வாழ்வின் பல தருணங்களில் நாம் தவறு செய்திருந்தாலும், அவற்றை ஒப்புக்கொண்ட தருணங்கள் வெகு சொர்ப்பமே! நம் தவற்றை ஒப்புக்கொண்டால் என்னாகும்? இதில் விளக்கம் தருகிறார் சத்குரு...

சத்குரு:

மனிதராகப் பிறந்தவர் எவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால், தவறு என்று உணர்ந்த பின், அந்தத் தவறை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா என்பதுதான், உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தும்.

செய்தது தவறா, தவறில்லையா என்பது கூட பிரச்சனை அல்ல... அதை ஒப்புக் கொள்வதாவது என்கிற அகங்கார நினைப்புதான் பிரச்சனை!

தவறை உணர்ந்த பின்னும், வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல், அதை நியாயப் படுத்திக் கொண்டே இருப்பதுதான் மாபெரும் தவறு!

குழந்தையாக இருந்தபோது எவ்வளவு வளைந்து கொடுத்தீர்கள்? உங்களை அடித்தவரிடமே கூட எந்த வன்மமும் இல்லாமல் மறுபடி மறுபடி செல்வீர்களே... அப்போது அந்தச் சந்தோஷம் எப்படி இருந்தது.

வளர வளர, உடல் அளவிலும், மனதளவிலும் இறுகி விட்டீர்கள்.

சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.

அந்த அடையாளத்தில் கௌரவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில், உங்கள் நேர்மையையே பலி கொடுக்கத் தயாராகிவிட்டீர்கள். அதனால்தான், தவறுகளை ஏற்றுக் கொள்ளும் அடிப்படை குணத்தைக்கூட இழந்து விட்டீர்கள்!

"மன்னித்துவிடு! தெரியாமல் நடந்துவிட்டது! அறியாமல் செய்துவிட்டேன்! அடுத்த தடவை திருத்திக் கொள்கிறேன்!" என்று பணிந்து சொல்வதால், என்ன குறைந்து விடுவீர்களா?

தவற்றை உணர்ந்த பின்னும், வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல், அதை நியாயப் படுத்திக் கொண்டே இருப்பதுதான் மாபெரும் தவறு!

ஒருமுறை சங்கரன்பிள்ளை, இன்னொருவர் தோட்டத்தில் கனிந்த பழங்கள் தொங்குவதைக் கண்டார். ஒரு கோணிப்பை எடுத்து வந்தார். வேலி தாண்டிக் குதித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மரத்திலிருந்து பழங்களைப் பறித்தார். கோணியில் நிரப்பித் தோளில் போட்டுக் கொண்டார். வேலி தாண்டி வெளியேறப் பார்த்தபோது, தோட்டத்தின் சொந்தக்காரன் கையில் சிக்கினார்.

"யார் அனுமதியுடன் இவற்றைப் பறித்தாய்?"

"நான் பறிக்கவில்லையே! பெரும் காற்று வீசியது. காற்றில் இவை கீழே உதிர்ந்தன!" என்றார் சங்கரன்பிள்ளை.

"அப்படியானால், இந்தக் கோணியை எதற்காக எடுத்து வந்தாய்?"

"ஓ... இதுவா? இதுவும் காற்றில் எங்கிருந்தோ பறந்து வந்தது!"

"காற்றிலேயே பழங்கள் உதிர்ந்திருக்கட்டும்... கோணியும் பறந்து வந்திருக்கட்டும்! பழங்களைக் கோணியில் நிரப்பியது யார்?" என்று சொந்தக்காரன் உறுமினான்.

சங்கரன்பிள்ளை கலங்காமல், அப்பாவிபோல் முகத்தை வைத்துக் கொண்டு, "அதுதான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.

தவறு செய்பவர்கள் பலரும் சங்கரன்பிள்ளை போல்தான்... கையும் களவுமாகப் பிடிபட்டாலும், தவற்றை ஒப்புக் கொள்ளாமல் அதை நியாயப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவார்கள்.

இந்த மனப்பான்மை மிகவும் அபாயகரமானது!

நண்பர்களிடம், சக ஊழியர்களிடம், மேலதிகாரியிடம், உங்களுக்குக் கீழ் பணிபுரிபவரிடம், முன்பின் அறிமுகம் இல்லாதவரிடம் என்று பாகுபாடு பார்க்காதீர்கள்.

என்ன தவறு செய்தாலும், அதை நேர்மையாக ஒப்புக் கொள்ளுங்கள். அது உங்களைப் பற்றிய நன்மதிப்பைத்தான் கூட்டும்.

இது விட்டுக் கொடுப்பதோ, தோற்றுப் போவதோ அல்ல! உங்கள் மனம் பக்குவப்பட்டிருக்கிறது என்பதன் அடையாளம்!

தவறு என்றே உணராமல், சிலர் வார்த்தைகளாலும், செயல்களாலும் அடுத்தவரைக் காயப்படுத்தி விடுவார்கள். அதைச் சுட்டிக் காட்டினால், 'உனக்கு வேதனை ஏற்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல' என்பார்கள்.

பழைய ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது.

பஸ்ஸில் ஒருவன், தன் பக்கத்தில் நின்றவனின் காலை அழுத்தமாக மிதித்துவிட்டான். பின்பு, 'கவனிக்கலே!' என்று சொல்லி, காலை எடுத்துக் கொண்டான்.

மிதிபட்டவன் குனிந்து தன் காலைப் பார்த்து, "ஏ.. காலே! அவர்தான் காரணத்தைச் சொல்லிவிட்டாரே! இன்னும் ஏன் வலிக்கிறாய்?" என்று அதட்டினான்.

வேண்டுமென்றே மிதித்தாலும், தெரியாமல் மிதித்தாலும் வலி, வலிதானே?

மன்னிப்புக் கேட்பதை விடுத்து "வேண்டுமென்றா மிதித்தேன்?" என்று விவாதிப்பது எப்படி நியாயமாகும்?

கவனமற்று இருப்பதே ஒரு தவறு என்று புரிந்து கொள்ள மறுக்கலாமா?

கவனிக்காதவரை, அதே வேதனையை இன்னும் பல நூறு நபர்களுக்குக் கொடுக்க நேரலாம் அல்லவா?

கவனமில்லாமல் ஒருமுறை தவறு செய்யலாம். ஆனால், தவறு பற்றிய கவனமில்லாமல்தான் தொடர்ந்து இயங்குவேன் என்பது வளர்ச்சிக்கு எதிரானது.

சிலர் உங்கள் தவற்றைப் பூதக் கண்ணாடியால் பார்க்கக்கூடும். பார்த்துவிட்டுப் போகட்டுமே!

நீங்கள் மன்னிப்புக் கேட்டால், யுத்தம் அங்கேயே முடிந்து, குற்றம் சுமத்தியவர் அல்லவா குற்ற உணர்வைச் சுமப்பார்?

புரிந்துக் கொள்ளுங்கள்... இது விட்டுக் கொடுப்பதோ, தோற்றுப் போவதோ அல்ல! உங்கள் மனம் பக்குவப்பட்டிருக்கிறது என்பதன் அடையாளம்!

வியாபாரம் செய்தாலும், விளையாட்டில் ஈடுபட்டாலும் உங்கள் தவறுகளை ஏற்றுக் கொள்வதைப் பொறுத்துதான் வாழ்க்கையில் உங்கள் வெற்றி அமைகிறது.

தவற்றை ஒப்புக் கொள்ளாதவரை, மனதுக்குள் சிலுவைப்போல் குற்ற உணர்வைத் தேவையின்றிச் சுமக்க நேரிடும்.

தவறுகளை ஒப்புக் கொள்வது என்பது, எதிரிகளையும் நண்பர்களாக்கித் தரும் பலம். எதிர்த்து வீழ்த்த முடியாத பலம். வாழ்க்கையில் உங்களை அடுத்த உயரத்துக்கு அழைத்துச் செல்லும் பலம்!