திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள், தங்களுக்கு வரப்போகும் துணையைப் பற்றி பல கற்பனை பிம்பங்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள். அப்படி இருந்தாலும், அந்தத் துணை நல்ல, சிறந்த மனிதராக இருப்பாரா.... அவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி? இக்கேள்விக்கு சத்குரு தரும் பதில் இங்கே...

Question: திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு ஏற்ற சிறந்த கணவரை எப்படித் தேர்ந்தெடுப்பது?

சத்குரு:

இந்த உலகில் நூறு சதவீதம் சிறந்தவர் என்று யார் இருக்கிறார்கள்? அப்படி யாருமே இல்லை. உலகில் மிகச் சிறந்த செயல் என்று எதுவுமே கிடையாது. நீங்கள் எந்தச் செயல் செய்தாலும், அது எல்லோருக்கும் திருப்திகரமாக, நல்ல விதமாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மிகச் சிறந்த மனிதனைத் தேடுவதை நிறுத்துங்கள். அப்படி ஒருவர் கிடைக்கவே போவதில்லை. உங்கள் இதயம் யாரிடமாவது நேசம் கொள்கிறதா? யாரிடமாவது தாவிப் போகிறதா? யாரிடமாவது பகிர்ந்து கொள்வதற்கான ஆர்வம், வருகிறதா? அவரையே உங்களுக்குச் சிறந்த துணையாகத் தேர்ந்தெடுக்கலாம்.

அவர் தான் உலகில் சிறந்த கணவரா? அப்படியல்ல. அவரிடம் குறைகள் இருக்கும். ஆனால், அந்த உறவை மிகச் சிறந்த உறவாக உங்களால் மாற்றிக் கொள்ள முடியும். கவனமோ, தெளிவோ இன்றி வாழ்க்கையை அணுகினால், எந்த உறவையும் மிக அசிங்கமான உறவாக மாற்றி விட முடியும். இரண்டு நிலையும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது.

முட்டாளுடன் கூட வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். அந்த உறவு அற்புதமாக அமைய வேண்டும் என்பது உங்கள் விழைவாக இருக்கும் பட்சத்தில் அதை அப்படி அமைத்துக் கொள்ள வேண்டிய கவனம் உங்களுக்குத் தான் தேவை.

ஒவ்வொரு கணமும் அதே கவனத்தோடு, அதே விழிப்புணர்வோடு உறவை அணுகுங்கள். பத்து வருடங்கள் ஒழுங்காகத் தான் இருந்தேன். ஒரே ஒரு கணம் தான் தவற விட்டு விட்டேன் என்பது இங்கே செல்லுபடியாகாது.

Question: ஆரோக்கியமான வாழ்வுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?

சத்குரு:

ஒரு நாளைக்கு 25 அல்லது 30 நிமிடங்கள் உங்களுக்காக முதலீடு செய்ய நீங்கள் முதலில் தயாராக வேண்டும். உங்கள் அக ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறு சிறு ஆன்மீகப் பயிற்சிகள் பல உள்ளன. உங்கள் உடல் நலத்தைப் பேணும் பயிற்சிகளும் அதில் அடங்கியிருக்கும். இந்த உலகில் 70 சதவீத நோய்கள் மனிதனே உருவாக்கிக் கொள்பவை. அவற்றைத் தவிர்த்து விட்டால், உலகின் ஆரோக்கியத்தைக் கையாள்வது மிகச் சுலபம்.

Question: உங்கள் அன்றாட அட்டவணை என்ன?

சத்குரு:

பல வகுப்புகளை அமைப்பதிலும், எடுப்பதிலும் நேரம் செலவாகிறது. மேலும், சந்திப்புகள், மாநாடுகள், உரையாற்றல்கள் என்று தினமும் ஏதாவது வேலை இருக்கும்.

தவிர, ஈஷாவின் நிர்வாக வேலைகள், திட்டமிடல்கள் இவையும் என் நேரத்தைப் பங்கிட்டுக் கொள்கின்றன. ஈஷா ஆசிரமத்தின் ஒவ்வொரு கட்டுமானமும் என்னால் வடிவமைக்கப்பட்டதுதான். கட்டிடங்கள் எழுப்புவதிலும் ஈடுபாடு காட்டுகிறேன். ஒரு கதவின் கைப்பிடி கூட எந்த மாதிரி இருக்கலாம் என்பதில் கவனம் செலுத்துகிறேன்.

ramnath bhat@flickr