சரணாகதி என்றால் என்ன? அதைப் பயிற்சி செய்ய முடியுமா
சத்குரு, உணர்ச்சியின் உச்சியில் நான் இருக்கும்போது, சரணாகதி என்பது அருகாமையில் இருப்பது போல் தெரிகிறது. வேறு பல விஷயங்கள் என்னைத் தாக்கும்போது, அது என்னிடமிருந்து மறைந்து விடுகிறது. விழிப்புணர்வுடன் நான் சரணாகதியைப் பயிற்சி செய்ய முடியுமா?
 
 

Question:சத்குரு, உணர்ச்சியின் உச்சியில் நான் இருக்கும்போது, சரணாகதி என்பது அருகாமையில் இருப்பது போல் தெரிகிறது. வேறு பல விஷயங்கள் என்னைத் தாக்கும்போது, அது என்னிடமிருந்து மறைந்து விடுகிறது. விழிப்புணர்வுடன் நான் சரணாகதியைப் பயிற்சி செய்ய முடியுமா?

சத்குரு:

3

எப்படி சரணடைவது?

சரணடைய முயற்சிக்காதீர்கள், ஏனெனில் எதை நீங்கள் சரணடைய வைப்பீர்கள்? நீங்கள் குனிவது சரணாகதி அல்ல, அது ஒரு நல்ல உடற்பயிற்சி. நான் சரணடைந்துவிட்டேன் என்று அறிவிப்பு வெளியிடுவதே ஒரு கொடுமையான அகங்காரச் செயல். எனவே, எப்படி சரணடைவீர்கள்? எதை சரணடையச் செய்வீர்கள்? முதலில் சரணடையச் செய்வதற்கு உங்களிடம் என்ன இருக்கிறது? ஒரு குறிப்பிட்ட உணர்தலிலிருந்துதான் சரணாகதி பிறக்கிறது. உங்கள் வாழ்வை வளமாக்க சுய மதிப்பீடு, சுய நம்பிக்கை, சுய பெருமிதம் போன்றவை அவசியமென்று நீங்கள் தொடர்ந்து பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறீர்கள். சரணாகதி என்பது இவைகள் அனைத்திற்கும் எதிரானது. நீங்கள் மதிப்பு அற்றுப்போகும் போதுதான் சரணாகதி அடையமுடியும். சுய மதிப்பீடு, சுய பெருமிதம், சுய நம்பிக்கை ஆகியவற்றுடன் இருக்கும்போது எப்படி சரணடைவீர்கள்? நம்பிக்கை இல்லாமல் உங்களால் வாழ முடியுமா? சுய பெருமிதம், சுய மதிப்பீடு இல்லாமல் உங்களால் வாழ முடியுமா? தற்போதைக்கு முடியாது. எனக்கு சுய மதிப்பீடு அல்லது சுய பெருமிதம் போன்ற எண்ணங்கள் எதுவும் கிடையாது. எனவேதான் எந்த ஷணத்திலும் தேவைப்படின், வாழ்வை விடுவதற்கும் தயாராக இருக்கிறேன். ஏனெனில் இந்த வாழ்வு எதையும் மதிப்பானதாக நான் நினைக்கவில்லை. தனிப்பட்ட முறையில், இந்த வாழ்க்கை எதுவும் எனக்கு உபயோகமானதாகத் தெரியவில்லை. ஆனால், என்னைச் சுற்றியுள்ள பல உயிர்களுக்கு, எனது வாழ்க்கை உபயோகமானதாக இருப்பதால்தான் எனது இந்த வாழ்க்கை தொடரும்படி பார்த்துக்கொள்கிறேன். ஆனால் எனக்கு சுய மதிப்பு என்பது கிடையாது. ஏனெனில் சுயம் என்ற உணர்வே போய்விட்டது, எனவே எதற்காக மதிப்பு?

1

சரணாகதி என்றால்...

சரணாகதி பற்றி நீங்கள் பேசும்போது, கடப்பது பற்றி பேசுகிறீர்கள்... ஒரு பரிமாணத்தின் எல்லையிலிருந்து வேறு பரிமாணத்தின் எல்லைக்கு கடப்பது பற்றி பேசுகிறீர்கள். மெல்லிய காற்று போல் ஆகாவிட்டால் கடக்க முடியாதென்று, போதுமான அளவுக்கு சுவற்றில் மோதிக் கொண்ட பிறகு நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறீர்கள், கதவுகள் வலுவாக உள்ளன, தப்பிக்க முடியாது. ஆனால் சிறைக்குக் கீழே ஒரு கழிவுநீர் கால்வாய் உள்ளது, அதில் தவழ்ந்து போனால், நீங்கள் விடுதலை ஆகமுடியும். அப்போது அந்த கால்வாய் வழியே தவழ்ந்து போக முயற்சிப்பீர்களா, இல்லையா? விடுதலைக்கு அதுதான் வழி என்றால் மோசமான கழிவுநீர் கால்வாய் வழியாகவும் நீங்கள் தவழ்ந்து செல்வீர்கள். கழிவுநீர் உங்கள் மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் கூட போகும், ஆனாலும் கவலைப்பட மாட்டீர்கள். இப்படி செய்தால் மட்டுமே விடுதலை நோக்கிச் செல்ல முடியும் என்பதால் கழிவுநீர் கால்வாய் வழியாகவும் கூட நீங்கள் தவழ்ந்து செல்வீர்கள். அதுதான் சரணாகதி என்பது.

பித்துப்பிடித்தல்...

எனவே சரணாகதி என்பது ஒரு உணர்தல். அதாவது தற்போதைய வடிவத்தில் கதவைக் கடக்க முடியாது என்று உணர்கிறீர்கள். எனவே கடப்பதற்கு அதிக அறிவுள்ள வழியைக் கண்டு கொண்டீர்கள். அது சொல்லிக் கொடுத்து வருவதல்ல, ஒரு குறிப்பிட்ட உணர்தலால் மட்டுமே வருவது. உங்கள் அறிவாலோ அல்லது வாழ்க்கை உங்களை தரைமட்டத்திற்கு தகர்த்ததாலோ அல்லது கட்டுப்பாடற்ற அன்பில் விழுமளவிற்கு பித்துப் பிடித்ததாலோ அது வருகிறது. ராமகிருஷ்ணர் அல்லது மீராபாய் அல்லது அக்கமகாதேவி போன்று பித்துப்பிடித்ததால் வருகிறது. இவர்களெல்லாம் உங்களுக்குத் தெரிந்த சில பெயர்கள். ஆனால் நிறைய பேர் அப்படி இருந்தார்கள். பித்துப்பிடித்து இருந்தார்கள். அவர்கள் தெளிவற்றவர்கள், இனிமையற்றவர்கள், முழுமையாக இனிமையற்றவர்கள். ஆனால் அவர்கள் அற்புதமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அற்புதமாக இருக்கும் எதுவுமே இனிமையாக இருக்கத் தேவையில்லை. பொதுவாக இனிமையாக இருக்காது. நானும் கூட இனிமையற்றவன்தான்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1