குரு என்பவர் மனிதர் என்ற அடையாளத்தை தாண்டி ஒரு சாத்தியமாகவும் ஒரு கருவியாகவும் உள்ளதை இந்த பதிவு உணர்த்துகிறது! ஒரு குருவுடன் இருப்பது ஏன் அசௌகரியமாக உள்ளது என்பதற்கான பதிலையும் இங்கு தொடர்ந்து படித்தறியலாம்!

Question: ஒரு குழப்பமான ஆத்ம சாதகர் தன்னுடைய குருவைத் தேடி அலைவதைப் போல, அந்த சாதகரின் ஏக்கம் தீவிரமடையும்போது, குரு ஆத்ம சாதகரைக் கண்டுகொள்ளும் சூழ்நிலைகள் உள்ளனவா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ஆம். எப்போதுமே அப்படித்தான் நடக்கிறது. ஒரு குரு என்பவர் ஒரு சாத்தியம். அவர் ஒரு மனிதர் அல்ல. நான் என்னை வேலை செய்யும் ஒரு கருவியாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன். போதுமான அளவு நற்பண்புகள், போதுமான அளவு புத்திசாலித்தனம், போதுமான அளவு பைத்தியக்காரத்தனம் எல்லாவற்றையும் கலந்து என்னை நான் உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன். மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட கருவி இது. எனவே, என்னைப் பற்றி நீங்கள் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது.

என்னைப் பற்றி ஏதேனும் ஒரு முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால், நான் ஓர் உபயோகமான கருவியாக இருக்க முடியாது. என்னை ஒரு கடவுளாக நீங்கள் அடையாளப்படுத்திவிட்டால், நீங்கள் வேறு பல அம்சங்களை இழப்பீர்கள். என்னை ஒரு நல்ல மனிதர் என்று நீங்கள் அடையாளப்படுத்தினால், முற்றிலும் பலவற்றை இழந்துவிடுவீர்கள். எந்த விதத்தில் நீங்கள் என்னை அடையாளப்படுத்தினாலும், பல சாத்தியங்களை நீங்கள் இழப்பீர்கள்.

ஏனென்றால், தொடர்ந்து பார்க்காவிட்டால், அது தேடுதலே அல்ல. முடிவுக்கு வந்துவிட்டால், நீங்கள் நின்றுவிடுவீர்கள். எனவே, நீங்கள் எந்தவிதமான முடிவுக்கும் வரமுடியாத விதமான கருவியாக என்னை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு அவரைத் தெரியும், அவர் அப்படித்தான் என்று ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். அடுத்த முறை என்னை நீங்கள் சந்திக்கும்போது, நீங்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறீர்கள்.

நாம் முறைப்படுத்தியுள்ள ஆத்ம சாதனை, சிந்திக்கும் மனிதர்களுக்கானது. ஆனால், சிந்திக்கிற மக்களுக்கு நான் எப்போதுமே மிகப் பெரும் குழப்பமாகத்தான் இருந்திருக்கிறேன். ஏனென்றால், நான் என்னை அப்படிப்பட்ட கருவியாகத்தான் கவனமாக வடிவமைத்திருக்கிறேன்.

மற்ற எளிமையான மக்கள் என்னை முற்றிலும் வேறுவிதமாக உணர்கிறார்கள். அவர்களிடம் எனக்கு இப்படிப்பட்ட முரண்பாடுகள் எதுவும் இல்லை. அவர்கள் எந்தவிதமாக என்னைப் பார்க்கிறார்களோ, அந்த ஒன்றுடனே பொருந்திப்போகிறார்கள். அவர்களுக்கு இந்த முரண்பாடுகள் தேவைப்படுவதில்லை.

ஒரு குரு, சீடரைத் தேடுவது என்பது சாத்தியமா? இதைப்பற்றியெல்லாம் பேசுவதற்கு இந்த இடமும் சூழ்நிலையும் சரியானதா, பொருத்தமானதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் நேரில் பார்த்து தீட்சை அளித்த மனிதர்களைவிட, நான் நேரில் பார்க்காமல் என்னிடம் தீட்சை பெற்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். நமது யோக நிகழ்ச்சிகளுக்கு வராமலும், என்னைப் பார்க்காமலும், என்னைப்பற்றி கேள்விப்படாமலும் இருக்கிற லட்சக்கணக்கான மனிதர்களுக்கும் நான் தீட்சையளித்திருக்கிறேன்.

யாருடன் இருக்கும்போது, மிக மிக அசௌகரியமாக உணர்கிறீர்களோ, அவர்தான் உங்கள் குரு. ஆனால், ஏதோ ஒன்று மீண்டும், மீண்டும் உங்களை அங்கேயே ஈர்க்கிறது. நான் அதைப் போதுமான அளவுக்கு செய்திருக்கிறேனா? இல்லாவிட்டால் சொல்லுங்கள், இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்திவிடுவோம்.

நான் உங்களைத் தொல்லைப்படுத்துவது ஏன் என்றால், உங்களுக்குள் உள்ள குறுகிய தேவைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் எல்லையற்றதைத் தேடுவதற்கான ஏக்கமும் சாத்தியமும் உங்களுக்குள் எழும். எல்லையோடு உள்ளவற்றுடன் நீங்கள் மிகவும் சௌகரியமாக ஆகிவிட்டால், எதற்காக எல்லையற்றதை நாம் தேட வேண்டும்?