சிறந்த மனிதர்கள், சிறந்த தேசம் - மாணவர்களிடம் உரையாற்றிய சத்குரு

பாரத நாட்டின் 68வது குடியரசு தினம், நேற்று ஈஷா ஹோம் ஸ்கூலில் கொண்டாடப்பட்டது. மஹாவீர் சக்ரா விருது பெற்ற கடற்படை அதிகாரி திரு. S.K. குப்தா அவர்கள் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார். 68வது குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து சத்குரு மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் வழங்கிய எழுச்சிமிக்க உரை...
சிறந்த மனிதர்கள், சிறந்த தேசம் - மாணவர்களிடம் உரையாற்றிய சத்குரு. Sirantha manithargal - sirantha desam - manavargalidam uraiyatriya sadhguru
 

பாரத நாட்டின் 68வது குடியரசு தினம், நேற்று ஈஷா ஹோம் ஸ்கூலில் கொண்டாடப்பட்டது. மஹாவீர் சக்ரா விருது பெற்ற கடற்படை அதிகாரி திரு. S.K. குப்தா அவர்கள் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார். 68வது குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து சத்குரு மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் வழங்கிய எழுச்சிமிக்க உரை...

சத்குரு:

கடற்படை அதிகாரி திரு. S.K. குப்தா அவர்களையும் அவரது துணைவியாரையும் குடியரசு தின விழாவிற்கு வரவேற்கிறோம். ஒரு வகையில் பார்த்தால் ஒவ்வொரு மனிதருமே அவரவர்க்கு கடற்படை அதிகாரி தானே. சிறிதோ பெரிதோ, நம் வாழ்க்கை படகை நாமே தானே கரையேற்றுகிறோம்.

பெரிய கப்பலை கையாள்வது கொஞ்சம் சிக்கலானதாக தோன்றலாம். ஆனால், சாகசங்கள் என்று வரும்போது அதற்கு சற்றும் சளைத்தது அல்ல சிறிய படகு. அடிப்படையாக, நம் படகை, நம் வீட்டு கொல்லைப்புறத்தில் இருக்கும் சிறிய குளத்தில் செலுத்தப் போகிறோமா அல்லது கடலில் செலுத்த துணிகிறோமா என்பதே சாகசத்தின் அளவை நிர்ணயிக்கிறது. கடலில் செலுத்த துணியும்போது சிறிய படகுகள் இன்னும் அதிகமான சவால்களை வழங்குகிறது.

உங்கள் வாழ்க்கையில், உங்கள் முன் இருக்கும் வாய்ப்புகளில் இருந்து மிகச்சிறந்த பயணமாக அமையக்கூடிய வாய்ப்புள்ள ஒன்றை துணிவுடன் தேர்ந்தெடுக்க, உறுதியான தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நேரமிது.

இந்த குடியரசு தினத்தில், நம் தேசம் பெரிய கப்பல் போல நிற்கிறது - 130 கோடி மக்கள் நிறைந்த கப்பல். பொதுவாக, பெரும்பாலான தேசங்கள் மொழி, மத, இன, கலாச்சார அடிப்படையிலேயே உருவாகிறது. இதில் நம் பாரத தேசம் வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் வேற்றுமைகளால் நாம் இணைந்து இருக்கிறோம். இது இன்று நேற்றல்ல, எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது. இது சவாலை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்குகிறது - நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை தக்க வைத்துக்கொண்டே அனைவரும் இணைந்து ஒரு தேசமாக, ஒரே திசையில் பயணிக்கிறோம்.

இன்றைய குழந்தைகளே நாளைய நம் தேசத்தின் தலைவர்கள். எனவே, இந்த நேரத்தில் உங்கள் உடல், மனம், அறிந்து கொள்தல் என அனைத்தையும் மேம்படுத்த வேண்டியது முக்கியமாகிறது அல்லவா? அது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையில், உங்கள் முன் இருக்கும் வாய்ப்புகளில் இருந்து மிகச்சிறந்த பயணமாக அமையக்கூடிய வாய்ப்புள்ள ஒன்றை துணிவுடன் தேர்ந்தெடுக்க, உறுதியான தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நேரமிது.

இந்த குடியரசு தினம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. கடினமான வானிலையை கடந்துசெல்ல மிக தீவிரமாக நம் தேசம் முயன்று வருகிறது. இந்நிலையை நாம் காலகாலமாக தவிர்த்தே வந்திருக்கிறோம். கடினமான வானிலை தோன்றும்போது, நாம் திரும்பிக் கொள்வோம். ஆனால், இம்முறை இந்த கடினமான வானிலையின் ஊடே கடந்து செல்ல நாம் விரும்புகிறோம். இந்த சவாலை வெற்றிகரமாக கடந்தால், நமக்கு முன் ஒரு பெரும் வாய்ப்பு காத்துக் கொண்டு இருப்பதை நாம் அறிவோம். இந்த சூழ்நிலையை கடந்து செல்ல நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த நேரத்தில் நம் தேசத்திற்கு தேவை.

நம் தேசத்தின் பெருமைகளை பற்றி பேசும் போதெல்லாம், பொதுவாக அது இறந்தகாலம் பற்றி குறிப்பிடுவதாக "ஒரு காலத்தில் நாங்கள் மாபெரும் தேசமாக இருந்தோம்," என்ற ரீதியிலேயே இருக்கிறது. ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் மற்றும் நம் தேசத்தின் குழந்தைகள் எல்லோரும் நம் தேசத்தின் பெருமைகளை பற்றி பேசும்போது, அது நேற்றை பற்றியதாக இல்லாமல், நாளையை குறித்ததாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும் ஆசியும்.

இந்த நாளில் நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு வலிமையானவராக, எதையும் எதிர்கொள்பவராக, அற்புதமானவராக, திறமையானவராக இன்று மாறுகிறீர்களோ, அதே அளவுக்கு இந்த தேசமும் உலகும் நாளை மாறும்.

உயர்வான, சிறந்த தேசத்தை உருவாக்குகிறேன் என்று தனியாக ஏதும் முயற்சி செய்ய தேவையில்லை. நாம் சிறந்த மனிதர்களை மட்டுமே உருவாக்கினால் போதும். சிறந்த மனிதர்கள் உருவான உடன், சிறந்த தேசமும், சிறந்த உலகமும் நாளை இயல்பாகவே மலரும்.