தியானம் என்றாலே, முனிவர் ஒருவர் கண்மூடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தோற்றமே பெரும்பாலும் நினைவிலாடும். தியானம் என்றால் மரத்தடியில்தானா? தாவரங்கள் தியானத்திற்கு துணை செய்யுமா? சத்குருவிடம் கேட்போம்...

சத்குரு:

உங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் உணர்ந்து கொள்ளும் தன்மையில் இருப்பவை, தாவரங்கள். குறிப்பாக, ஆலமரம் போன்ற வகைகளைச் சார்ந்தவை நுண்ணுணர்வு கொண்டவை. பாரதத்தில் அவை எப்போதும் தியானத்துக்குரிய இடங்களாய் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏனெனில், அந்த மரங்களின் அடியில் நீங்கள் ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டால், அவையே அதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி தியான மண்டபம் போல் திகழ்கின்றன.

ஒருவர் உள்முகமாக உணர்வாரேயானால் உள்ளே இருப்பதும் வெளியே இருப்பதும் வேறல்ல என்பதை உணர்வார்.

நீங்கள் உரியசக்தி தன்மையை ஏற்படுத்தினால் தாவரங்கள் அவற்றை ஏற்கும் தன்மையில் இருக்கின்றன. தியானலிங்க உருவாக்கத்தின்போது குறிப்பிட்ட வகை தாவரங்கள் அந்தப் பணிக்கு பெரும் ஒத்திசைவோடு விளங்கியதைக் கண்டு வியந்தேன். உண்மையிலேயே அது மிகவும் மகத்தான விஷயம். நிறைய மரங்கள் இருக்கும் இடத்தில் நிறைய தியானமும் நிகழ்ந்தால், அங்கு தியானத் தன்மையை பாதுகாத்து வைப்பது மிகவும் எளிது. ஏனெனில், செடிகளும் மரங்களும் அந்தத் தன்மையை மிக நன்றாக தக்க வைத்துக் கொள்கின்றன. அதனால்தான், இன்றளவும் பல மரங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாய் கருதப்படுகின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒருமுறை கௌதம புத்தர் கடந்து போனபோது உரிய பருவ காலம் இல்லாதபோதும் சில மரங்கள் பூத்தன என்றொரு கதை உண்டு. இது கவித்துவமான வர்ணனை மட்டுமல்ல. இப்படி நிகழ்ந்திருக்க சாத்தியங்கள் உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிலகிரிரங்கா மலையில் மிகப்பெரிய செண்பக மரம் ஒன்று உண்டு. அது பல ஆண்டுகளாக அங்கே இருப்பதாகவும் அகத்திய முனிவரால் நடப்பட்டது என்றும் சொல்வார்கள்.

பொதுவாக செண்பக மரங்கள் சில நூறாண்டுகளுக்கு வாழும். ஆனால், இந்த மரம் கால எல்லைகளைக் கடந்ததாய் விளங்குகிறது. இவ்வளவு பிரம்மாண்டமான செண்பக மரத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். அதன் முடிச்சுகளும் பெருந்தோற்றமும் பார்ப்பவர்களை மலைக்கச் செய்யும்.

நமது பாரம்பரியத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே மரங்களைப் பாதுகாப்பதும் அவற்றை உயிர்த்தன்மை மற்றும் ஞானத்தின் வடிவங்களாகப் போற்றுவதும் இருந்து வந்தது. தற்போது, அந்த மரபுகள் பெரும்பாலும் வழக்கொழிந்து போய்விட்டன. ஆனால், மரங்களை மனிதர்கள் மதித்து அவற்றின் வழியே பலவற்றையும் அறிந்தது நம் பாரம்பரியத்தின் அங்கமாக இருந்தது.

ஐரோப்பாவில் ஒரு பொருளாதார மாநாட்டில் நான் பங்கு பெற்றபோது, புகழ்பெற்ற பேராசிரியர் ஒருவர் என்னிடம் வந்து “நீங்கள்தானே அதிசயிக்கத்தக்க அளவில் மரங்கள் நடுபவர்” என்று கேட்டார். “நான் மரம்நடுபவர் இல்லை” என்றேன். “நீங்கள்தானே கோடிக்கணக்கான மரங்களை நட்டு வருகிறீர்கள்” என்று கேட்டார். “ஆமாம்! ஆனால், என் வேலை மரங்கள் நடுவதில்லை,” என்றேன்.

“அப்படியானால் என்ன செய்கிறீர்கள்,” என்று கேட்டார்.

“மனிதர்களை மலரச் செய்வதே என் வேலை,” என்றேன். மனிதர்கள் உயர் நிலையிலான புரிதலில் மலர்ந்தால், நாம் வாழும் சூழலுடன் விழிப்புணர்வுடன் கூடிய ஈடுபாடு வளரும். அதன் விளைவாக, இயற்கையும் நாமும் வேறல்ல என்ற புரிதல் மலரும். நீங்கள் வெளியில் விடும் சுவாசத்தை மரங்கள் சுவாசிக்கின்றன. மரங்கள் வெளியில் விடும் சுவாசத்தை நீங்கள் சுவாசிக்கிறீர்கள். உங்கள் நுரையீரலின் ஒரு பகுதிதான் உங்கள் உடலில் இருக்கிறது. அதன் இன்னொரு பகுதி மரத்தில் இருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஏதோ நீங்கள் செய்யும் உதவி என எண்ணுகிறீர்கள். அது உதவியல்ல. உங்கள் வாழ்க்கை. உங்கள் ஐம்புலன்களின் எல்லைக்குள்ளேயே நீங்கள் கட்டுண்டு கிடந்தால், உங்களைத் தாண்டி இருக்கும் எதுவும் உயிரில்லை என்னும் எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், ஆன்மீகம் சார்ந்த விழிப்புணர்வு உங்களில் வளர்ந்தால், எல்லாமே உயிர்தான் என்னும் புரிதல் ஏற்படுகிறது.

இன்று சுற்றுச்சூழல் நலன் குறித்து பேசுபவர்களில் பலர், பிற உயிர்கள் மீதான அன்பில் பேசுவதைவிட இயற்கையை பராமரிக்காவிட்டால் என் வாழ்வுக்கும் என் குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் ஆபத்து என்னும் எண்ணத்தில் பேச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமான ஒன்று.

நம் உயிர்கள் தனித்தனியானவை அல்ல. ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான். புழுக்கள் இன்று எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றன என்பதைப் பொறுத்தே நம்முடைய நாளைய ஆரோக்கியம் இருக்கிறது. அனைத்தையும் உள்நிலையில் ஒன்றாக உணர்வதே ஆன்மீகம். ஒருவர் உள்முகமாக உணர்வாரேயானால் உள்ளே இருப்பதும் வெளியே இருப்பதும் வேறல்ல என்பதை உணர்வார். அந்த அனுபவம் காரணமாகவே அவரால் அனைத்து உயிர்கள் மீதும் பரிவும் அக்கறையும் கொள்ள இயலும்.