ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்! - பகுதி 1

கேள்வியாளர் (பிரம்மரம்பிக்கா) : சத்குரு, அடையாள நெருக்கடி, தன் மீதே சந்தேகம் கொள்வது, ஆகியவை நாங்கள் சந்திக்கும் இரு முக்கியமான பிரச்சனைகள். குறிப்பாக பெண்களாகிய எங்களுக்கு தன்னைப் பற்றிய சந்தேகம் வருத்துகிறது. இதற்கான உங்கள் அறிவுரை என்ன?

சத்குரு : சந்தேகம் என்பது மிகவும் நல்லதொரு விஷயம். முட்டாள்கள் மட்டும்தான் அனைத்திலும் நிச்சயமாக இருப்பார்கள்; தாங்கள் செய்வதில் படுநிச்சயமாக இருப்பார்கள். படுநிச்சயமாக இருப்பவர்கள் ஒன்று முட்டாள்கள் அல்லது கொள்கை வெறியர்கள். இல்லையென்றால், ஒவ்வொரு கணமும் அனைத்திலும் சந்தேகம் ஏற்படும். இப்படி வாழ்வது நல்ல வழியாகும்.

கேள்வியாளர் (பிரம்மரம்பிக்கா) : சந்தேகத்தில் இருப்பது ஒருவரின் தன்னம்பிக்கையுடன் முரண்படுவதாக இல்லையா (சத்குரு சிரிக்கிறார்)?

சத்குரு : 

இந்த உலகத்தில் நூறுசதவிகிதம் சரியானது அல்லது நூறுசதவிகிதம் தவறானது என்று எதுவும் கிடையாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சந்தேகம் என்றால், எந்த நேரமும் ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள அனைத்து சாத்தியங்களையும் தேடிக்கொண்டேயிருக்கும் சுறுசுறுப்பான புத்திசாலித்தனம் உங்களிடம் இருக்கிறது என்பது பொருள். ஏனென்றால் இந்த உலகத்தில் நூறுசதவிகிதம் சரியானது அல்லது நூறுசதவிகிதம் தவறானது என்று எதுவும் கிடையாது. நீங்கள் எப்போதும் எல்லா சாதகபாதகங்களையும் ஆராய்ந்து விட்டு, எப்படி அதிகமான சாதகங்களைப் பெறுவது என்று பார்த்து, பிறகு செயல்படுகிறீர்கள். உலகத்தில் நூறுசதவிகிதம் நல்லது அல்லது நூறுசதவிகிதம் மோசமானது இருக்கிறதா என்ன? அப்படிப்பட்ட ஒரு விஷயம் எதுவுமில்லை. யாராவது இங்கே நூறுசதவிகிதம் நல்லவர்களாக அல்லது நூறுசதவிகிதம் தீயவர்களாக; முற்றிலும் அற்புதமானவர்களாக அல்லது முற்றிலும் மோசமானவர்களாக இருக்கிறார்களா? இல்லை. ஒரு நாளில் அவர்கள் எவ்வளவு முறை மோசமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை மதிப்பிட்டு பார்த்து விட்டு அவர்களுடன் நட்புடன் இருப்பதா இல்லையா என்று முடிவு செய்வீர்கள். அவருடைய மோசமான தன்மை நம்முடைய அந்த தன்மையுடன் பொருந்துகிறதா இல்லையா என்று பார்ப்பீர்கள், அப்படிதானே(சிரிக்கிறார்)?

நாம் முற்றிலும் அற்புதமான ஒருவரைத் தேடுவதில்லை. உண்மையில் நம்மைப் போல மோசமாக இருக்கும் யாரோ ஒருவரைத்தான் நாம் தேடுகிறோம், இல்லையா? நம் வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு விதமான செயலுக்கும் ஏற்றவாறு, மக்களை நாம் தேடுகிறோம். நாம் குறிப்பிட்ட விதமான மக்களுடன் வண்டி ஓட்டிச் செல்ல விரும்புகிறோம்; குறிப்பிட்ட விதமான மக்களுடன் வியாபாரம் செய்ய விரும்புகிறோம்; ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருக்கும் மக்களுடன் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம்; ஒரு குறிப்பிட்ட விதமான மக்களுடன் நட்பில் இருக்க விரும்புகிறோம். விதவிதமான செயல்களுக்கு விதவிதமான மக்களை நாடுகிறோம், இல்லையா? அதனால் சந்தேகம் என்பது நல்லது. நீங்கள் உங்களுக்குள் சந்தேகத்தை ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் நிச்சயத்தன்மையை அடைந்து விட்டதாக எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு முட்டாளாகவோ அல்லது ஒரு கொள்கை வெறியராகவோ இருப்பீர்கள்.

தெளிவு இருக்கும்போதுதான் இந்த உலகத்தில் நடைபோடவும், சிறப்பாக செயல்படவும் முடியுமேயன்றி, தன்னம்பிக்கையுடன் இருக்கும்போது அல்ல. தன்னம்பிக்கை என்பது வாழ்க்கையை பிழையாக வாழும் வழியாகும்.

சந்தேகம் கொள்வது நல்லது. ஆனால் நீங்கள் ஆனந்தமாகக் குழப்பத்தில் இருக்க வேண்டும். தற்போது நீங்கள் குழப்பமடைந்தால், உங்களையே நீங்கள் வேதனைப்படுத்திக் கொள்கிறீர்கள்; அதுதான் பிரச்சனை. நீங்கள் என்னைப் போல், ஆனந்தமயமாக குழப்பத்தில் இருந்தால், உங்களுக்குப் பிரச்சனையே இல்லை(சிரிக்கிறார்கள்). நீங்கள் தொடர்ந்து குழப்பத்தை வளர்த்த காரணத்தால், மிகுந்த சந்தேகம் மற்றும் ஆழ்ந்த யோசனையுடன், உலகத்திலுள்ள ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்த பிறகு, அதிலிருந்து இப்போது மெதுவாக உங்களுக்குள் தெளிவு பிறக்கிறது.

இப்போது நீங்கள் தன்னம்பிக்கையைப் பற்றி பேசினீர்கள். தன்னம்பிக்கை என்பது மிக மோசமான ஒன்று. ஏனென்றால் தன்னம்பிக்கை என்றால், தெளிவு இல்லாமேலேயே நீங்கள் நிச்சயத்தன்மையை அடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். தன்னம்பிக்கைதான் மூடத்தனமான தீவிரத்திற்கு முதற்படி. ஒரு கொள்கை வெறியன் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் போன்று வேறு எவரும் நம்பிக்கை கொள்வதை நீங்கள் பார்க்கமாட்டீர்கள். ஏனென்றால் ஒரே திசையில் செயல்படும் மனம் என்பதால், நீங்கள் உங்களையே கேள்வி கேட்க மாட்டீர்கள்; உங்களின் செயல்களையோ, எண்ணங்களையோ, உணர்ச்சிகளையோ நீங்கள் கேள்விக்கு உட்படுத்தமாட்டீர்கள். இந்த விதமான நிச்சயத்தன்மையால் எந்தப் பலனும் இல்லை. ஏதோ ஒன்றை நீங்கள் வெறுமனே நம்புவதன் காரணத்தால், இது நிகழுகிறது. ஏதோ ஒன்றை நம்புவது, தன்னம்பிக்கை தருகிறது; ஆனால் இதில் தெளிவு ஏற்படாது. தெளிவு இருக்கும்போதுதான் இந்த உலகத்தில் நடைபோடவும், சிறப்பாக செயல்படவும் முடியுமேயன்றி, தன்னம்பிக்கையுடன் இருக்கும்போது அல்ல. தன்னம்பிக்கை என்பது வாழ்க்கையை பிழையாக வாழும் வழியாகும்.

தன்னம்பிக்கை என்பது தெளிவிற்கு நாம் ஏற்படுத்தியிருக்கும் மிக மோசமான மாற்று ஆகும்.

இப்போது இங்கே அமர்ந்திருக்கும் மக்களிடையே, நீங்கள் இந்த இரண்டு வரிசைகளுக்கு நடுவே நடக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். உங்களது பார்வை தெளிவாக இல்லை; ஆனால் தன்னம்பிக்கையோடு இருக்கிறீர்கள், அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? யாரோ ஒருவருக்குப் பார்வைத்திறன் சரியாக இல்லாத நிலையில், அவர் இந்த வரிசைகளுக்கு இடையே நடந்தால், அனைவரது கால்களையும் அவர் மிதித்துக் கொண்டே செல்வார்; ஆனால் அவர் தன்னம்பிக்கையோடு இருக்கிறார். தற்போது, இதுதான் நிகழ்கிறது. அனைத்திலும் நிச்சயத்தன்மையோடு இருப்பவர்கள், அசையாத நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தாங்கள் சரியான விஷயத்தைச் செய்துவிட்டு சொர்க்கத்திற்குச் செல்வதாக அவர்கள் அறிந்திருக்கின்றனர். எவ்வளவு கொடூரமான விஷயங்களை உருவாக்கினாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர்கள் நேராக சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள் என்பதில் அவ்வளவு நிச்சயமாக இருக்கின்றனர். சொர்க்கம் எந்தத் திசையில் இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியும். ஆனால் உலகம் உருண்டையானது ஆயிற்றே! எந்த திசையில் சொர்க்கம் இருக்கிறது என்று அவர்கள் கூறினாலும் அது தவறாகவே இருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் அதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் ‘இது தான்' (‘திஸ் இஸ் இட்’) என்று நம்புபவர்கள்.

தன்னம்பிக்கை என்ற ஒரு மிக மோசமான விஷயத்தை மக்களிடம் வளர்த்திருக்கிறார்கள். உங்களுக்குத் தேவையானது தெளிவு மட்டும்தான். தெளிவு ஏற்படுவதற்கு உங்களுக்குள்ளேயே நீங்கள் செயல் செய்ய வேண்டும். அது அவ்வளவு எளிதில் ஏற்படாது. உங்களுக்கு அனைத்தின் மீதும் சந்தேகம் ஏற்பட்டு, தொடர்ந்து பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் நிலையில், மெதுவாக அதிலிருந்து தெளிவு பிறக்கிறது. நீங்கள் அனைத்தையும் தெளிவாக பார்ப்பதால் தெளிவு ஏற்படுகிறது. தன்னம்பிக்கைக்கு நீங்கள் தெளிவாக பார்க்க வேண்டிய தேவையில்லை. வெறுமனே நான் சரி என்று நம்பினால் நீங்கள் தன்னம்பிக்கை உடையவர். தன்னம்பிக்கை என்பது தெளிவிற்கு நாம் ஏற்படுத்தியிருக்கும் மிக மோசமான மாற்று ஆகும். உங்கள் வாழ்க்கையில் தயவுசெய்து தெளிவைக் கொண்டு வாருங்கள். நீங்கள் பொறியியல் மாணவர்களா?

கேள்வியாளர் (ஸ்ரீநிதி) : நிர்வாகம்

சத்குரு : நீங்கள் தெளிவில்லாத ஒரு தன்னம்பிக்கையுடைய நிர்வாகியாக இருந்தால், மக்களிடம் தவறுதல் இழைக்கும் முட்டாளாக இருப்பீர்கள். ஆமாம். ஆனால் உங்களிடம் தெளிவு இருந்தால், நீங்கள் நிர்வாகி என்று உங்களையே நிலைநிறுத்தி கொள்ள தேவையில்லை. அனைவரும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு உங்களின் பின் வரிசையாக நிற்பார்கள். ஏனென்றால் அவர்கள் உங்களிடத்தில் தெளிவு இருப்பதை காண்பார்கள் (கைதட்டுகிறார்கள்).

ஆசிரியர் குறிப்பு: அறிவியல் அறிஞர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகள் ஆங்கிலத்தில் சத்குருவுடன் கலந்துரையாடிய பதிவின் தமிழாக்கம் முதல்முறையாக உங்களுக்காக! மாதம் இருமுறை பதியப்படும் இந்த தொடரில், இதுவரை நீங்கள் படித்திராத பல்வேறு சுவாரஸ்ய அம்சங்கள் காத்திருக்கின்றன.