கேள்வி: சத்குரு, சூட்சும உடல் என்றால் என்ன? யோகாசனங்கள் செய்யும்போது அதனை நாம் எதற்காக மனதில் உருவாக்கவேண்டும்?

சத்குரு: அது பொருள்நிலையில் இருக்கும் உடலைவிட சூட்சுமமானது. மனித உடலமைப்பு மிகவும் நுட்பமாகவும் அழகாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அது மிகவும் மென்மையானது, அதே சமயம் அபாரமாக வளைந்துகொடுக்கும் தன்மை கொண்டது. இந்த உயிர் மிகவும் மென்மையானது. உள்மூச்சு, வெளிமூச்சு, உள்மூச்சு, வெளிமூச்சு, அடுத்த உள்மூச்சு நடக்கவில்லை என்றால் நீங்கள் முடிந்தீர்கள்! வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஒரு முழு மூச்சு கூட இல்லை, பாதி மூச்சுதான் இருக்கிறது. இதை சற்று கவனித்துப் பாருங்கள்.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஒரு முழு மூச்சு கூட இல்லை, பாதி மூச்சுதான் இருக்கிறது.

ஆனால் உயிர் இவ்வளவு மென்மையானதாக இருந்தாலும் அதற்கு வளைந்துகொடுக்கும் தன்மையும் உண்டு. மனிதர்களால் வியக்கத்தக்க விஷயங்களைச் செய்திட முடியும், ஏனெனில் இவ்வுடல் பல நிலைகளிலான கட்டமைப்பு கொண்டது. இது வெறும் பொருள்தன்மையில் இருந்திருந்தால், ஒருவர் தூங்கும்போது அவருடைய மூக்கைப் பிடித்தாலே அவர் இறந்துவிட வேண்டும். ஆனால் இது அப்படியல்ல. இது பல அடுக்குகளில் இருக்கிறது. உடல் வாழும் திறனை இழந்துவிட்டாலும், மற்ற பரிமாணங்கள் இன்னும் உயிருடன் இருந்தால், உடலை மீட்டெடுக்க முடியும். இது உங்களுக்கு தினமும் நடக்கிறது: நீங்கள் தூங்கும்போது உங்களின் ஒருபகுதி உண்மையில் இறந்திருக்கிறது - உங்கள் ஆளுமைத்தன்மை, உங்கள் சிந்தனை, உங்களைப் பற்றிய உங்கள் கருத்து - ஆனால் உங்களில் மற்ற பகுதிகள் இன்னும் விழித்திருப்பதால் எல்லாம் மீண்டும் விழித்தெழுகிறது.

கிரகிப்பை மேம்படுத்துவது

போதனைகள் முடிவில்லா கற்பனைக்கு மட்டுமே வழிவகுக்கும்

நீங்கள் ஒரு எளிமையான ஆசனம் அல்லது யோகத்தின் வேறொரு பரிமாணத்தைச் செய்தால், அடிப்படையில் உங்கள் கிரகித்துக்கொள்ளும் திறமை மேம்படுத்துவதே நோக்கம். ஏனென்றால் நீங்கள் கிரகித்துக்கொள்வதை மட்டுமே நீங்கள் அறிகிறீர்கள் - மற்றவை வெறும் கற்பனை. பொதுவாக, கிரகிக்கும் திறனை மேம்படுத்துவதற்கு பதிலாக மக்கள் துரதிர்ஷ்டவசமாக போதனைகள் தந்து வருகின்றனர். போதனைகள் முடிவில்லா கற்பனைக்கு மட்டுமே வழிவகுக்கும், அது பைத்திய ஆஸ்பத்திரிக்கு முன்னேற நிச்சயமான வழி. உங்கள் கற்பனை கட்டுக்கடங்காமல் சென்றால், அது நிஜத்தில் வேரூன்றவில்லை என்றால், நீங்கள் கட்டாயம் பைத்தியநிலையை நோக்கித்தான் நகர்ந்துகொண்டு இருப்பீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

ஆன்மீகப் பாதையில் உங்களுக்குத் தேவையில்லாத போதனைகளை நீங்கள் எடுத்துக்கொண்டால் மிக சுலபமாக நீங்கள் பைத்தியநிலைக்கு சென்றுவிடுவீர்கள். அந்த அபாயம் எப்போதும் இருக்கிறது. உங்கள் கால்கள் உறுதியாக மண்ணில் ஊன்றியிருந்து நீங்கள் எதையோ கற்பனை செய்தால் அது பரவாயில்லை. ஆனால் உங்கள் கற்பனை உங்களை தரையில் காலூன்ற முடியாமல் செய்கிறதென்றால் சூழ்நிலைமீது உங்களுக்கு கட்டுப்பாடு இருக்காது.

ஞாபகமும் கற்பனையும்

நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையே பெரிய இடைவெளியில்லை. அது மிகவும் மெல்லிய கோடு.

ஆசனங்களும் பிற யோகப் பயிற்சிகளும் உங்கள் கிரகிக்கும் திறனை மேம்படுத்த உருவக்கப்பட்டவையே தவிர, உங்களை கற்பனையில் மிதக்கச்செய்பவை அல்ல. உங்கள் கிரகிப்பு மேம்பட்டால்தான் நீங்கள் வாழ்க்கையை உணர்வீர்கள், அப்போது நீங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கமாட்டீர்கள். இப்போது இந்த கேள்வி வந்திருப்பதன் காரணம், சூட்சும உடலை உங்கள் அனுபவத்தில் நீங்கள் இன்னும் உணரவில்லை, ஆனால் உங்களிடம் யாரோ "அதை கவனித்துச் செய்யுங்கள்" என்று சொல்கிறார்கள், அதாவது கற்பனை செய்யச் சொல்கிறார்கள். ஆம், நாங்கள் உங்களை கற்பனை செய்யச் சொல்வதன் காரணம், நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையே பெரிய இடைவெளியில்லை. அது மிகவும் மெல்லிய கோடு. நிஜம் எப்படியும் நிகழ்ந்தபடி இருக்கிறது. அதற்கு சரியான செயல் மற்றும் விழிப்புணர்வின் உதவியைத் தந்தால், உண்மை உங்கள் கண்முன் விரியும்.

இன்று, உங்களுக்கு சற்று ஞாபகமும் கற்பனையும் இல்லாவிட்டால் கண்பார்வைக்கான உறுப்புக்கள் இயங்காது என்பது நரம்பியல்ரீதியாக நிரூபணமாகியுள்ள உண்மை. நீங்கள் எப்போதும் உங்கள் கண்கள் ஒரு கேமரா என்று நினைத்தீர்கள், ஆனால் அது அப்படிக் கிடையாது. அதன் பின்னணியிலுள்ள கணினி இல்லாமல் அதனால் இயங்க இயலாது. ஈஷா ரிஜூவனேஷன் சென்டரில், கண்களை கவனித்துக்கொள்வதற்கான இயற்கை முறைகளை கற்றுத் தருகிறோம், அதில் கண்பார்வையை மேம்படுத்த ஞாபகத்தையும் கற்பனையையும் பயன்படுத்துகிறோம். ஏதோவொன்றைப் பற்றி நீங்கள் ஞாபகசக்தி வளர்த்தால், ஒரு நிமிடநேரத்தில் உங்கள் கண்பார்வை மேம்படுவதை கவனிக்கமுடியும்.

உங்கள் கற்பனையை கட்டுக்கடங்காமல் ஓடவிடாதீர்கள். கொஞ்சம் கற்பனை பரவாயில்லை, ஏனெனில் இதை வளர்த்தால்தான் ஞாபகம் பதியத் துவங்கும். ஞாபகம் வேலைசெய்யத் துவங்கிவிட்டால், உண்மையாகவே நீங்கள் பார்க்கத் துவங்குவீர்கள்.

இப்போதும் அதுகுறித்த ஞாபகம் அல்லது பழைய பதிவு இல்லாத பல விஷயங்களை உங்களால் காண முடிவதில்லை. அதனால் நாம் கொஞ்சம் ஞாபகம் வளர்க்கப் பார்க்கிறோம்; கற்பனை இல்லாமல் ஞாபகம் வளர்க்க முடியாது. ஞாபகம் இல்லாமல் கற்பனைசெய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தீர்கள். இல்லை, கற்பனை இல்லாமல் உங்களால் ஞாபகம் வளர்க்க முடியாது. கற்பனை இல்லாமல் ஞாபகம் என்பது சாத்தியமில்லை.

உங்களை சூட்சும உடலை கற்பனை செய்யச் சொல்கிறோம். அதனை உங்களைப் போலவே செய்திடுங்கள், அதனை மிகவும் அழகாக்காதீர்கள். உங்கள் சூட்சும உடலை சாம்சன் போல கற்பனை செய்துகொள்ளாதீர்கள்! உங்கள் கற்பனையை கட்டுக்கடங்காமல் ஓடவிடாதீர்கள். கொஞ்சம் கற்பனை பரவாயில்லை, ஏனெனில் இதை வளர்த்தால்தான் ஞாபகம் பதியத் துவங்கும். ஞாபகம் வேலைசெய்யத் துவங்கிவிட்டால், உண்மையாகவே நீங்கள் பார்க்கத் துவங்குவீர்கள். ஆனால் அது எல்லா இடங்களிலும் நடந்து திரிவதைப் போல பார்க்காதீர்கள். ஆசனங்கள் செய்யும்போது மட்டும்தான் பார்க்கவேண்டும், சரியா? சூட்சும உடலை எல்லாப்பக்கமும் பார்த்துக்கொண்டு இருந்தால், அப்படி இருப்பவர்கள் சூட்சுமமான உணவைத் தான் சாப்பிட வேண்டும்!

சத்குரு App...இப்போது தமிழில்

  • ஐந்தே நிமிடங்களில் எளிதாக செய்யக்கூடிய புத்துணர்வூட்டும் உப-யோகப் பயிற்சிகள் கற்றுக்கொள்ளுங்கள்
  • எளிய, சக்திவாய்ந்த ஈஷா கிரியா பயிற்சியை வழிகாட்டுதலுடன் கற்றுக்கொள்ளுங்கள்.