ஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 7

ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள முறைப்படி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது. ஆயுதங்கள் நம்மைக் காக்கும் அதே வேளையில், தவறானவர்களின் கைகளில் இருக்கும்போது அது அழிவை உண்டாக்கிவிடுகிறது. துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வரும் இவ்வேளையில் இது பற்றி சத்குருவின் கருத்தினை அறிந்துகொள்ள விழைகிறார் நடிகர் சித்தார்த். இங்கே நாமும் அறிந்துகொள்ளலாம்!

சித்தார்த்: அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம் அச்சம் தருவதாக இருக்கிறது. நான் கூட இதைப்பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். நமது அரசாங்கம், இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை இப்படியே அதன் போக்கில் விட்டு விட்டால், எல்லோரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வார்கள். குழப்பமே விளைவாக இருக்கும். மக்கள் தங்களை, தங்கள் குடும்பத்தை காத்துக் கொள்ள ஆயுதங்கள் வைத்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? இந்த அடிப்படையில் இந்தியா போன்ற தேசம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

முற்றிலும் தேவையாக இருந்தால் ஒருவர் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம்.

சத்குரு: மார்க் ட்வைன் ஒரு முறை "துப்பாக்கியை நீங்கள் சட்டத்துக்கு புறம்பானதாக ஆக்கினால், சட்டத்துக்கு புறம்பானவர்கள் கையில் துப்பாக்கி இருக்கும்" என்று சொன்னார். இது இந்தியாவில் உண்மையாகி விட்டது இல்லையா? அதை வைத்திருப்பவர்கள் சரியான நோக்கத்தோடு இருப்பதில்லை. உங்கள் குடும்பத்தை ஒரு பத்து நபர்கள் தாக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். போலீசுக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் வரும் சமயத்துக்குள் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சித்தார்த்: போஸ்ட் மார்ட்டம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: சரிதான். டெல்லியில் அந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை, அவள் தந்தை, "என் பெண்ணிடம் அந்த சமயம் ஒரு துப்பாக்கி இருந்திருக்கலாம்" என்று நினைத்திருக்க மாட்டாரா சொல்லுங்கள்.

ஒரு தேசத்தின் மக்களை பாதுகாக்க சரியான வழிமுறைகள் இல்லாத பொழுது, இருக்கும் வழிமுறைகள் ஆற்றல் மிக்கதாக இல்லாத பொழுது, அதுவும் நகரின் மையப் பகுதியிலேயே உங்களை பாதுகாக்க இயலாத பொழுது, இயல்பாக மக்கள் தங்களை தாங்களே பாதுகாக்க முயல்வார்கள். அவரவர் உயிர் மீது அனைவருக்கும் உரிமை இருக்கிறது. குற்றவாளிகளிடம் துப்பாக்கி இருக்கிறது, குடிமக்களுக்கு தான் இல்லை. அதற்காக அவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க முடியாது குற்றவாளிகளிடம் இருந்து பறித்துக் கொள்ளவும் முடியாது.

எனவே துப்பாக்கி கலாச்சாரம்தான் வன்முறைக்கு அடிப்படை என்பது போல பேச வேண்டாம். தேசங்களே ஆயதங்களை வாங்கி குவிக்கின்றன. அது ஒரு தடுப்பு ஆற்றலாக இருக்கிறது. இந்தியாவில் பல பிரச்சனைகள் இருக்கிறது, நம் மக்களுக்கு சரியாக உணவு கூட கொடுக்க முடிவதில்லை. ஆனால் இந்த வருடம் பாதுகாப்பு செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 81 ஆயிரம் கோடி. ஆயுதங்கள் இல்லையென்றால் ஒருவர் நம் மீது ஏறி மிதித்து விடுவார்கள். துரதிர்ஷ்டவசமாக இதுதான் இன்றைக்கு நிஜம். அன்பாக, அணைத்து கொண்டு இணைந்து வாழும் விழிப்புணர்வு நடக்கவில்லையே.

தேசத்தின் தலைநகரில் உங்கள் மகளோ, மனைவியோ, தாயோ கற்பழிக்கப்படலாம், கொலை செய்யப் படலாம். இதுதான் இன்றைக்கு நிஜம். இது போன்ற சம்பவங்கள் தொடரும் பட்சத்தில், ஒவ்வொரு தகப்பனும் தன மகள் ஒரு கத்தியாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்.

சித்தார்த்: ஆத்திரம் விடுத்து அமைதியாக இருக்கும் ஒருவர் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளலாமா?

சத்குரு: உளவியல் ரீதியாக சமநிலையில் இருப்பவருக்கு மட்டுமே துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. ஆத்திரத்தில் இருப்பவர் சமநிலையாக இருக்க முடியும். அமைதியாக, விழிப்பாக இருப்பவர் மட்டுமே அதை சரியாக கையாள முடியும். முற்றிலும் தேவையாக இருந்தால் ஒருவர் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம். உடனே சத்குரு துப்பாக்கி வைத்துக் கொள்ள சொல்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டாம். நீங்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. சமூகத்தை பாதுகாக்க சிலர் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.


அடுத்த வாரம்...

இன்றைய கல்வியின் நிலை, அதை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டு செல்வது, இது குறித்த இருவரின் உரையாடல் அடுத்த வாரம்.

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...