Question: "வாழ்க்கையில் வெற்றிபெற, தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்கள் (Self Motivation Books) படிப்பது என் வழக்கம். 'என்னால் முடியும், என்னால் முடியும் என்று உனக்கு நீயே சொல்லிக்கொள். தன்னம்பிக்கை வளரும்' என்று அதில் ஒரு குறிப்பைப் படித்தேன். அதைப் பின்பற்றினேன். இப்போது, தனிமையில் இருக்கும்போது மட்டுமல்லாமல், பொது இடங்களிலும் என்னை அறியாமல் எனக்கு நானே உளறிக்கொண்டிருக்கிறேன். என் நண்பர்கள்கூடக் கேலி செய்கிறார்கள். வளர்ச்சிக்குப் பதிலாக நம்பிக்கையையும் இழந்துவிட்டேன். இதிலிருந்து விடுபடுவது எப்படி?"

சத்குரு:

பைத்தியம்தான் பிடிக்கும்

"மேற்கத்திய நாடுகளில் இந்தத் தன்னம்பிக்கைத் தத்துவம் அதிகமாகிவிட்டது. உங்களை நீங்களே நேசிக்க வேண்டும். உங்களுக்கு நீங்களே முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே கட்டிப்பிடித்துக் கொஞ்சிக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நீங்களே பேசி உற்சாகப் படுத்திக்கொள்ள வேண்டும்.

பைத்தியமாக நடந்துகொள்வது என்பது ஒரு கேளிக்கை இல்லை, பொழுதுபோக்கு இல்லை. மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு நோய்.

நீங்கள் என்பது ஒரு தனிமனிதன். உங்களையே சொல்பவராகவும், கேட்பவராகவும் நீங்கள் பிரிக்கப் பார்ப்பது எப்படி வேலை செய்யும்? அப்படிப் பிரிக்கப் பார்த்தால், கொஞ்சநாட்களுக்குப் பிறகு, அது மனபேதி ஆகி, பைத்தியம்தான் பிடிக்கும். சிலசமயம், பைத்தியம் பிடித்தவர்கள் மற்றவரைவிட வெறியோடு செயல்படுவார்கள். அந்த வெறி சில விஷயங்களைச் சாதித்துக் கொடுக்கும். அப்படி வெறிகொண்டு அடைவதைச் சாதனை என்று நினைத்துவிடாதீர்கள். அது ஒரு வேகத்தில் தற்செயலாக நடப்பது.

எதையாவது சாதிக்க வேண்டும் என்றால், அதற்கு வெறியை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கான திறமையைத்தான் உருவாக்க வேண்டும். திறமை இல்லாமல் வெறியை மட்டும் பயன்படுத்தினால், எப்போதாவது ஏதாவது ஒன்று தற்செயலாக நடக்கலாம். ஒவ்வொரு முறையும் அதே வெறியைப் பயன்படுத்தப் பார்த்தால், வாழ்க்கையே தடம்புரண்டுவிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சங்கரன்பிள்ளையுடன் பேசிய டம்ளர்

சங்கரன்பிள்ளைக்கு இதேபோன்ற பிரச்சினை இருந்தது. ஒருநாள் பாரில் தனியே அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தார்.

'உன் சட்டை மிக நன்றாக இருக்கிறது' என்று திடீரென ஒரு குரல் கேட்டது. அக்கம்பக்கம் பார்த்தால், யாரும் இல்லை. மது வழங்குபவன்கூடக் கண் அயர்ந்திருந்தான். 'உன்னைப்போல் நல்லவன் உலகில் இல்லை' என்று மறுபடியும் அந்தக் குரல் சொன்னது. சற்று இடைவெளி கொடுத்து, 'உனக்கு இணையான புத்திசாலி யாரும் இல்லை' என்றும் குரல் கேட்டது.

சங்கரன்பிள்ளை மிரண்டார். தள்ளாடிப்போய், மது வழங்குபவனை எழுப்பினார் 'என்னையும் உன்னையும் தவிர, இங்கே வேறுயாரும் இல்லை. ஒரு குரல் கேட்கிறதே, எங்கே இருந்துவருகிறது? என்றார். அவன் சங்கரன் பிள்ளையை வெறுப்புடன் பார்த்தான். அதுவா? ஒருவேளை இந்தக் காலி கண்ணாடி டம்ளர் பேசி இருக்கும். அதை மௌனமாக்க வேண்டுமென்றால், எப்போதும் நிரப்பியே வைத்திரு' என்றான். 'ஓ'வென்று தலையாட்டிவிட்டு சங்கரன்பிள்ளை தன் இடத்துக்கு வந்தார்.

அன்பும் இல்லாமல், திறமையும் இல்லாமல், நான் அப்படி ஆகவேண்டும், இப்படி ஆகவேண்டும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளத் துவங்கினால், புத்திதான் பிசகிப்போகும்.

இந்த நிலைமைக்குத்தான் வந்துவிடுவீர்கள். பைத்தியமாக நடந்துகொள்வது என்பது ஒரு கேளிக்கை இல்லை, பொழுதுபோக்கு இல்லை. மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு நோய்.

உடலில் நோய் வந்தால், உங்களைப் பார்ப்பவர்களுக்கு ஒரு பரிதாபமாவது பிறக்கும். மனநோய் வந்தால் உங்களுக்கு என்னவென்று யாருக்கும் சுலபமாகப் புரியாது. அது எப்போது வரும், எப்போது விலகி இருக்கும் என்பதும் புரியாது. உடன் இருப்பவர்கள்கூட உங்களுக்கு திமிரா, அகங்காரமா, இல்லை பைத்தியமா என்று புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பார்கள்.

கோபம், பொறாமை, காழ்ப்பு போன்று எத்தனையோ குணங்கள் உங்களைப் பல சமயம் மனநிலை தவறச் செய்திருக்கும். புத்தி சுவாதீனத்தில் இருப்பதற்கும், சுவாதீனம் இல்லாமல் போவதற்கும் இடையில் மிக மெல்லிய கோடுதான் இருக்கிறது.

சங்கரன்பிள்ளை வாங்கிய கசையடி

சங்கரன்பிள்ளை வேதாந்த வகுப்புகளுக்குச் சென்றார். 'நீ என்றோ, நான் என்றோ எதுவும் இல்லை. உனது என்றோ, எனது என்றோ எதுவும் இல்லை' என்று அங்கே சொல்லிக்கொடுக்கப்பட்டது. சங்கரன்பிள்ளையின் மண்டையில் இதுவே சுற்றிச் சுற்றி வந்தது. உணவு விடுதியில் வயிறாரச் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் வெளியேறப் பார்த்தார், பிடிபட்டார். 'ஐயா எனது என்பது உங்களுடையது, உங்களுடையது என்பது எனது. இதில் யாருக்கு யார் பணம் கொடுப்பது?' என்று என்னென்னவோ சொல்லிக்கொண்டே போனார். உணவு விடுதி நடத்துபவர் குழம்பிப்போய், அவரை நீதிமன்றத்துக்கு இழுத்துப் போனார்.

நீதிபதி எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் சங்கரன் பிள்ளை கேட்பதாக இல்லை. 'என்னிடம் எதற்காகப் பணம் கேட்கிறார்கள்? நான் என்பது, நீ என்பது, கொடுப்பது என்பது, பெறுவது என்பது எல்லாம் மாயை...' என்று நீதிபதியிடமும் சங்கரன்பிள்ளை அதேரீதியில் விளக்கம் கொடுத்தார். நீதிபதி பார்த்தார். 'இவனுக்குப் பத்து கசையடி கொடுங்கள். எப்படியும் இவனைப் பொறுத்தவரையில், எல்லாம் மாயை. அடிப்பவர், அடிக்கப்படுபவர் என்று எதுவும் இல்லை'. மூன்றாவது கசையடியிலேயே சங்கரன்பிள்ளையின் வேதாந்தம் முற்றிலுமாகப் பறந்துபோனது.

இப்படி ஓங்கி ஓர் அடி கொடுத்துச் சரிசெய்யக்கூடியதா, அல்லது கருணைகொண்டு அணுக வேண்டியதா, சிகிச்சை கொடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறதா என்பது புரியாமல், பைத்தியம் எவ்வளவு தூரம் முற்றியிருக்கிறது என்று விளங்காமல், அதை எப்படிக் குணப்படுத்துவது?

எப்படி வெற்றி காண்பது!

புத்தகங்களைப் படித்துவிட்டு, மனரீதியான சௌகரியங்களின் அடிப்படையில் நீங்கள் வாழ முற்பட்டால், வாழ்க்கை உங்களை முறித்துப் போட்டுவிடும். உங்களைக் கூண்டுக்குள் சிறைப்படுத்தக்கூடிய தேவையற்ற விஷயங்களை நீங்களே வரவழைத்துக் கொண்டவர்கள் ஆகிவிடுவீர்கள். இப்படிப்பட்ட போதனைகள் உங்களை ஏமாற்றத்தான் செய்யும். வாழ்க்கையின் அனுபவங்கள் வேறுவிதமான புத்தி புகட்டிவிடும்.

உண்மையில் 'தான்' என்பதற்கு எந்த ஊக்கமும் செயற்கையான உற்சாகமும் தேவை இல்லை. அது இயங்குவதற்குத் திறன்தான் தேவை.

அன்பும் இல்லாமல், திறமையும் இல்லாமல், நான் அப்படி ஆகவேண்டும், இப்படி ஆகவேண்டும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளத் துவங்கினால், புத்திதான் பிசகிப்போகும்.

உங்கள் பிரச்சினையில் இருந்து வெளிவர வேண்டும் என்றால், யோகக் கலாச்சாரத்தில் பலவிதமான கருவிகள் உள்ளன. அடிப்படையாக யோகப்பயிற்சி உங்களுக்கு உதவும். முக்கியமாக, தியானம் பண்ண வேண்டும். தியானம் என்பது மனிதனுக்குள் இருக்கும் பைத்தியத்தை விரட்டும் ஒரு கருவி. மனது பிய்த்துக்கொண்டு நடக்கும் மனபேதியை நிறுத்துவது.

வாழ்க்கையை அனுபவரீதியாகப் புரிந்துகொள்ளத்தான் யோகா. முழுமையான ஈடுபாடும், சுற்றியுள்ளதன்மீது ஆழ்ந்த அன்பும் இருந்தால், உங்கள் திறமையைத் தானாகவே முழுமையாகப் பயன்படுத்துவீர்கள். எந்தப் பாதிப்பும் இல்லாமல், சந்தோஷமாக, ஆனந்தமாக அதேசமயம், வெற்றிகரமாகவும் இருப்பீர்கள்!"