ஆன்மீகமாகட்டும், வாழ்க்கையாகட்டும், சமூகநலம் சம்பந்தப்பட்ட விஷயங்களாகட்டும், சத்குருவிடம் கேட்டால் அவரிடமிருந்து வரும் பதில்கள் சிந்திக்க வைக்கும்படியாகவும், நடைமுறைப்படுத்தும் விதமாகவும் இருக்கும். அப்படியான மூன்று கேள்விகளுக்கு சத்குரு தரும் பதில்கள் இங்கே...

Question: சுயநலத்துடன் இருப்பது தவறு என்று சொல்லப்படுகிறதே. நான் சந்தோஷமாக இருந்தால் தானே என் குடும்பத்தை சந்தோஷமாகவும் நன்றாகவும் என்னால் வைத்துக் கொள்ள முடியும்?

சத்குரு:

சுயம் என்பது இல்லாமல் நீங்கள் வேறு எப்படி இருக்க முடியும்? உங்கள் அனுபவங்கள் அனைத்திற்கும் ஆதாரம் நீங்கள் தானே? இந்த உலகை நீங்கள் பார்க்கும் கோணமே 'என்னுடைய', என்று உங்களைச் சார்ந்து, உங்களை பிரத்யேகமான மையமாகக் கொண்டு தானே இருக்க முடியும்?

தன்னலமற்று இருப்பது என்பதெல்லாம் விளையாட்டுப் பேச்சு. அதற்காக, நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும், மற்றவர்கள் எப்படி இருந்தால் என்ன என்கிற அளவிற்கு உங்கள் சுயநலத்தை வெகுவாகச் சுருக்கிக் கொள்ளாதீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முதலில் நான். அப்புறம் நானும் என் மனைவியும். அதற்கப்புறம் நானும் என் மனைவியும், குழந்தைகளும். அப்படியே பேரக்குழந்தைகள் என்று இதைக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கிக் கொண்டிருப்பதை விடுங்கள். உங்கள் சுயநலத்தில் கஞ்சத்தனம் எதற்கு? இந்த உலகத்தையே உங்களுடையதாக நினையுங்கள். இந்த உலகத்தின் சந்தோஷத்திற்காக வாழுங்கள். அப்படிப்பட்ட மாபெரும் சுயநலம் எந்த விதத்திலும் தவறே அல்ல.

Question: மனித உடலில் அமைந்திருக்கும் ஏழு சக்கரங்களுக்கும், பிரபஞ்சத்தின் அமைப்பிற்கும் தொடர்பு இருக்கிறதா?

chakras

சத்குரு:

ஆம், நிச்சயமாக. எப்படி மனித உடல் தனக்குள் இருந்து வளர்கிறதோ, அதே போல் பிரபஞ்சமும் தனக்குள் இருந்தே வளர்கிறது. அப்படி என்றால் பிரபஞ்சத்திற்கும் ஏழு சக்கரங்கள் உண்டா? இதனை நாம் அப்படிப் புரிந்து கொள்ளக் கூடாது.

நம் உடலமைப்பு என்று பார்த்தால், உடலில் மொத்தம் 114 சக்கரங்கள் உண்டு. இவற்றிற்கும் பிரபஞ்சத்தின் அமைப்பிற்கும் தொடர்புண்டு. ஒரு மரத்தைக் குறுக்கு வாட்டில் வெட்டி அதன் வளையங்களை கூர்ந்து கவனித்தால், பூமியில் அந்த மரம் இருந்த இடத்தில் நிகழ்ந்த பஞ்சம், வெள்ளம் இன்னும் அம்மரத்தைப் பற்றி பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். அதே போல், மனித உடலை விழிப்புணர்வால் கூறு போட்டு கவனித்தால், உயிர் உருவான அடிப்படையைப் புரிந்து கொள்ள முடியும்.

பிரபஞ்சம் உருவானதற்கு அறிவியல் விளக்கமாக BIG BANG எனும் கோட்பாடு வழங்கப்படுகிறது. யோகத்தில் அந்நிகழ்வை, அப்பேரொலியை ஒரு 'கர்ஜனை'யாக உருவகப்படுத்துகிறார்கள். கதை வடிவில் இதைச் சொல்லும்போது, முதலில் தோன்றிய ருத்ரா கர்ஜித்து இப்பிரபஞ்சம் தோன்றிற்று என்று சொல்வார்கள்.

நம் உடலுக்குள் இந்த கர்ஜனை 84 முறை நிகழ்ந்திருப்பதை கவனிக்க முடிகிறது. இதை வைத்துத்தான் 84 அடிப்படை ஆசன நிலைகள் உருவாயின.

பிரபஞ்சம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும் விதத்துக்கும் மனித உடல் அமைப்புக்கும் இடையில் மிக ஆழமான மிக நுட்பமான தொடர்பு இருக்கிறது.

Question: இன்றைய உலகில் நிறைய மனிதர்கள் மனநிலை மருத்துவர்களிடம் செல்வதைப் பார்க்க முடிகிறது. இன்றைய மனிதர்களின் மனநிலையில் ஏன் இத்தனைத் தடுமாற்றம்? இதற்குத் தீர்வுதான் என்ன?

1

சத்குரு:

பொருளாதார ரீதியாக சமூகம் வளமாகும்போது, அதிகமான மனிதர்கள் மனநலத்தில் தடுமாறுவதைக் காண முடிகிறது. மன அழுத்தம் என்றும், மனச்சோர்வு என்றும் இன்னும் என்னென்னவோ பெயர்களிட்டு இந்நிலைகள் அழைக்கப்படலாம்.

ஆனால், அடிப்படையில் இதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் உண்டு. உங்கள் மனதின்மீது உங்களுக்கு உள்ள கட்டுப்பாட்டை நீங்கள் இழந்துவிட்டீர்கள். வெளிச்சூழல்கள் மாறும்போது, அவற்றுக்கு ஏற்றாற்போல் உங்கள் மனம் தானாக சந்தோஷம் கொள்கிறது; அல்லது தானாக துக்கம் கொள்கிறது.

'நான்' எப்படி இருக்க வேண்டும், 'நான்' எப்படி இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீங்கள் உங்கள் வசம் வைத்துக் கொள்வதற்கு பதிலாக, மனதை அதன் போக்கில் விட்டு விட்டீர்கள். அதனால் உங்களுக்கு வேண்டிய வகையில் இல்லாமல், மனம் தன் போக்கில் எவ்வாறோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு இல்லாமல், மனதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. அதைக் கற்றுத் தேர்ந்தால், உங்கள் மனம் முற்றிலுமாக உங்கள் எண்ணப்படி, உங்கள் விருப்பப்படி செயல்படும். அப்புறம் மனநலம் தடுமாறுவது பற்றி கவலைப்படத் தேவையிராது.