இறந்தபின்தான் சொர்க்கம் என்று நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் புகட்டப்பட்டுள்ளது. உண்மையில் சொர்க்கம் இறந்தபின்தானா? இல்லை... வாழ்க்கையையே சொர்க்கம்போல் அழகாக மாற்றிக்கொள்ள சத்குருவின் ஆசிகள் இங்கே...

சத்குரு:

எகிப்திய பாரம்பரியம், சொர்க்க வாசலில் ஒருவர் நுழையும்போது அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்கிறது. இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் “ஆம்” என்றால் அனுமதி உண்டு, இல்லாவிட்டால் அனுமதி மறுக்கப்படும். முதல் கேள்வி என்னவென்று தெரியுமா?

வாழ்வின் அழகே நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதில் அல்ல, எப்படி இருக்கிறீர்கள் என்பதிலேயே உள்ளது.

“உங்கள் வாழ்வில் சந்தோஷத்தை உணர்ந்திருக்கிறீர்களா?” இரண்டாம் கேள்வி, “உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு சந்தோஷத்தை விளைவித்திருக்கிறீர்களா?” இதற்கு உங்கள் பதில் “ஆம்” என்றால், நீங்கள் ஏற்கனவே சொர்க்கத்தில்தான் இருக்கிறீர்கள் என்றே நான் சொல்வேன்.

சந்தோஷமான மனிதராக மாறுவதே உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள உயிர்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய சிறப்பான விஷயம். கோபமும், காழ்ப்புணர்ச்சியும், சகிப்புத்தன்மை இன்மையும் இன்று மனித மனங்களில் அகோர ரூபமாய் வடிவம் பெறத் துவங்கிவிட்டது. இதனைத் தவிர்ப்பதற்கு சந்தோஷமான மனிதர்கள் மட்டுமே ஒரே மூலதனம். சந்தோஷமாய் வாழ்வதன் அருமை உணர்ந்தவர்கள் மட்டுமே தன்னைச் சுற்றி இனிமையை பரப்பும் முயற்சியில் ஈடுபடுவர். படைப்பின் மூலத்தை உங்களுள் செயல்பட அனுமதித்தால், நீங்கள் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க முடியும்.

நீங்கள் தொடும் ஒவ்வொன்றும் சந்தோஷமாய் மாறும் நிறைவினை நீங்கள் உணர்வீர்களாக. வரும் நாட்கள், ஓர் அர்ப்பணிப்பாக மலர்ந்து, தழைக்கட்டும். உங்களை அர்ப்பணிக்கும் மனப்பான்மையில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு உங்களால் செய்யக்கூடிய சிறப்பானவற்றையே செய்யுங்கள். இந்த நிலையில்தான் நீங்கள் முயற்சியில்லாமல் ஒளிர்வீர்கள். வாழ்வின் அழகே நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதில் அல்ல, எப்படி இருக்கிறீர்கள் என்பதிலேயே உள்ளது. நீங்கள் தெய்வீகத்தைப் பெற தகுதி வாய்ந்த அர்ப்பணமாக ஆவீர்களாக, தெய்வீகத்தின் ஆனந்தத்தை உணர்வீர்களாக.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.