தபஸ் என்றால் என்ன?
தியானம், யோகா என்றாலே ஜடாமுடியுடன் ஒருவர் பத்மாசனத்தில் கண் மூடி தவம் செய்வது போன்ற உருவம்தான் பெரும்பாலானோருக்கு வந்து போகும். சரி தவம் (அ) தபஸ் என்றால் என்ன? தவம் செய்தால் என்ன கிட்டும்? தெரிந்துகொள்வோம்...
 
 

தியானம், யோகா என்றாலே ஜடாமுடியுடன் ஒருவர் பத்மாசனத்தில் கண் மூடி தவம் செய்வது போன்ற உருவம்தான் பெரும்பாலானோருக்கு வந்து போகும். சரி தவம் (அ) தபஸ் என்றால் என்ன? தவம் செய்தால் என்ன கிட்டும்? தெரிந்துகொள்வோம்...

சத்குரு:

தபஸ் என்றால் என்ன?

"தப" என்றால் உஷ்ணம். தபஸ் என்றால் உங்களை உஷ்ணப்படுத்திக்கொள்ளுதல் என்று பொருள். தற்சமயம் உங்களுடைய உயிர்சக்தி வெதுவெதுப்பான நிலையில் மட்டுமே இருக்கிறது. இதை வைத்து உங்களால் உயிர்வாழ முடியும்; உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்ய முடியும். உடல் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்ல இயலும். ஆனால், உடல் சார்ந்த பரிமாணங்களைத்தாண்டி வாழ்க்கையை உணர வேண்டும் என்றால் உங்கள் உயிர் சக்திகள் கொதி நிலையில் இருக்க வேண்டும், தீவிரத்தன்மையில் இருக்க வேண்டும்.

உங்களுடைய உயிர்சக்திகளை தீவிரமாக்கினீர்கள் என்றால் தொடர்ந்து ஒவ்வொரு கணத்திலும் உயிர்சக்திகளும் உடலும் எப்படி தனித்து உள்ளது என்பது பற்றிய தெளிவான விழிப்புணர்வு பெறலாம்.

இப்போது, உங்களில் பலர் கோபத்திற்கு அடிமையாக உள்ளீர்கள். தீவிரம் இல்லாவிட்டால் நீங்கள் கோபத்தை தவறவிட்டு விடுவீர்கள், ஏனென்றால், கோபம் என்பது தீவிரமானது.

பெரும்பாலான மக்களுக்கு சந்தோஷத்தில் எப்படி தீவிரமாக இருப்பது, அன்பில் எப்படி தீவிரமாக இருப்பது, கருணையில் எப்படி தீவிரத்துடன் இருப்பது அல்லது உயிர்சக்திகளை எப்படி வெறுமனே தீவிரத்தன்மையில் வைத்திருப்பது எனத் தெரியவில்லை. ஆகையால் சிறிய அளவிலாவது அவர்கள் தீவிரத்தை அனுபவிக்கிறார்கள் என்றால் அது கோபத்தில் தான். அது மிக எளிதாக வருகிறது. அது அழிவைத்தரக்கூடியது, அப்படி இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் கவனித்தீர்கள் என்றால், சில கணங்களுக்கு அது உங்களை உஷ்ணத்தில் வைக்கிறது. ஏனென்றால் உயிர் எப்போதுமே தற்சமயம் இருப்பதை விட தீவிரமான ஏதோ ஒன்றை அடைய ஏங்குகிறது.

ஏன் பலர் அதிகளவு கோபம் வெளிப்படுத்துகிறார்கள், விதவிதமான போதை மருந்துகள் உட்கொள்கிறார்கள், காமத்தை நாடுகிறார்காள் என்றால், அவற்றில் சிறிதளவேனும் தீவிரத்தன்மை அடங்கியுள்ளது. அவர்கள் ஏங்குவதெல்லாம் அந்த தீவிரத்திற்காகத்தான். நீங்கள் இங்கே வெறுமனே உட்கார்ந்திருந்து அதே நேரத்தில் முழுத்தீவிரத்துடன் இருப்பது எப்படி என்னும் அறிவியலைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம். எந்த மாதிரி தீவிரம் என்றால் இந்த உயிர் உங்களைப் பிடித்து வைக்கமுடியாத தீவிரம். நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை வெறுமனே அமர்ந்துக்கொண்டு அதே நேரத்தில் முழுத்தீவிரத்தில் இருக்க முடியும்.

எனவே, தபஸ் என்றால் உங்கள் உயிர்சக்திகளை மேலெழுப்புவது. ஒருவர் தியான நிலையோ, சமாதி நிலையோ அல்லது சூன்ய நிலையோ அடைய வேண்டுமானால் சிறிதளவு தபஸ் அங்கே நிச்சயம் உதவியாக இருக்கும். வேறு சில வகுப்புகளில் நாம் மக்களை மிக நீண்ட நேர தியானத்தில் ஆழ்த்தும் போது அவர்களை தீவிரமான தபசுக்கு உட்படுத்துவோம். ஏனெனில் அவர்கள் நீண்ட நேர தியானத்தில் ஈடுபட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆகையால் மக்கள் 10 - 12 மணி நேரம் ஒரு நாளில் தியானத்தில் இருக்க வேண்டுமென்றால் உங்கள் உயிர்சக்தி போதுமான தீவீரத்தன்மையுடன் இருந்தாலன்றி வெறும் முயற்சியால் மட்டும் முடியாது. நீண்ட நேர தியானத்தில் இருப்பதற்கு வழியே இல்லை. அப்படியின்றி நீண்ட நேர தியானத்திற்கு முயற்சித்தால், அங்கு வெறும் போராட்டம் மட்டுமே நடக்கும். ஆகையால் உயிர்சக்தியை குறிப்பிட்ட தீவிரத்தன்மைக்கு எடுத்துச் செல்லாமல், நீண்ட நேர தியானத்தில் இருக்க முயல்வது உங்களின் காலத்தையும் வாழ்க்கையையும் வீணாக்குவதாக மட்டுமே இருக்கும். அது தான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

ஈஷாவில் மக்கள் தியானத்திற்கு உட்கார்ந்தார்கள் என்றால், அவர்கள் பறப்பார்கள். பல நிலைகளில் அவர்கள் வெடிப்பதை நீங்கள் பார்க்கமுடியும். பொதுவாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், தியானம் என்றால் இது போல் அமர்ந்து கொண்டு அப்படியே சலிப்படைந்துவிடுவது என்று நினைக்கிறார்கள். அப்படிதான் மக்கள் தியானத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஈஷாவில் பார்த்தீர்களானால் மக்கள் அப்படி தியானம் செய்வதில்லை. அவர்கள் தியானம் செய்யும்போது, அவர்களுடைய உயிர்சக்தி மிகுந்த தீவிரத்துடன் இருக்கும். உடலை விட, உயிர்சக்திகள் வேகமாக துள்ளி ஓடும். உங்கள் உடல் அதை பிடித்து வைக்காத நிலை வரை அது செல்லும். ஆகையால் தபஸ் என்பது உயிர் சக்திகளை உஷ்ணப்படுத்தும் வழிகளில் ஒன்று, அப்போது நீங்கள் தெளிவாக அவைகளை உடலில் இருந்து பிரித்து அறியலாம். இப்போது உயிர்சக்திகள் தீவிரமற்று இருப்பதால் உங்கள் உடலுக்கும் உயிர்சக்திகளுக்கும் வேறுபாடின்றி உள்ளது.

உங்களுடைய உயிர்சக்திகளை தீவிரமாக்கினீர்கள் என்றால் தொடர்ந்து ஒவ்வொரு கணத்திலும் உயிர்சக்திகளும் உடலும் எப்படி தனித்து உள்ளது என்பது பற்றிய தெளிவான விழிப்புணர்வு பெறலாம். ஏனென்றால் இந்த பரு உடல் அத்தகைய தீவிரத்தன்மையை அடைய உகந்ததல்ல. ஆனால் எல்லா நேரமும் உயிர்சக்திகளால் உடலை விட முன்னோக்கி உயர்ந்து பாய முடியும். உங்கள் வண்டியை விட உங்கள் குதிரை அதிக பாய்ச்சலில் துள்ளியோடுகிறது ஆகையால் எல்லா நேரமும் உடலோடு இருக்கலாமே தவிர உடலுக்காக இருக்கத்தேவையில்லை. உங்களை உங்கள் உடல் கட்டுப்படுத்த முடியாது. அதை உணர்ந்து மகிழலாம் ஆனால் அது உங்களை நிறுத்த முடியாது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1