குழந்தைகள், பெரியோர்கள், குடும்பஸ்தர்கள் அல்லது யோகிகள் - இப்படி அனைவரும் சிவனின் விசிரிகள்தான். சிவன் எப்படி இப்படி cool ஆக இருக்கிறார்? அதற்கான 5 காரணங்கள் இங்கே...

#1 அனைத்தையும் ஏற்றுக்கொள்பவன். அனைவரோடும் கலப்பவன்

சத்குரு:

கடவுளர்கள் மட்டுமே சிவனை வணங்குவதில்லை. அரக்கர்கள் பூதகணங்கள் என எல்லா உயிர்களும் அவனை வணங்குகிறார்கள். பேய்கள், பிணந்தின்னிகள், பூதங்கள், பிசாசுகள், அரக்கர்கள், பிறர் நெருங்கக்கூட துணியாத அத்தனை உயிர் உருக்களையும் சிவன் ஏற்றுக்கொண்டான்.

அவனது திருமணத்தில் பெரியோரும், சான்றோரும், முக்கியஸ்தர்களும், ஒன்றுமற்றவர்களும் கலந்துகொண்டனர். கடவுளர்களும் தேவர்களும், அசுரர்களும் பூதங்களும், அறிவில்லா ஜீவராசிகளும், பேய் பிசாசுகளும் பங்கேற்றனர். இயல்பாக, இவர்களில் ஒருவர் மற்றவரோடு ஒத்துபோவது கிடையாது என்பது உலகறிந்த விஷயம். ஆனால், சிவனின் திருமணத்திற்கு அனைவரும் வந்திருந்தனர். அவன் பசுபதியாய் இருப்பதினால் அனைத்து மிருகங்களும் வந்திருந்தன. பாம்புகள் வராமல் இருக்குமா? அவைகளும் இருந்தன. பறவைகளும் பூச்சிகளும் கூட திருமணத்தை தவறவிடவில்லை. உயிர்வாழும் ஒவ்வொரு ஜீவனும் திருமணத்தில் கலந்துகொண்டன.

சிவனைப் பற்றி பேசும்போது நாம் உயர்குலத்தைச் சேர்ந்த நாகரிகமான ஒரு மனிதனை பற்றி பேசவில்லை. அனைத்திற்கும் மூலமானவனை, உயிரில் ஒன்றிய நிலையில் இருப்பவனை பற்றி பேசுகிறோம். அவன் வழுவாத விழிப்புணர்வு நிலையால் உயர்ந்தவன். துளிகூட பாசாங்கு அற்றவன். என்றும் தன்னிச்சையானவன். என்றென்றும் புதுமைப்பித்தன். முடிவில்லா ஞானி. எளிமையாய் சொன்னால் அவன் உயிரும் ஆனவன்.

#2 ஆண்மையின் சின்னம், ஆனாலும் பெண்மையுடன் தொடர்புடையவன்

சத்குரு:

பொதுவாக சிவன், உச்சகட்ட ஆண்தன்மையின் அடையாளம். ஆனாலும், அவனது அர்த்தநாரீஷ்வர ரூபத்தில், சரி பாதி பெண்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பரவசநிலையில் இருந்த சிவனை கண்ட பார்வதி அவனிடம் மையல் கொண்டாள். அவன் காதலை பெற பார்வதி பல வழிகளில் முயன்றபின், பல உதவிகளை நாடியபின், அவர்களின் திருமணம் நடந்தேறியது. இயல்பாக தன்னுடைய அனுபவங்களை சிவன் பார்வதியுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினான். பார்வதி சொன்னாள், "உங்களுள் நிலவும் இந்தப் பரவசத்தை நானும் உணரவேண்டும். அதற்கு என்ன செய்ய? சொல்லுங்கள். எத்தவமாயினும் மேற்கொள்ள துணிந்தவளாய் இருக்கிறேன்." புன்னகைத்த சிவன் சொன்னான், "நீ எந்த தவமும் மேற்கொள்ள தேவையில்லை. சற்றே வந்து என் மடியில் அமர்."

பார்வதி எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி அவனது இடது தொடை மீது அமர்ந்தாள். திறந்தநிலையில், தன்னை முழுமையாக அவன் கைகளில் ஒப்படைத்தாள், அவளை அவன் தன்னுள் இணைத்துக்கொண்டான். அவனின் பாகமாக்கிக் கொண்டான்.

அவன் அவளுக்கு தன் உடலில் இடமளிக்க வேண்டுமென்றால், அவனது ஒரு பாதியை இழந்தாக வேண்டும். தன்னை இழந்து அவளை ஏற்றுக்கொண்டான். இதுவே அர்த்தநாரிஷ்வரனின் கதை. ஒருவருக்குள் ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசமமாய் உள்ளது என்பதையே இது நமக்கு வெளிப்படுத்துகிறது. அவளை இணைத்துக் கொண்டபோது, அவன் பரவச நிலையை அடைந்தான். ஒருவருக்குள் ஆண்தன்மையும் பெண்தன்மையும் ஒன்றிணைந்தால் அவர் நிலையான பரவசத்தில் இருப்பார் என்பது இதன்மூலம் நமக்கு உணர்த்தப்படுகிறது. அதையே புற-வழியில் முயன்றால் அது நிலைப்பதில்லை. அதனால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் ஒரு முடிவில்லா நாடகமே.

#3 நடன மேடையை நொறுக்குபவன்

சத்குரு:

நடராஜர் - நடனத்தின் இறைவனாய் விளங்குபவன். அணுதகர்ப்பு போன்ற நிகழ்வுகள் நிகழும் சுவிஸ்சர்லாந்தில் உள்ள CERN மையத்திற்கு நான் சென்றபோது, அங்கே நுழைவாயிலில் நடராஜர் சிலை உள்ளதைக் கண்டேன். அவர்கள் மேற்கொண்டுள்ள திட்டத்தோடு அடையாளப்படுத்தக் கூடிய ஒரு வடிவத்தை மனித கலாச்சாரத்தில் அவர்கள் காணாததால், நடராஜர் சிலையை ஸ்தாபித்துள்ளனர். நடராஜர் - படைத்தலின் எழுச்சியை குறிக்கிறார்; பிரபஞ்சத்தின் நிச்சலனத்திலிருந்து தன்னை சுயமாய் உருவாக்கிக் கொண்ட படைத்தலின் நடனம் அது.

#4 பரமானந்தத்தில் லயித்திருப்பவன்

சத்குரு:

சிவன் எப்பொழுதும் ஒரு குடிகாரனாக சித்தரிக்கப்படும் அதே நேரத்தில் பெரும் யோகியாக அறியப்படுகிறான். அவன் குடியிலும் களிப்பிலும் ஆழ்ந்திருப்பதால், சாராயக் கடைகளை தேடி அலைபவன் என்று அர்த்தம் அல்ல. ஒருவர் சலனமற்று இருக்கவும், அதீத ஆனந்த களிப்பில் திளைத்திருக்கவும் யோக விஞ்ஞானம் வழி செய்கிறது.

ஒரு இஸ்ரேல் விஞ்ஞானி, பல ஆண்டுகள் மனித மூளையை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார். அதன் முடிவில், பல லட்சம் கஞ்சா உணரும் நரம்பியல் ஏற்பிகள் மனித மூளையில் இருப்பதை கண்டறிந்தார். மனித உடல் இந்த ஏற்பிகளுக்காக கஞ்சா போன்ற ரசாயனத்தை தானே உருவாக்க வல்லது என்பதை நரம்பியல் நிபுணர்கள் பின்னர் கண்டுபிடித்தனர். ஏற்பிகளை நோக்கிச் செல்லும் இந்த புது வகையான ரசாயனத்தின் தன்மைக்கு ஏற்புடைய பெயர் வைக்க அந்த விஞ்ஞானி விருப்பம் கொண்டார். பல மறைநூல்களை ஆராய்ந்தபோது, ஆச்சர்யத்தக்க வகையில் இந்திய வேதநூல்கள் மட்டுமே இந்த சுகானுபவத்தை "ஆனந்தம்" என்று குறிப்பிட்டிருந்ததை அவர் கண்டறிந்தார். அதனால், அந்த ரசாயனத்தை "ஆனந்தமைத்" என்று அழைத்தார்.

அதனால், நீங்கள் சிறிதளவு "ஆனந்தமைத்" உற்பத்தி செய்தால் மட்டும் போதும். ஏனெனில், உங்களுக்குள் ஒரு கஞ்சா தோட்டமே இருக்கிறது. அதை சரியான முறையில் வளர்த்து பராமரித்தால் இந்த ஆனந்தலயத்தில் எப்போதும் இருக்கலாம்.

#5 விதிமுறைகளை தகர்த்தெறிபவன்

சத்குரு:

"சிவன்" எனும் அந்த அம்சம் மதம் சார்ந்தது அல்ல. நவீன உலகம், நீங்கள் பின்பற்றும் மதங்களின் பெயரில் பிரிவினைப்பட்டு உள்ளது. அதனால், ஏதோ ஒன்றை மக்கள் உச்சரிக்கும்போது, நீங்கள் ஒரு "குழு"வைச் சார்ந்தவர்போல் தோற்றம் ஏற்படுகிறது. இது மதம் அல்ல; உள்நிலை பரிமாணத்திற்கான விஞ்ஞானம். இது எல்லையை கடந்து போவதற்கும் முக்திக்குமான விஷயம். உங்கள் மரபியல் என்ன, உங்கள் தந்தை யார், என்னென்ன வரையறைகளோடு நீங்கள் பிறந்துள்ளீர்கள், என்னென்ன வரையறைகளை சுவிகரித்தீர்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல. நீங்கள் கடும் முயற்சி செய்யும் முனைப்போடு இருந்தால், இந்த எல்லைகளை எல்லாம் கடந்துவிட முடியும்.

இயற்கை மனிதனுக்கு சில விதிகளை விதித்துள்ளது. அந்த வரம்பிற்குள்ளேயே மனிதன் இருக்க வேண்டும் என கட்டுப்படுத்துகிறது. ஆனால், "பொருள்தன்மை சார்ந்த இயற்கை விதிகளை தகர்த்தெறிவதே ஆன்மீகம். சிவனோ இத்தகைய விதிமுறைகளில் எல்லாம் அடங்காதவன். எல்லையற்ற, அரூபமான, நிற்குண சிவனை நீங்கள் வழிபட முடியாது, ஆனால் அவன் குழுவில் இணைந்து கொள்ளலாம்."

இந்த சிவராத்திரி இரவு உறங்காமல் இருப்பதற்கு மட்டும் அல்ல தீவிர உயிர்ப்புடனும் விழிப்புடனும் இருப்பதற்கான இரவாக அமையட்டும். நீங்கள் இயற்கை அளிக்கும் இந்த அற்புதக் கொடையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதுவே என் ஆசையும் ஆசியும். பொங்கிப் பெருகும் இந்த காந்த அலையில் நீங்கள் பயணித்து "சிவன்" என்று நாம் சொல்கிறோமே அதன் அழகையும் பேரானந்தத்தையும் உணர்ந்து கொள்வீர்களாக.