கேள்வி: சத்குரு, பெருந்துன்பத்தில் இருக்கும் ஒரு மனிதர் அதனால் உடைந்து போகலாம் அல்லது அச்சூழ்நிலையிலிருந்து கூடுதல் புத்திசாலித்தனத்துடன் வெளிவரலாம் என்று எங்களிடம் கூறியிருந்தீர்கள். வருத்தம் என்பது எப்படி வளர்ச்சிக்கான ஒரு வழியாக இருக்க முடியும் என்பதை விளக்க முடியுமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போடும் துயரங்களை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் குறிப்பிட்ட சாராருக்கு, உண்மையிலேயே அது நிகழும்போது, அவர்களது வாழ்வின் ஆதார சுருதிகளாக இருந்த அனைத்தும் பறிக்கப்பட்டு, ஆழமான சோகம் அவர்களுக்குள் தங்கிவிடுகிறது. இந்த சோகத்தைக் கையாள்வதற்கு அநேக வழிகள் உண்டு.

எந்த ஒரு உணர்ச்சியையும், தங்களது வாழ்வில் ஒரு ஆக்கப்பூர்வமான சக்தியாக ஒருவரால் உருமாற்ற முடியும். அது ஒரு எதிர்மறையான ஆற்றல் அல்ல. படைப்பில் எதிர்மறையானது என்று எதுவும் இல்லை.
சிலர் ஒரு மூலையிலேயே உட்கார்ந்துகொண்டு, மற்றவர்களுக்குத் துன்பம் உருவாக்கியவாறு தங்களையே பைத்தியமாக்கிக் கொள்கின்றனர். வேறு சிலர் இருக்கிறார்கள், அவர்கள் அதிக வருத்தம் உண்டாகும்போது, ஏதோ ஒரு வழியில் உபயோகம் நிறைந்த வேலையைச் செய்வார்கள். வழக்கமாக, தங்கள் வாழ்வில் மாபெரும் கர்ம யோகிகளாக இருப்பவர்கள் இந்த மாதிரி காயப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர்.

இதற்கொரு உதாரணம் கூறுகிறேன். மகாராஷ்ட்ராவில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக ஒருவர் இருந்தார். சாகாயத்திரி மலைகளுக்கு சற்று அப்பால் இருந்த ஒரு கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்திருந்தார். அதன்பிறகு ஏதோ ஒரு ஆட்கொல்லி நோய் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பலிகொண்டதில், முற்றிலுமாக தனித்து விடப்பட்டார். அந்த மனிதர் நொறுங்கிப் போய்விட்டார். ஏனெனில், அவரது ஒட்டுமொத்த வாழ்வும் அந்த மூன்று நபர்களைச் சுற்றியே அமைந்திருந்தது. அவர் புத்தி பேதலித்துப் போகும் நிலையில் இருந்தார். எதுவும் செய்யத் தோன்றாதவராக, சாகாயத்திரி மலைகளுக்குள் கால் போன போக்கில் நடந்து சென்று, உட்கார்ந்துவிட்டார். அவர் குழந்தையாக இருந்தபோது இந்த மலைகள் இருந்த விதத்தை நினைவு கூர்ந்தார். அப்போது அந்த மலைகள் பசுமையாக, மரங்கள் நிறைந்து இருப்பது வழக்கம். இப்போது மலைகளில் அவர் நடந்து கொண்டிருந்தபோது, அது தரிசாக உஷ்ணம் தகிக்க, தாங்க முடியாததாக இருந்தது. பல நாட்களுக்கு அவர் அங்கேயே அமர்ந்துகொண்டு கீழே விழுந்த பழம், கொட்டைகளை எடுத்துத் தின்றவாறு சுற்றி அலைந்து கொண்டிருந்தார். சிலகாலம் கழிந்தபிறகு இந்த மலைகள் தரிசாகிவிட்ட காரணத்தினால்தான், காலம் தன் வாழ்க்கையையும் தரிசாக்கிவிட்டது என்று முடிவு செய்தார். அது உண்மையா, இல்லையா என்பது முக்கியமல்ல. இதற்காக ஏதாவது செய்யவேண்டும் என்று உறுதிகொண்டார். அவர் அங்கே ஒரு துறவியைப்போல வாழ்ந்துகொண்டு, ஒற்றை மனிதராகவே, எங்கெல்லாம் மரங்களிலிருந்து விதைகள் விழுந்திருக்கின்றன என்று தேடி எடுத்து, எவருடைய துணையும் இல்லாமல், ஏறக்குறைய நான்கு இலட்சம் மரங்களை நட்டு, வளர்த்தெடுத்தார். இருபத்தைந்து வருடங்கள் அவர் அவைகளுக்காக உழைத்தார். இந்த ஒரு மனிதரால் சாகாயத்திரி மலைகளில் இன்றைக்கு நான்கு இலட்சம் மரங்கள் நிற்கின்றன. யாரும் அவருக்கு எந்த யோகாவும் கற்றுத்தரவில்லை என்றாலும், அவர் ஒரு யோகிதான்.

நீங்கள் வருத்தம் கொள்ளும்போது, எரிச்சலாகவும், கோபமாகவும், ஒட்டுமொத்த உலகமும் தவறாக இருப்பதாகவும் நினைத்தால், நீங்கள் ஒரு முட்டாள்தான்.

எந்த ஒரு உணர்ச்சியையும், தங்களது வாழ்வில் ஒரு ஆக்கப்பூர்வமான சக்தியாக ஒருவரால் உருமாற்ற முடியும். அது ஒரு எதிர்மறையான ஆற்றல் அல்ல. படைப்பில் எதிர்மறையானது என்று எதுவும் இல்லை. ஏதோ ஒன்று எதிர்மறை என்றும், மற்றொன்று நேர்மறை என்றும் நாம் நினைக்கலாம். ஆனால் எதிர்மின்னோட்டமும், நேர்மின்னோட்டமும் இணைவதால்தான் ஒரு விளக்கு ஒளி தருகிறது. எதிர்மறையானது தவிர்ப்பதற்கானதல்ல. அதுவும் நேர்மறை போல முக்கியமானது. உங்களுடைய துயரம் உங்களை முழுமையற்றவராக நினைவுபடுத்தினால், அது நல்லது. உங்கள் வளர்ச்சிக்கு அந்த துயரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் சோகம் எழும்போது, நீங்கள் இன்னும் அதிக கருணையடையவராக அதிக அக்கறையுள்ளவராக மற்றும் அதிக அன்பு கொள்பவராக மாறினால், உங்களிடம் சிறிதளவு புத்திசாலித்தனம் இருக்கிறது எனலாம். நீங்கள் வருத்தம் கொள்ளும்போது, எரிச்சலாகவும், கோபமாகவும், ஒட்டுமொத்த உலகமும் தவறாக இருப்பதாகவும் நினைத்தால், நீங்கள் ஒரு முட்டாள்தான். அந்தக் கணத்தில் யாராவது உங்களைத் தொடர்பு கொண்டால், உங்களது வருத்தம் மிக எளிதில் கோபமாக மாறமுடியும். ஆகவே துயரத்தை நீங்கள் கோபமாக மாற்றுகிறீர்களா அல்லது அன்பு மற்றும் கருணையாக மாற்றுகிறீர்களா என்பது முக்கியம். நீங்கள் வருத்தமாக இருக்கும்போது, கருணையானவராக உருமாறுவது மிகவும் எளிது.

உங்களுடைய எல்லா உணர்ச்சிகளையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது. மகிழ்ச்சிகரமாக இருப்பது மட்டும் முக்கியமானதல்ல. துயரத்தை நீங்கள் அறியவில்லை என்றால், நீங்கள் பக்குவமடைய மாட்டீர்கள். துயரத்தையும், வலியையும் நீங்கள் அறிந்திருந்தால்தான் நீங்கள் ஒரு பக்குவமான நபர். இல்லையென்றால், உங்களுக்குள் நிகழ்வது என்ன என்பதை நீங்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள் அல்லது உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் என்ன நிகழ்கிறது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்கள்.