சிவப்பு மற்றும் நீல நிறத்தின் முக்கியத்துவம் என்ன?
நாம் உடுத்தும் உடை முதல் அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்கள் வரை நமக்கு பிடித்த நிறங்களில் அவற்றைத் தேர்வு செய்கிறோம். இந்த வர்ணங்களுக்கு ஏதேனும் பொருள் உண்டா, அது நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்? தெரிந்துகொள்வோம் இக்கட்டுரைகளில்...
 
 

வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்? பகுதி 1

நாம் உடுத்தும் உடை முதல் அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்கள் வரை நமக்கு பிடித்த நிறங்களில் அவற்றைத் தேர்வு செய்கிறோம். இந்த வர்ணங்களுக்கு ஏதேனும் பொருள் உண்டா, அது நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்? தெரிந்துகொள்வோம் இக்கட்டுரைகளில்...

சத்குரு:

மனித விழிப்புணர்வு அல்லது ஒரு ஆன்மிக செயல்முறை, இதில் வர்ணம் எந்த அளவு முக்கியம்? நீங்கள் பிரதிபலிக்கும் வர்ணம் இயல்பாகவே உங்கள் "ஆரா"வில் (ஒளி வட்டம்) சேரும். துறவறம் பூண்ட ஒருவர் எந்த உடையும் அணிந்து கொள்ள விரும்புவதில்லை, ஏனென்றால் புதிதாக எதையும் சேர்த்துக்கொள்ள அவர் விரும்புவதில்லை. இருப்பவற்றைக் கொண்டு தொடர்ந்து வேலை செய்யவே விரும்புவார். இருப்பவற்றைக் கொண்டு செயல் செய்வதே பெரிய விஷயம். மேலும் ஒன்றை சேர்த்துக்கொண்டால் சிக்கல்தான். ஆதலால் சிலர் ஒன்றும் அணியாமல் நிர்வாணமாக இருப்பார்கள். சமூகத்தில் நிர்வாணமாக இருப்பது சிரமமாக இருந்தால் கோவணம் மட்டும் உடுத்திக் கொள்வார்கள். அதிகமாக எதையும் சேர்த்துக் கொள்ள விரும்பாததுதான் அடிப்படைக் காரணம். தாங்கள் இருக்கும் நிலையே குறிப்பிடத்தக்க அளவில் போதுமானது என்பது அவர்களுக்கு தெரியும். அதில் வேறு பல அம்சங்கள் இருந்தாலும், இது வர்ணத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது.

ஒருவரின் ஆரா தூய வெண்மை நிறத்தில் இருந்தால் அவர் தூய்மையானவர் எனலாம். அவரின் இருப்பே அற்புதமாக இருக்கும்.

முதலில் நிறம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஒரு பொருளின் நிறம் எனப்படுவது, அந்த பொருள் நிராகரிக்கும் அல்லது பிரதிபலிக்கும் ஒன்று, அது அந்த பொருள் அல்ல. எதோ ஒன்று சிவப்பாக இருக்கிறது என்றால், வெளிச்சத்தில் இருக்கும் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, சிவப்பை மட்டும் பிரதிபலிக்கிறது. அதனால் சிவப்பு என்றால் அந்தப் பொருள் சிவப்பு அல்ல. நீங்கள் உலகில் என்ன வெளிப்படுதுகிறீர்களோ அந்த தன்மை உங்களுடையதாகிறது.

சிவப்பு வர்ணம் என்றால் என்ன?

நீங்கள் ஒரு காட்டில் நடந்து சென்றீர்களானால் பச்சை பசேல் என்று இருக்கும், நடுவில் எங்கேயாவது ஒரு சிவப்பு மலர் மலர்ந்திருந்தால் அது உங்கள் கவனத்தை ஈர்க்கும் ஏனென்றால் உங்கள் புரிதலில் சிவப்புதான் மிக துடிப்புள்ள, வசீகரமான வர்ணம். மற்ற வர்ணங்கள் அழகாகவும், நன்றாகவும் இருக்கலாம் ஆனால் சிவப்பு மிக வசீகரமானது.

உங்களுக்கு வேண்டிய முக்கியமான சில பொருள்கள் சிவப்பாக இருக்கும். உதாரணமாக உங்கள் ரத்தத்தின் நிறம் சிவப்பு. மனிதனின் விழிப்புணர்வில், மற்ற நிறங்களை விட சிவப்பு நிறம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். உணர்ச்சிபூர்வமான எதுவும் சிவப்பு. ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு - நகரத்தை சிவப்பு வர்ணமாக ஆக்குவது’ (“painting the town red!” ) என்று. நாம் படைத்த தெய்வ சிலைகளில், பெண் தெய்வங்கள் தான் மிக உணர்வு பூர்வமானது. லிங்கபைரவியின் நிறம் சிவப்பு, ஏனென்றால் அவள் உணர்ச்சிபூர்வமானவள், அதனால் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறாள். அவளுடைய முழுமையான துடிப்பானது, உணர்வு பூர்வமானது. அதனால் உங்களுக்கு சிவப்பாக இருக்கிறாள்.

நீல நிறத்தின் அர்த்தம்

நீலம் அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளும் ஒரு நிறம். பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும், விசாலமாக, உங்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் அது நீல நிறத்தில் இருக்கும். பெரும் கடலோ அல்லது ஆகாயமோ, நீலமாக இருக்கும். உங்களின் புரிந்து கொள்ளும் தன்மையை தாண்டி இருக்கும் எதுவும் நீல நிறத்தில் இருக்கும். ஏனெனில் நீல நிறத்தின் அடிப்படை தன்மை எல்லாவற்றையும் தன்னுடன் இணைத்துக்கொள்வது. இதனாலேயே இந்தியாவில் கடவுள்களை நீல நிறத்தில் சித்தரித்தார்கள். சிவன், கிருஷ்ணன், ராமன் எல்லோரும் நீல நிறமாக இருந்தார்கள். அப்படி என்றால் அவர்கள் உடல் நீல நிறத்தில் உள்ளது என்றில்லை எல்லாவற்றையும் தன்னுடன் சேர்த்துகொள்ளும் தன்மை கொண்டு இருந்தார்கள்.

இதில் வேறு ஒரு அம்சமும் இருக்கிறது. ஒருவரின் பரிணாம வளர்ச்சியில், அவரின் ஆரா பல்வேறு நிறங்களை உள்வாங்கும். நமது பயிற்சியில் ஆக்னா சக்கரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், ஆரஞ்சு நிறம் பிரதானமாக இருக்கும். அது துறவறத்தின், க்ரியாவின் நிறம். ஒருவரின் ஆரா தூய வெண்மை நிறத்தில் இருந்தால் அவர் தூய்மையானவர் எனலாம். அவரின் இருப்பே அற்புதமாக இருக்கும். ஆனால் அவர் செயல்திறன் மிக்கவர் என்று சொல்ல முடியாது. ஒருவர் தன்னுடைய உயர்ந்த நிலையை அடைந்தாலும், உலகில் செயல்திறன் உள்ளவராக இருந்தால், அவருடைய பிரதிபலிப்பு நீல நிறமாக இருக்கும். ஆற்றல் மிக்கவர்கள் நீல நிறமாக இருந்தார்கள். இந்த வகை ஆரா இருப்பவர்களின் செயல்பாடுகளை பார்த்து மக்கள் அவர்களை அதீத ஆற்றல் உடையவர்கள் என கருதினார்கள்.


அடுத்த வாரம்...

காவி மற்றும் வெள்ளை நிறங்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வோம்...

வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்? தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1