சீறும் நேரத்தில் சீற வேண்டும்!
ஆன்மீகம் என்றால் அமைதியாக இருத்தல் மட்டும்தானா? இல்லை... சத்குரு சொல்லும் இந்த குட்டிக் கதையின் மூலம் ஆன்மீகம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பது புரியும்...
 
 

ஆன்மீகம் என்றால் அமைதியாக இருத்தல் மட்டும்தானா? இல்லை... சத்குரு சொல்லும் இந்த குட்டிக் கதையின் மூலம் ஆன்மீகம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பது புரியும்...

சத்குரு:

ஒரு கிராமத்தில் ஒரு பாம்பு வசித்து வந்தது. அந்த ஊர் மக்களிடத்தில் அந்தப் பாம்பு ‘துஷ்டன்’ எனப் பெயரெடுத்திருந்தது. தான் இருக்கும் பாதையில் யாரையும் அது செல்ல விடுவதில்லை. மக்கள் அது இருக்கும் வழியில் செல்வதற்கே அஞ்சி நடுங்கினார்கள். அந்தப் பாம்பு கடித்து பலபேர் உயிரிழந்தனர். எனவே ஊர் மக்கள் யாரும் பாம்பு வசிக்கும் பாதையில் செல்வதேயில்லை.

நான் உன்னைக் கடிக்க வேண்டாமென்றுதானே சொல்லியிருந்தேன், சீற வேண்டாமென்று சொல்லவில்லையே!

ஒரு நாள், ஒரு குரு அந்த ஊருக்கு வந்தார். அவர் அந்தப் பாம்பு இருக்கும் வழியில் செல்ல முற்பட்டார். ஆனால், அவரை ஊர்மக்கள் தடுத்தனர். அந்தப் பழிபாதக பாம்பினைப் பற்றி எடுத்துரைத்து, “அது உங்களைக் கொன்றுவிடும்!” என ஊர்மக்கள் எச்சரித்தனர். “பரவாயில்லை, நான் போகிறேன்!” என அந்த குரு பாம்பு இருக்கும் பாதையில் சென்றார். பாம்பு அவரைக் கவனித்தது. அவரைக் கடிப்பதற்காக வழிமறித்து நின்றது. ஆனால், அவரின் தோற்றம் அதனைச் சாந்தமடையச் செய்தது. கல்லாய் இருந்த அதன் மனம் கசிந்துருகியது.

அதன்பிறகு குரு, பாம்பிற்கு ஆன்மீக தீட்சை வழங்கினார். அவர் பாம்பிடம், “நீ இப்படி அடாவடியான பாம்பாக இருந்து என்ன சாதிக்கப் போகிறாய்? துஷ்டனாக இருந்து ஏன் உன் வாழ்வை வீணடிக்கிறாய்? இப்படியிருந்தால், நீ ஒரு நாயைப்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்! நீ மக்கள் கையில் பிடிபடாமல் போகலாம், ஆனால் எப்போதும் நாயைப்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமே” எனக் கூறினார். பாம்பின் மனம் மாறியது. அதன்பின் அந்தப் பாம்பு பிறரைக் கடிப்பதை நிறுத்தியது.

சிறிது காலத்தில் அந்த ஊரிலிருந்த சிறுவர்கள், பாம்பு தன் பல்லை இழந்துவிட்டது, இனி அது கடிக்காது என உணர்ந்துகொண்டனர், தைரியம் வந்துவிட்டது. பாம்பின் அருகில் வந்தனர்; கல்லெடுத்து எறிந்தனர்; கம்புகளைக் கொண்டு தாக்கினர். என்னென்ன வழிகளில் கொடுமைகளைச் செய்ய முடியுமோ, அதையெல்லாம் பாம்பிற்குச் செய்தனர். அதனால் அந்தப் பாம்பு தன் பொந்துக்குள்ளேயே உணவின்றி முடங்கிக் கிடந்தது.

ஒரு வருடம் கழித்து, குரு மீண்டும் அவ்வழியாக வந்தார். பாம்பு தன் குருவைக் காண ஆவலாகக் காத்திருந்தது. அவரின் பாதங்களில் சரணடைந்தது. நெடுநாட்கள் உணவின்றி இருந்த பாம்பின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. “என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறாய்?” என்றார் குரு. “நான் நெடு நாட்களாக உணவின்றி இருக்கிறேன். அதுதான் இப்படி இருக்கிறேன்” என்றது பாம்பு. “அது சரி! தலையிலும் உடம்பிலும் இரத்தக் காயங்கள் எப்படி வந்தது? சாப்பிடாமல் இருந்தால், காயங்கள் ஏற்பட வாய்ப்பில்லையே?!” எனக் கேட்டார் குரு. அதுவரை அந்தப் பாம்பு, ஊர்மக்களைப் பற்றி குருவிடம் எந்தக் குறையும் சொல்லவில்லை. அந்த அளவிற்கு பாம்பு ஏற்றுக்கொள்ளும் தன்மையைக் கொண்டிருந்தது. குரு மீண்டும் மீண்டும் கேட்டதால், வேறு வழியின்றி நடந்ததைச் சொன்னது பாம்பு.

அதைக் கேட்ட குரு, “நான் உன்னைக் கடிக்க வேண்டாமென்றுதானே சொல்லியிருந்தேன், சீற வேண்டாமென்று சொல்லவில்லையே! உன்னால் சீற முடியும். நீ அந்தச் சமயத்தில் சீறியிருக்கலாம். நீ ஆன்மீகம் என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய். எப்போது தேவையோ, அப்போது நீ சீற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நீ ஒரு பாம்பு என்பதை மறந்துவிடுவார்கள். நீ பாம்பாக சீறவில்லை என்றால், அவர்கள் உனக்கு எல்லா துன்பங்களையும் தருவார்கள்!” என்றார்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1