'எல்லாம் ஈசன் செயல்' என்று, அதை முழுமையாய் உணர்ந்தவர்கள் சொல்லக் கேட்ட நம்மவர்கள், அதையே சாக்காக சொல்லி தங்களால் முடிந்தவற்றையும் செய்யாத சோம்பேறிகளாக இன்று உலாவருகிறார்கள். இப்படி விதி பற்றி சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சத்குரு அளித்த சுவாரசியமான பதில்கள் இங்கே...

Question: சிலருடைய தலையெழுத்தை மாற்றவே முடியாது என்கிறார்களே?

சத்குரு:

"மழை பெய்கிறது. அது மலை மீது விழுந்து, அருவியாக வீழ்கிறது. பின் கிளை நதிகளாகப் பிரிந்து, ஆழங்களைத் தேடி ஓடி, இறுதியில் கடலில் கலக்கிறது. நதி பிறந்ததே, கடலைத் தேடி, அதனுடன் ஒன்று சேரத்தான் என்று சொல்வது கவிதைகளுக்குத்தான் உதவுமே தவிர, அது நதியின் தலையெழுத்து அல்ல!

வழியில் அணை கட்டித் தடுத்தால், கடலுடன் சேர முடியவில்லையே என்று நதி தற்கொலை செய்து கொள்ளப் போவதில்லை. அதேபோல், நதியைவிட கடலின் மட்டம் சற்றே உயர்ந்து அமைந்துவிட்டால், நிலைமை மாறிடுமே! அப்போது, கடல் நதியைத் தேடி வருமா, நதி கடலைத் தேடிப் போகுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சங்கரன்பிள்ளையும், அவர் மனைவியும் ஓடையில் குளித்துக் கொண்டிருந்தார்கள். மனைவிக்குக் கால் வழுக்கியது. தண்ணீர் அவளை அடித்துக் கொண்டு போனது. உடனே சங்கரன்பிள்ளை உள்ளே குதித்து, தண்ணீர் ஓட்டத்துக்கு நேர்எதிர் திசையில் அவளைத் தேடிப் போக ஆரம்பித்தார்.

கேட்டதற்கு, "என் மனைவியைப் பற்றி எனக்குத் தெரியாதா? மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்றால் அவளுக்கு நேர்மாறான வேறு நியாயம். அதனால், அவளைத் தண்ணீர் மேலேதான் அடித்துக் கொண்டு போயிருக்கும்" என்றார்.

ரசிப்பதற்காகத்தான் மிகைப்படுத்தப்பட்ட கதைகளும், கவிதைகளும்! அவற்றையே விதிமுறைகளாக நினைத்தால், முட்டாளாகிப் போவீர்கள். விதி பற்றிய கட்டுக் கதைகளை வீசியெறிந்துவிட்டு, எதையும் விழிப்புணர்வுடன் கவனித்து, கையாளும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் வளர்த்துக் கொண்டுவிட்டால், அப்புறம் எந்த விதியாலும் உங்களை அசைக்க முடியாது!"

Question: நான் கேட்பது எதுவுமே கிடைப்பது இல்லையே?

சத்குரு:

"ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் படைப்பில் எந்த சக்தியும் உங்களுக்கு எதிராக செயல்படவில்லை. எதுவுமே நீங்கள் கையாளும் விதத்தில்தான், ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் மாறுகிறது.

ஒருநாள் அதிகாலையில் சூரியன் உதிப்பதைப் புகைப்படம் எடுக்க நினைக்கிறீர்கள். அன்று பார்த்து வானம் பொத்துக் கொண்டு மழை பெய்கிறது. உங்கள் எண்ணம் ஈடேற முடியாமல் போனதை நினைத்து, உலகத்தின் மீதே கோபித்துக் கொண்டு, சோர்வாக ஓர் அறையின் மூலையில் முடங்கிக் கொண்டீர்கள் என்றால், உங்களுக்காகப் பரிதாப்பட்டு இயற்கை தன்னை மாற்றிக் கொள்ளுமா, என்ன?

சூரிய உதயத்தை படம் பிடிக்க முடியாவிட்டால் என்ன, அதை விட்டுவிட்டு, மழையை ஆர்வத்துடன் கவனியுங்கள். ஒருவேளை, அற்புதமான வானவில்லைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கலாம். கிடைத்தற்கரிய புகைப் படமாகவும் அது அமையலாம். இல்லை, அது வேண்டாம் எனில், குவிந்து போயிருக்கும் உங்கள் வீட்டு வேலைகளைச் செய்து முடிக்க உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரமாக அதை ஏற்றுக் கொள்ளலாமே!

உங்களை மீறிய சக்திகளால், நீங்கள் செய்ய நினைத்ததை செய்ய இயலாமல் போகலாம். ஆனால், செய்யக்கூடியதையும் செய்யாமல் சோர்ந்து கிடப்பது, பைத்தியக்காரத்தனம் அல்லவா?"

Question: எதைச் செய்தால் எனக்கு சந்தோஷம் கிடைக்கும்?

சத்குரு:

"ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்னால் ஒரு காரை கிளப்ப வேண்டுமானால், தள்ளிவிட இரண்டு வேலைக்காரர்கள் தேவைப்பட்டது. அதன் பின்னர், நீளமான கம்பி ஒன்றை முன்புறம் வைத்து, சுழற்றித் திருப்ப ஒருவர் இருந்தாலே போதும் என நிலைமை மாறியது. இப்போது அடுத்தவர் உதவியின்றி, பாட்டரி சக்தியில் கிளம்பும் அளவிற்கு கார் தயாரிப்பில் முன்னேற்றம் வந்துவிட்டது. ஆனால், கார் மீது கவனம் இருந்த அளவிற்கு மனிதனுக்குத் தன் மீது கவனம் இருக்கவில்லை. அவனுக்கு சந்தோஷம் வேண்டுமெனில், அதற்கான 'செல்ஃப் ஸ்டார்ட்' அவனிடம் இல்லை. அதற்கு பதிலாக, பங்களா, குழந்தை, பிரமோஷன், பிஸினஸ் என்று வெளியிலிருந்து ஏதாவது உந்துதல் தேவையாய் இருக்கிறது. இவையெல்லாம் கிடைத்தாலும், வேறு விதத்தில் அவனுக்கு மன அழுத்தம் கூடிவிடுகிறது.

வாழ்க்கையின் அழகு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அல்ல. செய்யும் காரியத்தில் எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. எனவே, நீங்கள் எதைச் செய்தாலும், அதை முழுமையான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். நிச்சயம் சந்தோஷம் கிடைக்கும்!"