"இப்படியே ஒரு நாள், சங்கரன்பிள்ளை..." என்று சத்குரு ஒவ்வொரு முறையும் குட்டிக்கதையைத் துவங்குவதற்கு முன்னதாகவே பங்கேற்பாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகமாவதற்குக் காரணம், அந்த கதாபாத்திரத்தின் வேடிக்கை நிறைந்த சித்தரிப்பும் அது உணர்த்தும் ஆழ்ந்த பொருளும்தான். இதோ இரண்டு சங்கரன்பிள்ளை குட்டிக் கதைகள் உங்களுக்காக...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மக்கு ப்ளாஸ்திரி!

ஒருநாள் சங்கரன்பிள்ளை தன் நண்பர்களுடன் பாருக்கு சென்றிருந்தார். யோகிகளுக்கும் குடிமக்களுக்கும் தான் கால நேரம் என்பதே கிடையாதே! அதனால் நேரம் கழிவதே தெரியாத நம் சங்கரன்பிள்ளை தொடர்ந்து குடித்தார். எட்டு மணிக்கெல்லாம் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த அவர், திடீரென வாட்சைப் பார்த்தபோது மணி 2.30 காட்டியது. ரொம்ப லேட் ஆகிவிட்டதால், குறுக்கு வழியில் வீட்டுக்குச் சென்று விடலாம் என்று வேக வேகமாகக் கிளம்பினார். குடிபோதையில் தள்ளாடி, கால் தவறி முட்புதருக்குள் விழுந்தார். முகம் முழுதும் சிராய்புகளுடன் தட்டுத் தடுமாறி வீட்டை அடைந்தார்.

சாவித் துவாரத்தில் சாவி போட்டுத் திறப்பதற்கு மற்றுமொரு அரைமணி நேரம் கழிந்தது. அவசர அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்த அவர், இரத்தம் வழியும் தன் முகம் முழுவதும் ப்ளாஸ்திரி போட்டுக் கொண்டு, தன் மனைவிக்குத் தெரியக் கூடாது என்பதற்காக மெதுவாக ஊர்ந்து சென்று படுக்கையில் படுத்துக் கொண்டார்.

காலையில் தூக்கம் கலைந்து எழுந்த அவர் மனைவி, “முட்டாளே நீ மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சுட்டியா?” என்று கதற, சங்கரன் பிள்ளை, “கண்ணா, நான்தான் ஆறு மாசத்துக்கு முன்னாடி உனக்கு சத்தியம் செஞ்சு கொடுத்தேனே, அதுலேர்ந்து குடிக்கிறதே இல்லை,” என்றார். கோபத்தின் உச்சிக்குச் சென்ற சங்கரன் பிள்ளையின் மனைவி, அவர் சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்து பாத்ரூமிற்குள் சென்றார். முந்தைய நாள் சங்கரன் பிள்ளை போட்ட பிளாஸ்திரி கண்ணாடி எங்கும் பரவிக் கிடந்தது!

எனக்கும் அதுதான் ஆச்சரியம்!

1

ஒருநாள் சங்கரன்பிள்ளை வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் இருந்த ஒரு பண்ணையில், பழுத்த முலாம்பழங்களைப் பார்த்தார். உடனே அவரது வழக்கமான குணம் தலைதூக்கி, பண்ணைக்குள் புகுந்து, வேண்டிய அளவு முலாம்பழங்களைப் பறித்து, ஒரு சாக்குமூட்டையில் போட்டு கட்டி, தன் தோளில் தூக்கி வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது, அந்த பண்ணை முதலாளி வந்துவிட்டார். அவர் சங்கரன் பிள்ளையைப் பார்த்து, ‘என் பண்ணையில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார். அதற்கு சங்கரன்பிள்ளை, ‘நான் தெருவோரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பயங்கரமான சூறைக் காற்று அடித்து என்னை பண்ணைக்குள் தூக்கிப் போட்டுவிட்டது’ என்றார். ‘ஓஹோ, சூறைக் காற்று தூக்கிப் போட்டுவிட்டதா? அப்படியானால் இந்தப் பழங்களைப் பறித்தது யார்?’ ‘நான் ஏற்கனவே சொன்னதைப் போல அந்த சூறைக் காற்றுதான் பழங்களையும் பறித்துவிட்டது.’ ‘அப்படியானால் அந்தப் பழங்களை சாக்கு மூட்டைக்குள் போட்டது யார்?’ என்று பண்ணை முதலாளி கேட்க, அதற்கு சங்கரன் பிள்ளை சொன்னார், ‘எனக்கும் அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது!’