தீவிரவாதி என்றவுடன், துப்பாக்கி ஏந்திய கையோடும் வெடிகுண்டு பைகளோடும் உள்ள மனிதர்கள்தான் நம் கற்பனையில் உலவுகிறார்கள். உண்மையில் 'தீவிரவாதி' என்ற சொல், ஒருவர் ஒரே நோக்கத்தில் தீவிரமாக இருக்கிறார் என்பதைக் குறிப்பதே. அப்படிப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்றால் எப்படியிருக்கும்?! இதுபற்றி சத்குரு...

சத்குரு:

தீவிரவாதிகள் தேவை! ஆனால் அவர்கள் எதற்கும் எதிராக செயல்படாதவர்களாக இருக்க வேண்டும். நம் சமுதாயத்தில் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் தீவிரவாதிகள் எதையாவது எதிர்ப்பவர்களாகவே உள்ளனர். தீவிரவாதம் என்கிற பெயரில், இந்த உலகத்திற்கு பேரழிவைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தனக்கு என்ன வேண்டுமோ அதை உருவாக்க தன் உயிரையும் தரத் தயாராய் இருக்கும் அவர்களுடைய குணம் மிகவும் போற்றத்தக்கது. இதனை நாம் சிறந்த பண்பு என்று சொல்லலாம்.

உதாரணமாக உங்களுக்கு எதிரிகளும் இல்லை, அந்த எதிரிகளை உருவாக்கும் திறமைகளும் இல்லை என்று வைத்துக் கொள்வோம், அப்போது நீங்கள் ஒரு தீவிரவாதியாய் இருந்தால் அது உங்களுக்கு அற்புதங்களைச் செய்யும். மிகத் தீவிரமான மனிதராக நீங்கள் செயல்படுவீர்கள்.

உங்களுக்கு எதிரி இல்லாதபட்சத்திலும் நீங்கள் தீவிரவாதியாக இருப்பது வாழ்வதற்கு சிறந்த வழி. நீங்கள் தீவிரவாதியாய் இருக்கும்போது வாழ்க்கையில், அனைத்திலும் முழு ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். எதையும் எதிர்க்காமல், எதையும் ஆதரிக்காமல், நீங்கள் வாழும்முறை ஒரு தீவிரவாதியைப் போல் தீவிரமாக இருந்தால், உங்கள் வாழ்க்கை உங்களுக்கு வரப்பிரசாதமாய் மாறிப் போகும்.

எதையாவது ஒன்றை எதிர்த்துக் கொண்டே இருந்தால், உங்கள் அறியாமையால் உங்கள் உயிருக்கு எதிராக செயல்படுவராக நீங்கள் மாறிவிடுவீர்கள். இங்கே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை, நம்முடைய உயிர், இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும் பொதுவானது. இன்று மனித சமுதாயத்திற்கு தேவைப்படும் மாற்றமே தனியொரு மனிதர் தீவிரவாதியாக மாறுவதுதான்.

நீங்கள் எப்போதுமே கிளர்ந்தெழும் நிலையில் இருக்கிறீர்கள் ஆனால் உங்கள் கிளர்ச்சி சமனற்று தவறான வழியில் போய்விடக் கூடாது. நீங்கள் எப்போதும் சீறியெழும் தீவிரத்துடன் இருக்கும், அதே சமயத்தில் அழிவுக்கான பாதையில் சென்று தடம் புரண்டுவிடக் கூடாது.

நான் தீவிரவாதி என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவதால் அதை தவறாய் புரிந்துக் கொள்ளும் அபாயம் சற்று அதிகமாகவே இருக்கிறது. "ஓ! சத்குரு அனைவரையும் தீவிரவாதியாகச் சொல்லி உபதேசம் செய்கிறார்," எனச் சிலர் சொல்லக் கூட செய்வார்கள். ஆம், நீங்கள் தீவிரவாதியாக வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன்.

ஒருவர் பலவீனமாக இருக்க முடியும், அதிதீவிரமாக இருக்க முடியும் அல்லது ஒன்றுக்கும் உதவாமல் தயிர் சாதம் போல் மதமதவென்று இரண்டும் கெட்டான் நிலையிலும் வாழ முடியும். இதுதான் ஒரு மனிதனுக்கு இருக்கும் சாத்தியங்கள்.

ஒரு மனிதன் தன் உச்சத்தை எட்டக் கூடிய உணர்ச்சி எது? கோபம்தானே! நீங்கள் கோபத்தின் உச்சத்தை தொட முடியும், துன்பத்தின் உச்சத்தைத் தொட முடியும், வெறுப்பின் உச்சத்தைத் தொட முடியும், பக்தியின் உச்சத்தைத் தொட முடியும், ஆனந்தத்தின் உச்சத்தைத் தொட முடியும், புத்திசாலித்தனத்தின் உச்சத்தைத் தொட முடியும், ஏன் உங்கள் வீர பராக்கிரம செயல்களால் உங்கள் உடல் திறனின் உச்சத்தைக் கூட எட்ட முடியும். இவைகளை மட்டும்தானே உங்களால் செய்ய முடியும்? இதைத் தவிர வேறு எதையாவது உங்களால் செய்ய முடியுமா?

நீங்கள் யாருக்காவது எதிராக செயல்படும்போது, உங்கள் கோபமும் உங்கள் விரக்தியும் உங்களின் பல உணர்வுகளும் அவரை சூழ்ந்து அவர் மீது வெடிகுண்டின் உருவிலோ அல்லது பல தீயசெயல்களின் மூலமாகவோ வெளிப்படும். ஆனால் நீங்கள் முழுமுதற் தீவிரவாதியாக இருந்து, எவருக்குமே எதிராக செயல்படாத பட்சத்தில் நீங்கள் முழுமையான உயிராக இருப்பீர்கள். உங்கள் தீவிரத்தை பிறர் மீது கோபமாக செலுத்துவதால் வீணாய் போகிறீர்கள்.

தற்சமயம் ஒரு மனிதனுக்கு நிகழ வேண்டியதெல்லாம் இதுதான் - அவன் முழுமையான தீவிரவாதியாக மாற வேண்டும். நீங்கள் தீவிரமான ஒரு உயிராக, முழுமையான ஒரு உயிராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். எதையும் எதிர்த்து வாழாமல், இங்கு வெறும் உயிராக வாழ வேண்டும். அது நிறைவேற என் ஆசிகள்!

photoblog.nbcnews.com