சுத்தமும் சுகாதாரமும் ஆன்மீக வளர்ச்சிக்கு துணைபுரியுமா?
வீட்டையும் சுற்றத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது உங்கள் ஆன்ம வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? சுத்தத்தின் மகத்துவம் குறித்து சத்குரு சொல்கிறார்.
 
 

ஒரு குழந்தையாக இருந்தபோது, உங்களையும் உங்கள் சுற்றத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து உங்கள் பெற்றோரும் வயதில் மூத்தவர்கள் பிறரும் உங்களிடம் வற்புறுத்தியிருப்பார்கள். ஆனால் சமுதாயத்தின் இந்த எதிர்பார்ப்பைத் தாண்டி, வீட்டையும் சுற்றத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது ஆன்ம வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? சுத்தத்தின் மகத்துவம் குறித்து சத்குரு சொல்கிறார்.

சத்குரு:

ஷௌச்சா அல்லது சுத்தம் என்பது ஒருவரின் ஆன்ம வளர்ச்சியின் முக்கியமான அம்சமாகத் திகழ்கிறது. சுத்தம் என்பது வெறும் உடலைப் பற்றியது மட்டுமல்ல. அது நம் சுற்றத்தைப் பற்றியதும் கூட. நம் ஐம்புலன்கள் மூலமாக நாம் கிரகித்துக்கொள்பவை அனைத்தும் நமக்குள் குப்பையாக மாறலாம், அல்லது நமக்குள் நல்வாழ்வை ஏற்படுத்தலாம்.

நாம் எத்தகைய உருவங்கள் உருவாக்குகிறோம், நம்மைச் சுற்றி எத்தகைய உருவங்கள் வைத்திருக்கிறோம், எத்தகைய கட்டமைப்புகளில் வாழ்கிறோம் என்பது நாம் இருக்கும் நிலை முழுவதன் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நாம் எதை கிரகித்துக்கொண்டாலும், அது நம் புலனுறுப்புகளுக்கு இனிமையாக இருந்தால் அதை ஒருவிதமாக உணர்கிறோம். அது நம் புலனுறுப்புகளுக்கு கசப்பாக இருந்தால் அது நம் அனுபவத்தில் அசிங்கமாக மாறிவிடுகிறது. நம் சுற்றுப்புறம் சுத்தமாக இல்லாவிட்டால், அல்லது நம் சுற்றம் நம் புலனுறுப்புக்களுக்கு இனிமையாக இல்லாவிட்டால், நம் மனத்தில் நாம் உருவாக்கும் பிம்பங்களும், நம் அனுபவத்தின் ஆதாரத்தில் ஏற்படும் பிம்பங்களும் கசப்பாக மாறுகின்றன. இப்படி நீங்கள் கசப்பு உருவாக்கும்போது, ஆனந்தமான அனுபவ நிலைகளை எட்டி விழிப்புணர்வாக நீங்கள் விரும்பும் உணர்வுகளை உருவாக்குவது கடினமாகிவிடுகிறது.

நீங்கள் வேதனையாக இருக்கிறீர்களா அல்லது ஆனந்தமாக இருக்கிறீர்களா என்பது உங்களுக்குள் நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதையே பொருத்திருக்கிறது. ஒரு ஆன்மீக செயல்முறை என்றால், உங்களின் மொத்தமும் விழிப்புணர்வாக நடக்கிறது என்று அர்த்தம், அதாவது நீங்களே உங்கள் வாழ்க்கை அனுபவத்தை நிர்ணயிக்கிறீர்கள். இது நிகழவேண்டும் என்றால், நம் புலனுறுப்புக்கள் எதையும் கசப்பாக கிரகித்துக்கொள்ளாது இருப்பது முக்கியம்.

உங்கள் படுக்கை விரிப்பை எப்படி வைத்திருக்கிறீர்கள்?

ஒவ்வொரு கலாச்சாரத்திலும், உங்கள் துணிகளையும் படுக்கை விரிப்புகளையும் எப்படி வைத்துக்கொள்ள வேண்டுமென்று உங்களுக்கு நிச்சயம் ஏதோவொரு கட்டத்தில் சொல்லியிருப்பார்கள். உங்கள் பெற்றோர்கள் சொல்லாவிட்டாலும் தாத்தா பாட்டியாவது சொல்லியிருப்பார்கள். குறிப்பாக பாரதத்தில், உங்கள் படுக்கை விரிப்புகளை கசங்கியபடி மடிக்காமல் வைத்திருந்தால் பேய்கள் அங்கு வந்துசேரும் என்பார்கள். நீங்கள் தூங்கும்போது அவை உங்களுடன் சேர்ந்து தூங்கும், தொல்லைப்படுத்தும் என்பார்கள். ஆங்கிலத்திலும், "உங்கள் படுக்கையை எப்படி விரிக்கிறீகளோ அப்படியே அதில் தூங்குவீர்கள்" என்றுசொல்லும் பழமொழி ஒன்று உண்டு. இது அடிப்படையில் உங்களைச் சுற்றியுள்ள உருவங்கள் பற்றியது. இன்று பிரபஞ்சம் முழுவதுமே தன்னை பலகோடி விதங்களாக பிரதிபலிக்கும் ஒரே சக்தி என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். சக்தி உருவங்களை உருவாக்கியிருப்பது போலவே, உருவங்களால் சக்தியை உருவாக்கமுடியும். உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உருவமும் ஒருவிதமான சக்தியை உருவாக்குகிறது.

நாம் எத்தகைய உருவங்கள் உருவாக்குகிறோம், நம்மைச் சுற்றி எத்தகைய உருவங்கள் வைத்திருக்கிறோம், எத்தகைய கட்டமைப்புகளில் வாழ்கிறோம் என்பது நாம் இருக்கும் நிலை முழுவதன் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் உட்காரும் விதம், நம்மை நாம் சீர்படுத்தும் விதம், நம்மைச் சுற்றி நாம் பொருட்களை வைக்கும் விதம், ஆகியவற்றின் மீது இன்னும் சற்று விழிப்புணர்வு இருந்தால், உள்முகமாகப் பார்ப்பதற்கு உகந்ததொரு சூழலை நாம் உருவாக்க முடியும். இது நம் ஆன்மீக வளர்ச்சியை இன்னும் சுலபமாக்கிவிடுகிறது.

நீங்கள் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு வாகனம் ஓட்டிச்செல்ல வேண்டுமென்றால், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் போகலாம், ஆனால் ஒரு சீரான சாலை போடப்பட்டிருந்தால் சுலபமாக போய்ச்சேருவீர்கள். அந்த அர்த்தத்தில், நம்மைச் சுற்றியுள்ள சூழலில் பொருட்கள் சீரமைக்கப்பட்டிருக்கும் விதம் உள்முகமாகத் திரும்புவதற்கு ஏதுவாக இருந்தால், அது இன்னும் சுலபமாக நடந்தேறும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1