சேகர் கபூர்: மன அழுத்தம் என்ற கருத்தை நாம் வரையறுக்க முடியுமா?

சத்குரு: பல வருடங்களுக்கு முன்னர் நான் முதன்முதலாக அமெரிக்கா சென்றபோது, நான் எங்கு சென்றாலும், அனைவரும் “மன அழுத்த நிர்வாகம்” பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். உண்மையிலேயே இது எனக்குப் புரியவில்லை. ஏனென்றால், என்னுடைய புரிதலில், நமக்கு மதிப்பு வாய்ந்த விஷயங்களாகிய – நமது தொழில், குடும்பம், சொத்து மற்றும் குழந்தைகள் – இவைகளைத்தான் நாம் நிர்வகிக்கிறோம். மன அழுத்தத்தை யாராவது நிர்வகிப்பார்களா? இதைப் புரிந்துகொள்ள எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டது – அதாவது மன அழுத்தம் என்பது அவர்களது வாழ்வின் ஒரு பகுதி என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளனர்!

உங்களை நிர்வகியுங்கள், உங்களது மன அழுத்தத்தை அல்ல

மன அழுத்தம் என்பது உங்கள் வாழ்வின் ஒரு பாகம் அல்ல. உங்களது உடல் மற்றும் மனதின் அமைப்பை நிர்வகிக்கக்கூடிய உங்கள் திறனின்மைதான் மன அழுத்தமாக இருக்கிறது. உங்களது பணியின் இயல்பு காரணமாக மன அழுத்தம் நிகழ்வதில்லை. தலைமைச் செயலாளர் மன அழுத்தம் குறித்து புகார் கூறுகிறார், கடை நிலைப் பணியாளரும்கூட மன அழுத்தம் குறித்து புகார் கூறுகிறார் மற்றும் இடைப்பட்ட நிலையில், ஒவ்வொரு நபரும் அவரது பணி அழுத்தம் நிறைந்ததாக கூறுகின்றனர். வேலையில்லாமல் இருப்பவர்களும் கூட அவர்களது சூழ்நிலை அழுத்தம் நிறைந்திருப்பதாகக் காண்கின்றனர். உங்களது வேலையினால்தான் துன்பப்படுவதாக நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் நான் உங்களை உற்சாகப்படுத்தினால், நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்களா? கிடையாது, மன அழுத்தம் என்பது உங்கள் வேலையைக் குறித்து அல்ல. அதற்குக் காரணம், உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்தி நிலையை உங்களுக்கு நிர்வகிக்கத் தெரியவில்லை.

நீங்கள் தற்செயலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள், ஆகவே எல்லாமே அழுத்தம் தருவதாக இருக்கிறது. நீங்கள் ஒரு காரில் உட்கார்ந்து, ஸ்டியரிங் வீலை ஒரு பக்கமாகத் திருப்பி, கார் அதற்கு எதிர்த் திசையில் சென்றால், இயல்பாகவே நீங்கள் அழுத்தத்துக்குதான் ஆளாவீர்கள். தற்போது, அந்தவிதமான இயந்திர அமைப்பை நீங்கள் ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அதைப் பற்றி எதையும் புரிந்துகொள்ளாமல், தற்செயலாகவே வாழ்க்கையை கவனமில்லாமலும், தெளிவில்லாமலும் நடத்திச் செல்கிறீர்கள், ஆகவே நீங்கள் அழுத்தம் நிறைந்தவராகத்தான் இருப்பீர்கள். அழுத்தம் என்பது நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயலின் இயல்பினாலோ அல்லது வாழ்க்கைச் சூழல்களினாலோ அல்ல. உங்கள் ஒட்டுமொத்த அமைப்பையே எப்படி நிர்வகிப்பது என்பதே உங்களுக்குத் தெரியாததுதான் அழுத்தத்திற்கான காரணமாக இருக்கிறது.

உங்கள் வாழ்வியல் தன்மையை மாற்றுவது

முக்கியமாக, நமது வாழ்க்கை வளத்தை மாற்றுவதால் நமது வாழ்வின் தரம் மாற்றமடைவது கிடையாது. நமது வாழ்வின் தன்மையை நாம் மாற்றுவதால் மட்டும்தான் அது நிகழும். ஒரு மனிதர் அழகானதொரு வாழ்க்கையை வாழ்கிறார் என்றால், அவர் வித்தியாசமான ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறார் என்று அதற்குப் பொருள் அல்ல. அவர் காலையில் எழுந்ததும், கழிவறை செல்வதும், பல் துலக்குவதுமாக அதே வழக்கமான விஷயங்களைச் செய்கிறார். ஆனால், ஏதோ ஒரு விதத்தில், அவரது வாழ்க்கை அற்புதமாகவும், அழகாகவும் இருப்பதற்கு, அவர் வாழ்வின் தன்மை காரணமாக இருக்கிறது.

காதலில் விழும் நபர்களுக்கு இது நிகழ்ந்திருக்கக்கூடும். அவர்கள் காதலில் விழுகின்றனர், அப்போது எல்லாமே வித்தியாசமாகி விடுகிறது, ஏனென்றால் அவர்களது வாழ்வின் தன்மை மாறிவிட்டது. ஆனால் பிறகு அவர்கள் காதலை கடந்துவிட்டால், மீண்டும் அவர்களது வாழ்வின் தன்மை மாறுவதுடன், அவர்கள் துன்பமயமாகின்றனர். நீங்கள் விரும்பும்படி உங்கள் வாழ்வின் வளத்தை மாற்றுவது சாத்தியப்படாமல் போகலாம். ஏனெனில், நீங்கள் வாழும் சூழ்நிலைகள் அதற்கு அனுமதி அளிக்க வேண்டியுள்ளது. ஆனால் வாழ்வின் தன்மையை மாற்றுவது என்பதை உங்களால் முழு விருப்பத்துடன் செய்துகொள்ள முடியும். உங்களுக்கு யாருடைய அனுமதியும் அதற்குத் தேவையில்லை. அது ஒருபோதும் சூழ்நிலை சார்ந்ததே அல்ல.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

ஒரு நாள், மூன்று நபர்கள் ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த வேறொரு மனிதர், முதல் நபரிடம், “இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

கேள்வி கேட்ட அந்த மனிதரை நிமிர்ந்து பார்த்த முதலாமவர், “உங்களுக்கு கண் குருடாகிவிட்டதா? நான் பாறையை வெட்டிக்கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லையா?” என்று கூறினார்.

இந்த மனிதர் மேற்கொண்டு நகர்ந்துசென்று அடுத்த நபரிடம், “இங்கே நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று வினவினார்.

அந்த நபர் நிமிர்ந்து பார்த்து, “என் வயிற்றை நிறைப்பதற்கு ஏதோ ஒன்று செய்கிறேன், ஆகவே நான் இங்கு வந்து, அவர்கள் எதை கோரினாலும் செய்கிறேன். எனக்கு வயிற்றை நிரப்பவேண்டும், அவ்வளவுதான்” என்றார்.

அவர் மூன்றாவது நபரிடம் சென்று, “இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அந்த நபர் மட்டற்ற ஆனந்தத்துடன் எழுந்து நின்று, “நான் இங்கே ஒரு அழகிய கோவிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்!” என்றார்.

அவர்கள் அனைவரும் ஒரே விஷயத்தை செய்து கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் செய்து கொண்டிருப்பதைக் குறித்த அவர்களின் அனுபவத்தில் உலகளவு வித்தியாசம் இருந்தது. ஒவ்வொரு மனிதரும், தங்களது வாழ்வின் ஒவ்வொரு கணமும், இந்த மூன்று தன்மைகளில் ஏதோ ஒன்றில் தங்களது செயலைச் செய்து கொண்டிருக்கக்கூடும் – அதுதான் ஒருவரது வாழ்வின் தரத்தை முடிவு செய்கிறதே தவிர, உண்மையில் அவர் என்ன செய்கிறார் என்பது தரத்தை முடிவு செய்வதில்லை. ஒரு செயல்பாடு எவ்வளவு எளிமையானது அல்லது சிக்கலானது என்பது உங்கள் வாழ்வின் தரத்தை மாற்றுவதில்லை. நீங்கள் அதை எந்தத் தன்மையில் செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்வின் தரத்தை மாற்றுகிறது.

உங்கள் வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான உங்களது திறனை நீங்கள் நோக்கினால், திறன் மேம்பாடு அடைவது நீங்கள் மகிழ்ச்சியாக உணரும் போதா? அல்லது மகிழ்ச்சியில்லாமல் இருக்கும்போதா? நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போது, எவ்வளவு விஷயங்களையும் பொறுப்பேற்றுச் செய்வதற்கு விருப்பம் கொள்கிறீர்கள். நீங்கள் அழுத்தத்தில் இருக்கும்போது, எளிமையான விஷயங்களைச் செய்வதற்குக்கூட நீங்கள் விரும்புவதில்லை. அது வேறொரு விதமான வேகத்தை உங்களுக்குள் ஏற்படுத்துகிறது. அமைதியும், ஆனந்தமுமான மனிதரை உருவாக்குவதுதான் நாம் செய்யத் தேவைப்படும் முதன்மையான பணியாக இருக்கிறது. நீங்கள் சரியான விதத்தில் யோகா செய்தால் இது எப்போதும் நிகழும். யோகா என்பது தனிமனித அறிவியலாக இருக்கும் காரணத்தால், அது முறையாக வழங்கப்பட்டால், அதிசயம் போல் செயல்பட்டு, இதனை நிகழச் செய்யும்.

ஆசிரியர் குறிப்பு: உங்கள் உள்நிலை, நீங்கள் விரும்புவது போல் நிகழவில்லையா? ஈஷா யோகா ஆன்லைன் மூலம், உங்கள் உள்நிலைக்கு நீங்கள் பொறுப்பேற்பதற்கான முதல் அடியை எடுத்து வையுங்கள். ஈஷா யோகா ஆன்லைன் - கொரோனா செயல் வீரர்களுக்கு இலவசமாகவும், மற்ற அனைவருக்கும் பாதிக் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.