‘சத்சங்கம்’ என்றால் என்ன?
ஈஷாவின் மாத சத்சங்கம் அந்தந்த ஊர்களிலேயே மாதந்தோறும் நிகழ்ந்தாலும், அதன் முக்கியத்துவம் அறியாமல், அதில் கலந்துகொள்வதற்கு பலர் நேரம் ஒதுக்குவதில்லை! சத்சங்கத்தின் முக்கியத்துவங்களை சத்குரு இங்கே விவரிக்கிறார்! சத்சங்கம் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்பதை தொடர்ந்து படித்தறியுங்கள்!
 
‘சத்சங்கம்’ என்றால் என்ன?, Sathsangam endral enna?
 

ஈஷாவின் மாத சத்சங்கம் அந்தந்த ஊர்களிலேயே மாதந்தோறும் நிகழ்ந்தாலும், அதன் முக்கியத்துவம் அறியாமல், அதில் கலந்துகொள்வதற்கு பலர் நேரம் ஒதுக்குவதில்லை! சத்சங்கத்தின் முக்கியத்துவங்களை சத்குரு இங்கே விவரிக்கிறார்! சத்சங்கம் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்பதை தொடர்ந்து படித்தறியுங்கள்!

Question:சத்குரு, ஈஷா யோகா வகுப்புகள் நடக்கும் ஊர்களில் எல்லாம் மாதம் ஒருமுறை சத்சங்கமும் நடக்கிறது. எதற்காக சத்சங்கம் என்று எங்களுக்கு விளக்க முடியுமா?

சத்குரு:

‘சத்’ என்றால் சத்தியம் அல்லது உண்மை. ‘சங்கம்’ என்றால் உடனிருத்தல். எப்போதும் நீங்கள் சத்சங்கத்தில்தான் இருக்க வேண்டும். அதாவது உண்மையுடன் உடனிருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு உண்மையுடன் உள்ள தொடர்பு பகுதி நேரமாக மட்டுமே இருக்கிறது. எனவே அதற்கென்று ஒரு இடமும், நேரமும் அர்ப்பணிக்கப்படுவது நல்லது. எனவே ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சத்சங்கம் நடைபெறும். ஈஷா யோகா ஆசிரியர் ஒருவர் அங்கு இருப்பார்.

தப்பும் தவறுமாக வாழ்வை கையாள்வதன் காரணம், மனம் ஏதோ ஒரு அடையாளத்துடன் செயல்படுவதுதான். அது கண்ணாடி போல் வாழ்வைத் துல்லியமாகக் காட்டுவதில்லை.

உண்மையுடன் உடனிருத்தல் என்றால் என்ன? இங்கு எல்லாவற்றையும் எது நிகழச் செய்கிறதோ அதையே உண்மை (Truth) என்று குறிப்பிடுகிறோம். ஏதோ ஒன்று பூமியை சுழலச் செய்கிறது. ஏதோ ஒன்று இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. இந்தப் பிரபஞ்சத்தை நடத்தும் அதைத்தான் நாம் உண்மை என குறிப்பிடுகிறோம். பிரபஞ்சத்தின் மூலம் எதுவோ, அதுதான் உங்கள் தன்மையின் மூலமும். அதாவது உண்மைதான் பிரபஞ்சத்தின் மூலம், அதுதான் உங்கள் தன்மையின் மூலமும். எனவே உண்மையுடன் உடனிருக்க வேண்டும் என்றால், உங்கள் தன்மையின் மூலத்தை அடைந்தால் போதும்.

உங்கள் மனம் எப்போதும் ஏதாவதொரு அபிப்ராயத்தைக் கொண்டே இயங்குகிறது. ஏனெனில் அபிப்ராயம் இல்லாமல் மனம் இயங்காது. ஏதோ ஒன்றுடன் உங்கள் மனதை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளும்போது, உங்கள் மனதில் அபிப்ராயம், அதாவது பேதம் வந்துவிடுகிறது. நான் ஒரு ஆண் என்று நீங்கள் சொன்னால், ஆணுக்கான பேதம் உங்களிடம் இருக்கிறது. நான் ஒரு இந்தியன் என்று சொன்னால், இந்தியனுக்கான பேதம் உங்களிடம் இருக்கிறது. இது மனிதகுலத்தின் பெரிய சிக்கல். இந்த பேத உணர்வு பலவகைகளில் நிலைபெற்றுவிட்டது.

எனவே சத்சங்கம் என்று சொல்லும்போது அந்த அடையாளத்தை மட்டும் நாம் அழிக்க முற்படுவதில்லை. அந்த அடையாளத்தை உற்பத்தி செய்யம் கருவியையும் கடந்து நிற்பதே நம் நோக்கம். அறிவின் இயல்பே எதையும் இரண்டாக பகுத்துப் பார்ப்பதுதான். தப்பும் தவறுமாக வாழ்வை கையாள்வதன் காரணம், மனம் ஏதோ ஒரு அடையாளத்துடன் செயல்படுவதுதான். அது கண்ணாடி போல் வாழ்வைத் துல்லியமாகக் காட்டுவதில்லை.

எனவே சத்சங்கம் என்றால் உங்கள் பேதங்களை விட்டுவிட்டு அடையாளம் அற்று நிற்பதாகப் பொருள். எந்தச் செயலுமின்றி, முழு விழிப்புணர்வோடு அமர்ந்திருக்கின்ற நிலை. உங்களைப் பற்றி நீங்கள் பலவும் கருதிக் கொள்ளலாம். ஆனால் உங்கள் உடல் என்பது வெறும் மண் மூட்டைதான். எனவே முழு விழிப்புணர்வோடு அமர்ந்திருந்தால் மற்றவை தாமாக நிகழும். ஆன்மீக வளர்ச்சி என்பது நீங்கள் எதையோ செய்வதல்ல. உடலையும், மனதையும் மட்டுப்படுத்தினால் நீங்கள் ஆன்மீகமயமாகிறீர்கள். உடலுக்கும், மனதுக்கும் அதிக முக்கியத்துவத்தை நீங்கள் தரத் தொடங்கினால் உங்களுக்குள் பேதம் வளர்கிறது. ஏனெனில் உடலுக்கும், மனதுக்கும் உள்ள இயல்பே பேதப்படுத்துவதுதான்.

வாழ்வில் ஏதாவது பெரும் சேதம் நிகழ்ந்தால் மட்டும்தான் உங்களுக்கு சரியானதை செய்கிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்வில் எல்லாம் சரியாக இருக்கும்போதுதான் நீங்கள் சரியானவற்றை செய்ய வேண்டும்.

தர்க்க எல்லையைத் தாண்டி நீங்கள் செயல்படும் போது உங்கள் வாழ்க்கை அழகாகிறது. தர்க்க எல்லைக்குள் செயல்படும்போது, அதில் உங்கள் வாழ்வின் சாமர்த்தியம் இருக்கிறது, சமூகத்தன்மை இருக்கிறது. ஆனால் அதில் வாழ்வின் தன்மை இல்லை. சத்சங்கம் என்றால் உச்சபட்சமான வாழ்வின் தன்மை என்று அர்த்தம். அந்தத் தன்மையோடு தொடர்பிலிருப்பது உங்களுக்கு மிகவும் முக்கியமானது. தினமும் காலையில் உங்கள் பற்களில் கவனம் செலுத்துகிறீர்கள், உங்கள் உடலில் கவனம் செலுத்துகிறீர்கள், உங்கள் நகங்களின் மீது கவனம் செலுத்துகிறீர்கள், உங்கள் தலைமுடி மீது கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்வின் மூலத்தின் மீது நாளொன்றுக்கு எவ்வளவு நேரம் கவனம் செலுத்துகிறீர்கள்?

சத்சங்கம், மாதம் இரண்டு மணிநேரம்தான். உங்கள் தலைமுடிக்குக் கூட தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் செலவிடுகிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்வின் ஆதாரத்திற்கு நீங்கள் செலவிடுகிற நேரம் மாதத்திற்கே இரண்டு மணிநேரம்தான். அப்போது கூட சத்சங்கத்தில் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறிவதற்கே ஆர்வம் காட்டுகிறீர்கள். சத்சங்கம் என்றால் உங்களைச் சுற்றி நிகழும் எதிலும் ஆர்வம் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருப்பது. உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்வுகள் எதிலும் கவனம் செலுத்தாமல் வெறுமனே இருத்தல். நீங்கள் வெறுமனே அமர்ந்திருந்தால் போதுமானது. விழிப்புணர்வோடு இருந்தால் போதும்.

உங்கள் மனம் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கும். உங்கள் உடலும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கும். நான் இருக்கிறேன், எனக்கு வலிக்கிறது, கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் வெறுமனே அமர்ந்திருந்தால் போதும். இதை நீங்கள் பயிலவேண்டும். உங்கள் வாழ்க்கைக்குள் அதைக் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கையின் ஆழமான தன்மை மேலும் வளம் பெறும். அதன்பின் உங்கள் புரிதலின் எல்லைக்குள் வேறொன்று நிகழும்.

இது மிகவும் எளிதானது. ஆனால் இதை உணர மிகுந்த வலியும், வேதனையும் படவேண்டியிருக்கிறது. உங்கள் வாழ்வில் ஏதாவது பெரும் சேதம் நிகழ்ந்தால் மட்டும்தான் உங்களுக்கு சரியானதை செய்கிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்வில் எல்லாம் சரியாக இருக்கும்போதுதான் நீங்கள் சரியானவற்றை செய்ய வேண்டும். எல்லாம் தவறாகப் போகும்போது அல்ல. தவறாகப் போகும்போது நீங்கள் விரும்பியபடி ஒன்றைச் செய்ய முடியாது. அப்போது உங்களுக்குத் தேவையான வலிமை இருக்காது. உங்கள் உடல் ஆரோக்கியமாக இல்லாமல் போகலாம். உங்கள் மனம் ஆரோக்கியமாக இல்லாமல் போகலாம். உங்கள் சூழ்நிலை உங்களை செயல்பட விடாமல் தடுக்கலாம். ஆனால் எல்லாம் தவறாகப் போகும்போதுதான் சரியான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உலகம் முழுவதும் மனிதர்கள் மனதில் படிந்திருக்கிறது.

எவ்வித பேதமுமின்றி உங்கள் படைப்பின் மூலத்தோடு உங்களால் தொடர்பில் இருக்க முடியுமென்றால்; உடலாக இல்லாமல், ஆணாகவோ, பெண்ணாகவோ, இந்தியனாகவோ இல்லாமல், எந்த அடையாளமும் இல்லாமல், ஐந்து நிமிடங்கள் உங்களால் அமைதியாக அமர்ந்திருக்க முடியுமென்றால்; அடுத்த நாள் உங்களுக்கு வித்தியாசமாக இருக்கும். வெறும் கற்பனையிலோ, நம்பிக்கையிலோ இல்லாமல், உங்கள் படைப்பின் ஆதாரத்தை உங்கள் அன்றாடப் பணிகளில் பங்கேற்க விடும்போது, மறுநாள் உங்களுக்கு மிக வித்தியாசமாக விடியும். எனவே தான் உங்களுக்கு நடத்தப்படும் மாதாந்திர சத்சங்கம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1