அலுவலகம், மாமியார், வாண்டுகள் - இவர்களை அன்றாடம் பார்த்துப் பார்த்து வாழ்க்கை சற்று இறுக்கமாகிவிட்டதா? உங்களை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள இதோ வருகிறார் சங்கரன்பிள்ளை... தன்னுடைய இரண்டு கதைகளுடன்...

சத்குரு:

சங்கரன்பிள்ளையின் வேதாந்தம்

வேதாந்த வகுப்பில் சேர்ந்தார் சங்கரன்பிள்ளை.

"எல்லாம் மாயை. என்னுடையது உன்னுடையது என்று எதுவும் இல்லை. நீங்கள் பார்ப்பது, கேட்பது, உண்பது, தொடுவது, உணர்வது எதுவுமே உண்மை இல்லை. எல்லாம் மாயை" என்றார் ஆசிரியர்.

சங்கரன்பிள்ளைக்கு இது ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த நினைப்பிலேயே உறங்கிப்போனார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காலையில் கண் விழித்ததும் வேதாந்தமே மனதில் ஓடியது. ‘எல்லாம் மாயை. என்னுடையது உன்னுடையது என்று எதுவும் இல்லை’. சங்கரன்பிள்ளைக்குக் கடுமையான பசி. ஒரு ஹோட்டலுக்குப் போனார். ஆர்டர் பண்ணியதெல்லாம் அவர் மேஜைக்கு வந்தது. ‘இந்த பரோட்டாவும் நான்தான், சர்வரும் நான்தான். சாப்பிடும் ஆளும் நான்தான்’ எனச் சொல்லிக் கொண்டே சாப்பிட்டார்.

வயிறு திருப்தியானதும் எழுந்து வாசலை நோக்கி நடந்தார். ‘சாப்பாட்டுக்கு பில்லாவது, பணமாவது. எது உன்னுடையதோ, அதுவும் என்னுடையது. வேதாந்தம் இது’ எனப் பணம் தராமல் கிளம்பியவர், போகிறபோக்கில் கல்லாவைப் பார்க்க, பணம் நிரம்பிக்கிடந்தது. கையை உள்ளே விட்டார். கை நிறைய அள்ளிக்கொண்டு போக, ஒரு கூட்டமே துரத்தி அவரைக் கொத்தாகப் பிடித்தது.

‘இருங்க இருங்க, யாரைப் பிடிக்கப் போறீங்க? யாரைப் பிடிக்கிறீங்களோ, நீங்கதான் அவர். அவர்தான் நீங்க. எல்லாரும் ஒண்ணு. கொடுப்பதும் நானே, வாங்குவதும் நானே’ என வேதாந்தத்தை போட்டு விளாச, விவகாரம் நீதிமன்றதுக்கு வந்தது.

அங்கேயும் அதே டயலாக்தான்.

நீதிபதி எவ்வளவு விவரமாக எடுத்துச் சொல்லியும் சங்கரன்பிள்ளை மசியவில்லை.

அறுபது கசையடி தண்டனை விதிக்கப்பட்டது.

முதல் கசையடி அதிர்ச்சி.

இரண்டாவது கசையடி ஐயோ என கதறல்.

மூன்றாவது கசையடி ஐயையோ என அலறல்.

நீதிபதி சொன்னார்... "கவலைப் படாதீர்கள். அடிப்பவரும் நீங்களே, அடி வாங்குபவரும் நீங்களே, எல்லாம் மாயை."

சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி

சங்கரன்பிள்ளை கொஞ்ச காலம் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறையில் வேலை பார்த்தார். மாதக் கடைசி. வேகமாகப் போகும் வண்டிகளைப் பிடிப்பதற்காக, ஊரைவிட்டுத் தள்ளிப் போய் ரோட்டில் நின்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஒரு விவசாயி, வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வேகமாய் ஓட்டி வந்தார். சங்கரன் பிள்ளை வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டார். விவசாயியை கீழே இறக்கி, ‘‘நீ செஞ்சது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா?’’ என்ற ரீதியில் பயமுறுத்தி, அபராதம் செலுத்தச் சொன்னார். எவ்வளவு மன்றாடியும் விடவில்லை. ரசீது போடத் தொடங்கினார். எழுதும்போது அவரது தலையைச் சுற்றி பூச்சிகள் பறந்துகொண்டு இருந்தன. கையை ஆட்டி விரட்டிக்கொண்டே அபராதம் எழுத, விவசாயி ‘‘ஸார், வட்டப் பூச்சி ரொம்ப தொந்தரவு பண்ணுதுங்களா?’’ என்றார்.

‘‘ஆமாமா. இதென்னய்யா அது வட்டப்பூச்சி, புதுசா இருக்கு!’’ என்று கேட்க, ‘‘ஸார், இது வயக்காட்டுல மாட்டோட பின்பக்கம் வட்டம் போடும். அதுனாலதான் இதுக்கு வட்டப்பூச்சின்னு பேரு’’ விளக்கம் தந்தார் விவசாயி.

‘‘ஓஹோ!’’ என்று தொடர்ந்து எழுதியவர், திடீரெனத் திரும்பி கோபமாய், ‘‘யோவ்! அப்படின்னா எம் மூஞ்சிய மாட்டோட பின்பக்கம்னு சொல்றியா?’’ எனக் கத்த, ‘‘ஸார், நான் அப்படியெல்லாம் நினைக்கலை. நான் எப்பவுமே போலீஸ் காரங்களை மதிக்கிறவன். என்னை அப்படித் தப்பா நெனைக்காதீங்க’’ என்று சொல்லிவிட்டு, ‘‘ஆனா அந்தப் பூச்சிகளை ஏமாத்த முடியாதே’’ என்று வாய்க்குள் முணுமுணுத்தார்.