Question: இந்த சமூகத்திற்கு பயன்படும் விதமாக நான் செயல்பட நினைக்கிறேன். இந்த சமூகத்திற்கு நான் எப்படி பயன்படுவது? அதை நான் எப்படி தெரிந்து கொள்வது?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுக்கு என்ன வேண்டும்?

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் பொருத்தே உங்கள் வாழ்க்கை அமைகிறது. உங்கள் வாழ்க்கை முழுவதையும் செல்வம் சேர்ப்பதற்கு செலவிடப் போகிறீர்களா, அல்லது வாழ்வெனும் அழகிய மலரை மலரச் செய்வீர்களா என்ற முடிவு உங்கள் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலானோர் செல்வம் சேர்ப்பதற்கே தங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவிடுகின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்களின் வாழ்க்கைமுறை, ஆசைகள் எல்லாம் விலையுயர்ந்ததாய் இருக்கிறது. ஒரு வீட்டை வாங்கினால், அதற்கு 30 வருடங்கள் கடனாளியாய் இருக்கிறார்கள். அந்த வீடு கடனில் இல்லை, இவர்கள் தான் அந்த வீட்டிடம் கட்டுண்டு தத்தளிக்கிறார்கள். ஒரு கார் வாங்கினால், அதற்கு 10 ஆண்டுகள். படிப்பதற்கு கடன் வாங்கினாலும் கூட, அதற்கும் 15 ஆண்டுகள் பிடிக்கிறது.

உலகிற்கு நீங்கள் செய்வது, உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்பதை விட, அது இந்த உலகிற்குத் தேவையான ஒன்றாய் இருக்க வேண்டும்.

இதற்கிடையில் நீங்கள் வாழ நினைத்தால், சமுதாயத்திற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிப்பதில் பலனில்லை. இதுவே நீங்கள் அற்புதமான மனிதராகி விட்டால், அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்வது இயல்பாகவே உங்களிடம் இருக்கும். எண்ணில் அடங்கிடும் செல்வம், மற்றும் பிற பொருட்களை விட, எண்ணில் அடங்காத பல விஷயங்கள் தான் மதிப்புமிக்கவையாக இருக்கின்றன. நீங்கள் சேர்ப்பவை அனைத்தும் எண்ணில் அடங்குபவை. அவ்வழியில் நீங்கள் சேர்க்கும் செல்வம், சொத்து ஆகிவற்றை வைத்து நீங்கள் வாழ்வை சுகமாகக் கழிக்கலாம், ஆனால் அர்த்தமுள்ளதான வாழ்வை உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியாது.

சேர்த்து வைத்துக் கொள்ளுதல்...

எப்போதுமே நீங்கள் சேர்க்கும் பொருட்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்காது. அதை இழந்திடுவோமோ, தொலைத்திடுவோமோ என்ற பயம் சதா உங்களை அரித்திடும். ஆனால் வாழ்வில், எண்ணில் அடங்கிடாத பிற அம்சங்களும் உள்ளன. அவற்றை பிறருடன் பகிர்ந்து கொண்டாலும், அவை என்றுமே குறையாது. ஆம், ஒருவரிடம் இருக்கும் சந்தோஷம், ஆனந்தம், அறிவு, ஞானம் போன்றவற்றை பூட்டி, பத்திரப்படுத்திக் கொள்ள அவருக்கு அவசியம் இருக்காது. இன்னும் சொல்வதானால், அந்நிலையில் இருக்கும்போது தான், சுற்றத்திற்கு என்ன தேவை என்பதைப் பார்த்து, அதற்கு ஏற்றாற் போன்ற செயலை செய்ய முடியும்.

உலகிற்கு நீங்கள் செய்வது, உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்பதை விட, அது இந்த உலகிற்குத் தேவையான ஒன்றாய் இருக்க வேண்டும். உங்களுக்குப் பிடித்தவற்றை செய்வது உங்கள் சுதந்திரம் அல்ல. உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது என இரண்டுமே உங்களை அடிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள். உண்மைதானே! உங்களுக்குப் பிடித்ததை செய்யமுடியாமல் போனால் துயரத்தில் ஆழ்வீர்கள். பிடிக்காததை செய்ய நேர்ந்தாலும் துன்புறுவீர்கள். பிடித்ததையே செய்து கொண்டிருந்தால், அந்த வலையில் சிக்குண்டு போவீர்கள். பிடிக்காததையே செய்ய நேர்ந்தால் வாழ்வே வேதனை என்றாகிடும்.

அதனால், 'இது பிடிக்கும், அது பிடிக்கும்' என்று பிடிப்பவற்றிற்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து, அதை மட்டுமே செய்ய முற்படாமல், என்ன தேவையோ அதைச் செய்யுங்கள். எது தேவையோ அதை செய்ய ஆரம்பித்தால், கட்டுப்பாடுகள் இருக்காது. இயல்பாகவே நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே வாழ்வை முழுமையாக வாழ முடியும். விழிப்புணர்வு இல்லையெனில், அது படிப்படியாக மரணத்தை நோக்கி நகர்வதற்கு ஒப்பாகும். எண்ணிக்கையில் உங்கள் மனம் செல்லத் துவங்கினால், உங்கள் விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய்விடும்.

பணத்திற்கு என்ன பயன்?

எண்ணில் அடங்காதவை மட்டுமே வாழ்விற்கு முக்கியமானது. உண்மைதான், கையில் கொஞ்சம் காசு இருந்தால் வாழ்க்கை எளிதாக இருக்கும் தான், ஆனால் அந்த பணத்திற்கு அதற்கு மேல் வேறு எந்த பயனும் இல்லை. எண்ணிக்கையில் அடங்காதவை மட்டுமே உங்கள் வாழ்வை மேம்படுத்த முடியும். எண்ணில் அடங்காத விஷயங்களில் உங்கள் வாழ்வை செலுத்துங்கள், நீங்கள் உலகிற்கு மிக முக்கியமான பங்களிப்பாய், அன்பளிப்பாய் இருப்பீர்கள். நீங்கள் அவ்வாறு இருக்கும்போது, இது, அது, என்று குறிப்பிட்ட ஏதோ ஒன்றை செய்தால் தான் என்று அல்ல, நீங்கள் எதை செய்தாலுமே இவ்வுலகிற்கு நீங்கள் அன்பளிப்பாய் மட்டுமே இருப்பீர்கள்.