சத்குரு சொல்லும் குட்டிக்கதைகளின் நாயகன் சங்கரன்பிள்ளை தன் மனைவியிடம் மாட்டிக்கொண்ட சங்கதியையும், இரயில்கள் மோதினால் அவர் செய்யும் விநோத செயலையும் இந்த இரண்டு குட்டிக்கதைகளில் அறியுங்கள், இரசியுங்கள்!

சத்குரு:

குதிரை போன் செய்தது!

திருமணமான ஒருவர் நள்ளிரவில் தூக்கத்தில் முணுமுணுக்கத் துவங்கினார். தூக்கத்தில் முணுமுணுப்பது திருமணமானவர்களுக்கு ஆபத்தானதுதானே? உண்மையை உளறிவிட்டால் என்னாவது? அந்த நபர் தூக்கத்தில், ‘ஹில்டா டார்லிங், ஹில்டா டார்லிங்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி பெயர் அல்ல அது.

காலையில் எழுந்து, அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகி, மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார், அந்தக் கணவர். வழக்கம் போல் காலை உணவு மேசைமேல் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தவருக்கு அங்கு உணவு இருக்கவில்லை. உடனே மனைவியிடம், ‘என்ன ஆயிற்று? ஏன் உணவு செய்யவில்லை?’ என்று கேட்டார். அதற்கு, அவருடைய பெண்டாட்டி, “நேற்று இரவு முழுதும் ‘ஹில்டா டார்லிங்’ என்று தூக்கத்தில் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தீர்களே, யார் அந்த பாழாய்ப் போன ஹில்டா டார்லிங்?” என்று கேட்டார். கணவர் சாமர்த்தியமாய், ‘ஓ! அதுவா... குதிரைப் பந்தயத்தில் ஓடும் குதிரை. அது குதிரையின் பெயர்’ என்றார். ஏதோ பரிதாபத்தில் கொஞ்சம் சாப்பாடு வந்தது, அதைச் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றார்.

மாலையில் வீட்டிற்கு திரும்பியவர், மனைவி டீ கொண்டு வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் டீ வரவில்லை. குழம்பிய கணவன், ‘என்ன ஆயிற்று?’ எனக் கேட்டார். உடனே மனைவி, “குதிரை தொலைபேசியில் உங்களை அழைத்தது” என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்தால் என்ன செய்வீர்கள்?

 இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்தால் என்ன செய்வீர்கள்?

சங்கரன்பிள்ளை, இந்திய இரயில்வே பணிக்காக ஒரு நேர்காணலுக்குச் சென்றார். அவர் சென்றதோ சிக்னல் காண்பிக்கும் வேலைக்காக!

நேர்காணலில் இருந்த அதிகாரி சங்கரன் பிள்ளையிடம், “இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

‘‘நான் சிகப்புக் கொடியைக் காண்பிப்பேன்!’’

‘‘உங்களிடம் சிகப்புக் கொடி இல்லையென்றால் என்ன செய்வீர்கள்...?’’

‘‘எனது சிகப்புச் சட்டையைக் கழட்டி வீசுவேன்...’’

‘‘உங்களிடம் அதுவும் இல்லையென்றால் என்ன செய்வீர்கள்...?’’

‘‘என்னிடம் என்ன நிறச் சட்டை உள்ளதோ, அதை எடுத்துக் காண்பிப்பேன்...!’’

‘‘ஒருவேளை நீங்கள் சட்டை எதுவும் அணியவில்லை என்றால்...?’’

‘‘தீயை மூட்டி ஆடிக் காண்பிப்பேன்...’’

‘‘அதுவும் உங்களால் இயலாவிட்டால்?’’

‘‘என் கிராமத்திற்குச் சென்று என் மனைவியை அழைத்து வருவேன்...’’

‘‘எதற்காக?’’

‘‘என் மனைவி இதுவரை இரு ரயில்கள் மோதியதைப் பார்த்ததே இல்லையே!’’