சனை? அடுத்தவர் மீது அன்பு செலுத்தப் போக வேண்டாம். அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடமெல்லாம் அன்பு செலுத்தப் போக வேண்டாம். நீங்கள் வெறுமனே அன்பாக இருங்கள். அது போதும். உங்களுடைய உள்ளத்தில் அன்பாக இருங்கள். போதும். அவர் மேல் இவர் மேல் செலுத்த வேண்டாம். (அனைவரின் கரவொலி) நீங்கள் சுயநலமாகவே இருங்கள். உங்களுக்கு நான் முதலிலிருந்து சுயநலம்தானே கற்றுக் கொடுத்தேன். (அனைவரின் கரவொலி) எதையாவது விட்டு விடுங்கள் என்று நான் கூறினேனா? 'அத்தனைக்கும் ஆசைப்படு' என்று தானே கூறினேன். அப்படித்தான் கூறினேன். சுயநலம்தான் நல்லது.

ஆனால் சுயநலத்தில் எதற்குக் கஞ்சத்தனம்? நான் ஆனந்தமாக இருக்க வேண்டும், இந்த உலகமும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று நினையுங்களேன். எதற்கு கஞ்சத்தனம்? எனவே சுயநலமாக இருக்கலாம். ஆனால் அவர் மீதும், இவர் மீதும் அன்பு செலுத்துவதில் என்ன இருக்கிறது? உங்கள் உணர்வே அன்பு நிலையாக இருக்கட்டும், அவ்வளவுதான். நீங்கள் அன்பாக இருந்தால் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. சுயநலம்தானே இது? ஆனந்தம், அன்பு, அமைதி, ஆன்மீகம் எல்லாமே மிகவும் சுயநலம்தான். ஆனால் இந்த சுயநலத்தில் கஞ்சத்தனம் வேண்டாம். இதற்கென்று பணமா செலவிட வேண்டியுள்ளது? வீதியில் நடந்து சென்றாலும் அன்பாக இருப்பது, வீட்டில் இருந்தாலும் அன்பாக இருப்பது, தொழில் நிமித்தம் வெளியில் சென்றாலும் அன்புணர்வில் இருப்பது, இப்படி இருக்க முடியாதா? யார் மீதும் ஒன்றும் செலுத்த வேண்டாம். நீங்கள் வெறுமனே அன்பாக இருங்கள், அது போதும்.