சத்குரு:

சாதாரண நேரத்தில் முட்டாள்த்தனம் என எண்ணும் செயல்களையும் கூட, மக்கள் மரணபயத்தின் பிடியில் செய்யத் துணிந்துவிடுவார்கள். காலம்காலமாகவே அதிகளவில் செல்வம் ஈட்டியவர்கள், பெரும் பதவிகளில் இருப்பவர்கள், பராக்கிரம அரசர்களாய் இருப்பவர்கள் என, வாழ்வின் உயர்நிலைகளை எட்டியவர்கள் எல்லோருமே சாகாவரம் தேடியே இருந்திருக்கிறார்கள். எகிப்து நாட்டின் 'மம்மி' என்று வழங்கப்படும் பதம்செய்யப்பட்ட மனித உடல்கள் இதற்கு ஒரு சான்று. வாழ்வில் அதீத செல்வம் ஈட்டியவர்கள் பலரும் எத்தனை செல்வம் இருந்தும் வாழ்வில் ஒரு போதாமையை, ஒரு நிறைவின்மையை உணர்கிறார்கள். செல்வந்தர்களின் நிலை பெரும்பான்மையாக இவ்வாறுதான் இருக்கிறது. எல்லாமே இருந்தும் வாழ்க்கை வெறுமையாய் இருப்பதாக உணரும் அவர்களுக்கு, இயல்பாகவே சாகாவரம் ஒரு அருமருந்தாய்த் தோன்றும். அதனால் ஒவ்வொரு அரசனும், இவ்வுலகில் உயர் பதவிகளில் அதிக அதிகாரம் கொண்டவனும் எப்படியாவது சாகாவரத்தை அடைந்திட முனைவார்கள். ஆனால் 'சாகாவரம்' என்பதுபோன்ற ஒரு சாபக்கேடு வேறொன்றுமில்லை.

ஆம், உண்மையிலேயே ஒருவரை நீங்கள் சபிக்க நினைத்தால், 'அவருக்கு மரணம் நிகழக்கூடாது' என்றும், 'அவர் என்றென்றும் வாழ்ந்திருக்க வேண்டும்' என்றும் சொல்லுங்கள். உண்மையிலேயே இதுதான் மாபெரும் தண்டனையாக இருக்கும். ஆம், கற்பனை செய்து பாருங்கள்... பத்தாயிரம் ஆண்டுகள் கழித்தும் இதே பூமியில், அதே முட்டாள்த்தனமான செயல்களை செய்து கொண்டிருப்பது எத்தனை கொடிய விஷயம்! இதுபோன்ற சாபம் வேறெதுவும் இருக்கமுடியுமா?!

முற்றிலும் முட்டாள்த்தனமான ஒரு வாழ்வை வாழ்ந்து, இறக்கும்போதும் துயரத்தில் ஆழ்ந்தவனாகவே மாண்டான். அவனை ஏன் மாமனிதன் அலெக்சாண்டர் என்று வழங்கினார்களோ... ஒருவேளை 'மகா முட்டாள்' அலெக்சாண்டர் என்று வழங்கப்பட்டது, நாளடைவில் இப்படி மறுவிப்போனதோ, என்னவோ!

மாமனிதன் அலெக்சாண்டர் பற்றிய கதை ஒன்று உண்டு. அவனை ஏன் மாமனிதன் என்று வழங்கினார்கள் என்பதில் எனக்கு சந்தேகம்தான். ஆம், அவனைப் பற்றி உயர்ந்ததாகச் சொல்ல அப்படி என்ன இருக்கிறது? 16 வயது முதல், அவன் இறந்த அவனது 32 வது வயதுவரை, அந்தப் பதினாறு வருடங்களில் அவன் இடைவிடாது போர் புரிந்துகொண்டே இருந்தான். போருக்கு மேல் போரிட்டு பல்லாயிரம் மனிதர்களை அவன் கொன்றுகுவித்தான். அதில் எவரோடும் அவனுக்குத் தனிப்பட்ட பிரச்சினை கூட எதுவுமில்லை. அவர்களை அவனுக்குத் தெரியக்கூடத் தெரியாது. சும்மா புதிதாக ஏதோ ஒரு நாட்டிற்குச் செல்வான், அங்கிருக்கும் மக்களைக் கொன்றுவிட்டு, 'இது என் இடம். இந்நாடும் என் ஆட்சிக்கு கீழ் வந்துவிட்டது' என்பான். அவன் செய்த எந்தக் காரியம் இதுவரை மக்களுக்கு நன்மை பயத்திருக்கிறது? அவ்வளவு ஏன், அவன் செய்த எந்த விஷயம் அவனுக்கே நன்மையாக இருந்திருக்கிறது? முற்றிலும் முட்டாள்த்தனமான ஒரு வாழ்வை வாழ்ந்து, இறக்கும்போதும் துயரத்தில் ஆழ்ந்தவனாகவே மாண்டான். அவனை ஏன் மாமனிதன் அலெக்சாண்டர் என்று வழங்கினார்களோ... ஒருவேளை 'மகா முட்டாள்' அலெக்சாண்டர் என்று வழங்கப்பட்டது, நாளடைவில் இப்படி மறுவிப்போனதோ, என்னவோ!

அலெக்சாண்டரும் யோகியும்

அவன் வாழ்வில் அலெக்சாண்டர் ஆசைப்பட்ட பல முட்டாள்த்தனமான விஷயங்கள் போன்றே, அவன் சாகாவரம் பெறவேண்டும் என்றும் துடித்தான்... ஏனெனில் இவ்வுலகையே அவன் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைத்தான். அந்நாளில் 'பூமி' என்று அறியப்பட்டிருந்த பரப்பளவில் பாதியை, அப்போதே மிகக் கொடூரமான வழியில் அவன் வென்றிருந்தான். ஆனால் உலகை ஆளும் அவனது 'இலட்சியத்தை' அடைய இன்னும் அதிக கால அவகாசம் தேவைப்படும் என்று அவன் உணர்ந்தபோது அவன் தவிப்பு அதிகமானது. எப்படியேனும் சாகாவரம் பெற்றால், தடையின்றி தன் இலட்சியத்தை அடையமுடியும் என்றெண்ணி அதைப் பெறுவதற்கான வழி தேடி அலைந்தான். சாகாவரம் தேடி அலைந்தவன்... இயல்பாகவே இந்தியாவிற்கு ஈர்க்கப்பட்டான். ஆம்... இந்தியா பற்றியும், நம் யோகிகள் பற்றியும் பல கதைகள் கிரேக்க நாட்டையும் சென்றடைந்திருந்தது. நம் நாட்டு யோகிகள் இறப்பதேயில்லை என்று அவன் கேள்விப் பட்டிருந்ததால், அவர்களில் ஒருவரை சந்திக்க அவன் ஆவலோடு இருந்தான். அதனால் யோகி ஒருவரை கண்டறியச் சொல்லி, தன் வீரர்களில் சிலரை தம் படைக்கு முன்னால் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தான். பல இடங்களில் தேடி, ஒருவழியாக தியானத்தில் அமர்ந்திருந்த ஒரு யோகியை அந்த வீரர்கள் கண்டறிந்தனர். அவரைப் பார்த்து, "கிளம்பி எங்களுடன் வாருங்கள். எம் மன்னர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்" என்று அதிகாரம் செய்தனர். அதற்கு அந்த யோகியோ, "நான் எங்கும் வருவதாக இல்லை. உங்கள் மன்னருக்கு வேண்டுமென்றால், அவரே இங்கு வரட்டும். அப்போது அவரை நான் தாராளமாக வரவேற்று உபசரிக்கிறேன்... ஆனால் நான் எங்கும் வரமாட்டேன்" என்றார்.

சாகாவரம் தேடி அலைந்தவன்... இயல்பாகவே இந்தியாவிற்கு ஈர்க்கப்பட்டான். ஆம்... இந்தியா பற்றியும், நம் யோகிகள் பற்றியும் பல கதைகள் கிரேக்க நாட்டையும் சென்றடைந்திருந்தது.

இதைக் கேட்டவுடன் அந்த வீரர்கள் தம் வாளை உருவி, "எங்களோடு வருகிறீரா? இல்லை உம் தலையை இங்கேயே கொய்து எங்களுடன் எடுத்துச் செல்லட்டுமா?" என்று மிரட்ட, சற்றும் அசராத அந்த யோகி, சிரித்துக் கொண்டே, "சரி, என் தலையைக் கொய்து எடுத்துச் செல்லுங்கள். ஆனால் என் தலையை வைத்து உங்கள் அரசன் என்ன செய்யமுடியும்? பயனில்லை என்றாலும் அவனுக்கு அதுதான் வேண்டுமென்றால், தாராளமாக என் தலையை அவன் எடுத்துக் கொள்ளட்டும். என் வாழ்வில் நான் செய்யவேண்டிய எல்லாவற்றையும் நான் செய்துவிட்டேன். இங்கிருந்து விடைபெறும் கட்டத்தில்தான் நான் இப்போது காத்திருக்கிறேன். நீங்கள் செய்ய நினைப்பது எனக்கு செய்யும் உதவியாக இருக்கும்."

அந்த வீரர்கள் இதுபோன்று இதுவரை கண்டதில்லை. இவர்களே பலரும் பயப்படக்கூடிய வகையில் இருப்பவர்கள். ஒருவரின் உயிரைப் பறிப்பது அவர்களுக்கு சர்வசாதாரணம். அவர்கள் வாளை உருவினால் அனைவரும் பயத்தில் நடுங்குவார்கள். ஆனால் இவரோ... "சரி! எடுத்துக்கொள்!" என்றல்லவா கூறுகிறார்!! அவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அதனால் அலெக்சாண்டரிடம் திரும்பச் சென்று, "நாங்கள் ஒரு யோகியைக் கண்டுவிட்டோம்" என்றனர்.

அவனும், 'எங்கே? அவர் எங்கே?' என்று பரபரத்தான். "அவருக்கு வர விருப்பமில்லை" "என்ன..? வர விருப்பமில்லையா? அவரைத் தரதரவென இழுத்துக் கொண்டு வரவேண்டியதுதானே?" "இல்லை, அவர் அதற்கெல்லாம் மசிபவர் போலில்லை. சிறிதளவு கூட அவருக்குப் பயமில்லை. அவர் தலையை கொய்துவிடுவோம் என்று மிரட்டியபோது, 'சரி! எடுத்துக்கொள்!' என்று விட்டார்". அலெக்சாண்டர் யோசித்தான். "என் தலையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்" என்று அலட்சியமாகச் சொல்வதானால், நிச்சயம் அவருக்கு சாகாவரம் கிடைத்திருக்க வேண்டும். அதனால் இம்முறை அவனே யோகியைச் சந்திக்கச் சென்றான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவரைச் சந்தித்து, "அய்யா யோகி, உங்களுக்கு சாகாவரம் கிடைத்திருக்கிறதா?" என்று கேட்டான். அதற்கு அந்த யோகி, "ஆமாம். சாகாவரம் மட்டுமல்ல, பொருள்நிலையின் விதிகளை எல்லாம் நான் கடந்துவிட்டேன். நான் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறேன். எல்லாவும் நானே! ஒன்றுமற்றதும் நானே" என்றார். உடனே அலெக்சாண்டர் கேட்டான், 'சாகாவரம் அடையும் நிலையை எனக்குக் கற்றுக் கொடுப்பீர்களா? உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் நான் தருகிறேன்.' இதுவரை அவன் பல நாடுகளிலும் கொள்ளையடித்திருந்த நகைகள், முத்து, வைரம், தங்கம் என பெட்டிபெட்டியாக இறக்கினான். "உலகின் செல்வங்கள் அனைத்தும் இங்கிருக்கின்றன. எனக்கு சாகாவரத்தை அடையும் வழியைக் கூறுங்கள்" என்றான்.

அந்த யோகியோ சிரித்துக் கொண்டு, "இப்பூமியில் இருந்து பலவற்றை நீ சேகரித்திருக்கிறாய். இந்த பொன்னும், வைரமும், நகையும் கூட வெறும் மண்தான். ஆனால் அதற்கு மட்டும் ஏனோ நீ இத்தனை மதிப்பளித்துவிட்டாய்! தினமும் நீ உண்பதற்கான உணவை வழங்கும் இந்த மண்ணிற்கு நீ மதிப்பளிக்கவில்லை. ஆனால்... இந்தப் பொன்னும், பொருளும், நகையும் எதற்கும் உபயோகமற்றது. அதை நீ உண்ணமுடியாது, அவற்றை வைத்து நீ வேறெதுவும் செய்யவும் கூடமுடியாது. அதைப் போய் புதையல் போன்று காக்கிறாய். இவையெல்லாம் இப்பூமியில் இருந்து நீ எடுத்திருக்கும் அற்பக் குப்பைதான். சரி, இது ஒருபுறம் இருக்கட்டும்... ஆமாம், நீ ஏன் சாகாவரம் வேண்டுமென்று நினைக்கிறாய்? அதைத் தேடும் வகையில் நீ இல்லையே!" என்றார். கோபம் கொண்ட அலெக்சாண்டரோ, "நான் சாகாவரம் அடைய எனக்கு வழிகாட்டுகிறாயா? அல்லது இங்கு இப்போதே உன் தலையை நான் வெட்டி எடுக்கவா?" என்றான்.

அவர்கள் வாளை உருவினால் அனைவரும் பயத்தில் நடுங்குவார்கள். ஆனால் இவரோ... "சரி! எடுத்துக்கொள்!" என்றல்லவா கூறுகிறார்!! அவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

 

யோகிக்கு, அலெக்சாண்டரின் பேச்சும், அவனது கோபமும் மிக வேடிக்கையாக இருந்தது. சிரித்துக்கொண்டே, "ஓ! அது உனக்கு அத்தனை முக்கியமா? சரி, அப்படியென்றால் சொல்கிறேன் கேள்" என்று சொல்லி, ஒரு காட்டைப் பற்றி விவரித்து, அதை அடையும் வழியையும் குறிப்பிட்டு, "அவ்விடத்திற்குச் சென்றால், அங்கு ஒரு குகை இருக்கும். அந்த குகைக்குள் செல். அங்கு சின்னஞ்சிறிய நீர்க்குட்டை இருக்கும். அதில் ஒரு கையளவை எடுத்துப் பருகு, உனக்கு சாகாவரம் கிடைத்துவிடும்" என்றார்.

அங்கே செல்வதற்கான அத்தனை ஆயத்தங்களையும் செய்து, தன்னிடம் இருப்பதிலேயே தலைசிறந்த வீரர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு, அந்த காட்டிற்குச் சென்றான் அலெக்சாண்டர். யோகியின் குறிப்புகளைப் பின்பற்றி, அந்தக் குகையையும் அடைந்துவிட்டான். அந்தக் குகையினுள் நுழைந்து, அக்குட்டையில் இருந்து தண்ணீரை எடுத்துப் பருக கைகளை அதை நோக்கி இறக்கினான். அப்போது அக்குட்டையின் மறுபுறம் இருந்த காகம் ஒன்று, "வேண்டாம்! அத்தண்ணீரைக் குடிக்காதே!" என்று எச்சரித்தது.

அதிசயமாய் நிமிர்ந்து பார்த்தான் அலெக்சாண்டர். ஆம், அந்தக் காகம் வழக்கம்போல், "கா...கா..." என்று கத்தவில்லை. மாறாக அது கிரேக்கமொழியில் பேசியது (அலெக்சாண்டர் கிரேக்க நாட்டினன்). அக்காகம் சொன்னது, "பலப்பல ஆண்டுகளுக்கு முன், சாகாவரம் வேண்டி அந்தக் குட்டையில் இருந்து தண்ணீரைக் குடித்து, நான் மாபெரும் தவற்றை செய்துவிட்டேன். இங்கு இப்படி நான் எத்தனை காலமாக அமர்ந்திருக்கிறேன் என்பதே எனக்கு நினைவில்லை. என்னால் இறக்கவே முடியாது என்பதுதான் என் பிரச்சினையே. வாழ்க்கையை எப்படியெப்படி எல்லாம் வேண்டுமோ, அப்படியெல்லாம் நான் வாழ்ந்து அனுபவித்துவிட்டேன்... ஆனால் என்னால் இறக்கமுடியாது. இந்நிலையின் வலியை உன்னால் கற்பனையேனும் செய்யமுடிகிறதா? இங்கு இப்படியே காலத்திற்கும் நான் இருக்கவேண்டியதுதான். இதே நிலை உனக்கும் வேண்டுமா என்று யோசி" என்றது.

அலெக்சாண்டரின் கைகள் அத்தண்ணீரில் இருந்தது. அத்தண்ணீரை அவன் குடித்திருக்க வேண்டியது. அவன் வாழ்க்கை முழுவதும் இந்த சாகாவரத்தைத் தேடி அலைந்திருந்தான். ஆனால் இப்போது அக்காகத்தின் கேள்வி அவன் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை மாற்றியது. இவ்வுலகையே வெல்ல நினைப்பது அடுத்த 50 ஆண்டுகளுக்கு மாபெரும் காரியமாய், ஏன் இலட்சியமாகக்கூட இருக்கலாம். ஆனால் 50 லட்சம் ஆண்டுகள் சென்றபின்னும் இங்கேயே இருந்தால், அப்போது அந்த இலட்சியம் எப்படி இருக்கும்..? அதைப் பரவாயில்லை என்று நினைத்தாலும்... அதற்குப் பிறகும் கூட மரணம் இருக்காதே! அலெக்சாண்டர் அங்கேயே நின்றிருந்தான் நடுக்கத்தோடு.

ஒருவழியாக அவன் புத்தி வேலைசெய்யத் துவங்கியது. அங்கிருந்து மெல்ல வெளியேறினான்... அந்நீரைப் பருகாமலே. அவன் மட்டும் அப்போது அவ்வாறு திரும்பியிருக்காவிடில் இன்றளவிலும் அவன் தொல்லை நமக்கு இருந்திருக்குமே! இறந்தவர்கள் எல்லோரும் இறந்தது நல்ல விஷயம் தானே? ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்... 'இல்லையில்லை... என் தந்தை ஒரு அற்புதமான மனிதர்!' என்று. ஆனால் அவரே முடிவின்றி பலகாலம் வாழ்ந்திருந்தால் அவரைப் பொறுத்துக் கொள்வதும்கூட பெரும் கஷ்டமாகியிருக்கும். அவரது வாழ்வை வாழ்ந்துமுடித்து, அவர் அங்கிருந்து செல்லவேண்டும். அப்போதுதான் அது நல்லது.

வாழ்வும் இறப்பும் ஒரு மூச்சில்

அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் நீங்கள் இறக்கப்போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், வாழ்வின் ஒவ்வொரு சிறு அம்சத்தையும் நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்கள். எதையுமே தவறவிடமாட்டீர்கள்.

 

இம்மனதின் பிரச்சினையே அது மரணத்தை ஏற்காததுதான். ஏனெனில் எப்போது மரணத்தை மறுக்கிறீர்களோ, நீங்கள் வாழ்வையும் மறுக்கிறீர்கள். நீங்கள் இங்கு வாழும் ஒவ்வொரு கணமும், நீங்கள் அனுபவிக்கும் வாழ்வெனும் செயல்முறையை வாழ்வென்றும் சொல்லலாம், அல்லது அதையே மரணம் என்றும் குறிக்கலாம். மரணம் என்பது உங்களுக்கு எதிர்காலத்தில் நிகழப்போகும் ஏதோவொன்றல்ல. நீங்கள் பிறந்த நொடியிலேயே, மரணத்தின் ஒருபாதி உங்களுக்கு நிகழ்ந்துவிட்டது. ஆம்... உங்கள் உள்மூச்சு, உங்கள் வாழ்க்கை. உங்கள் வெளிமூச்சு, உங்கள் மரணம்.

ஒரு குழந்தை பிறந்தவுடன், அது செய்யும் முதல் செயல், மூச்சுத்திணறல் போன்ற செய்கையுடன் முழுமையான ஒரு உள்மூச்சை இழுப்பதுதான். வாழ்வை சற்றே கவனித்தால், 'மரணத்தின்' வாயிலாக நீங்கள் விடைபெற்றுச் செல்லும் முன், கடைசியாக நீங்கள் செய்வது... ஒரு வெளிமூச்சைத்தான். வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே, வாழ்வில் ஒரு துடிப்பு, டென்ஷன் தேவைப்படுகிறது, இல்லையெனில் உங்களால் வாழ்வை நடத்திச் செல்லமுடியாது. மரணம் என்பது முழுமையான தளர்வுநிலை (relaxation). இதோ இப்போது பரிசோதனை செய்து பாருங்கள்...

ஒரு முழுமையான வெளிமூச்சு, ஒரு முழுமையான உள்மூச்சை எடுத்து உங்கள் உடலும் மனமும் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், வெளிமூச்சு உங்களை ஆசுவாசப்படுத்துகிறது. உங்களுக்கு ஆழமான ஓய்வை, ஆழமான தளர்வுநிலை அளிப்பதை உணர்வீர்கள். இன்னும் சொல்லப்போனால், உங்களுக்குள் படபடப்பும் டென்ஷனும் அதிகரிக்கும்போது, உங்கள் உடலின் இயல்பான செயல், அது வெளிமூச்சு விடுவதற்கு முற்படுவதுதான். அதைத்தான் ஒரு பெருமூச்சு என்று சொல்கிறீர்கள். அது உங்களை சற்றே ஆசுவாசப்படுத்தும்.

வாழ்வெனும் செயல்முறையில் ஈடுபடும்போதே, மரணத்தின் ஓய்வையும், தளர்வையும் நீங்கள் உணர்ந்தால், அப்போது வாழ்க்கை எவ்வித போராட்டங்களும் இன்றி, மிக இயல்பான செயல்முறையாக வெளிப்படும். இதுதான் மனிதர்களின் இயல்பான நிலை... ஆனால் அவர்கள் மனம் மரணத்தை 'கொடியதாக' தவிர்க்க நினைத்து மாபெரும் தவற்றை செய்துவிட்டதே! உங்கள் பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும் மரணம் 'கொடியது' என்று உங்களுக்கு சொல்லி வளர்த்திருக்காவிட்டால், நீங்களெல்லாம் முற்றிலும் வேறுவிதமாக 'சுவாசிப்பீர்கள்'. இது இப்படித்தான் இருந்திருக்கவேண்டும். இதை நீங்கள் சற்று கவனித்தால், மனிதமனம் மரணத்தை எதிர்ப்பதால், கிட்டத்தட்ட 99% மக்களுக்கு அவர்களின் உள்மூச்சு நடக்கும், ஆனால் அவர்களின் வெளிமூச்சு முழுமையாய் நடக்காது. இதன் ஒரு முக்கிய பக்கவிளைவு, காலப்போக்கில் உங்கள் உடலில் அளவுக்கதிகமான டென்ஷன் சேர்கிறது. மனதளவிலும், உடலளவிலும் டென்ஷன் பொறுக்கமுடியாமல் நீங்கள் வெடிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

வாழ்வும் இறப்பும் ஒரு மூச்சில்

'நானும் இறக்கக்கூடும்' என்ற புரிதல் வருவதற்குள், இன்று பலரின் வாழ்வே முடிந்துபோகிறது. உங்கள் இளமைக் காலத்தில் உங்களுக்கு மரணமே இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உடல் வலுவிழக்கும் போது, உடலில் அங்கங்கு பிரச்சினை தோன்றும்போது, இந்த பூமி மீண்டும் உங்களை அரவணைக்க அழைக்கிறாள் என்பது உங்களுக்குப் புரியத் துவங்கும். இப்பூமியினின்று இவ்வுடலை 'ஒரு கடனாகவே' நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் உடலாய் இருக்கும் இது, இதுவரை நீங்கள் உண்ட உணவுக்குவியல்தான். நீங்கள் உண்ட உணவோ, இப்பூமியின் பகுதி. எனவே நீங்களும் இப்பூமியின் ஒரு சிறுபகுதிதான். தன்னோடு சேர்ந்திடும்படி இந்த பூமி உங்களை எப்போதும் அழைத்துக் கொண்டு இருக்கிறது, ஆனால் உங்களுக்கு வயதாகும்போதுதான் இது உங்களுக்கு நன்றாகக் கேட்கிறது.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நீங்கள் சந்தோஷமாய்க் கொண்டாடவேண்டும். ஒவ்வொரு நொடியும் உங்கள் உடல் மரணத்தை நோக்கி செல்கிறது... உங்களுக்காக அது ஒருநொடி கூடக் காத்திருக்காது. நீங்கள் எப்படியும் இறந்துவிடுவீர்கள் என்பதாலேயே, வாழ்வை ஒரு ஆனந்தமான, அற்புதமான செயல்முறையாய் நீங்கள் வைக்கவேண்டும். ஒருவேளை உங்களுக்கு மரணம் இல்லையென்றால், அப்போது 100 வருடங்கள் வேண்டுமானாலும் சோகம், கவலை, துக்கம், துயரம் என்று நீங்கள் செலவழித்துவிட்டு, பின் உங்களின் 500 வது வயதில் நீங்கள் ஆனந்தமாக மாறிக் கொள்ளலாம். ஆனால் இங்கு நிலை அப்படியில்லையே! உங்களுக்கும் மரணம் உண்டு.

உங்களுக்கான கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதில் ஆற்றாமை, துயரம், கவலை, கோபத்திற்கெல்லாம் நேரமேயில்லை. துன்பத்தில் உழல்வதற்கு இவ்வாழ்வில் நேரமேது? வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும், 'எனக்கும் மரணம் உண்டு' என்ற எண்ணம் சதா உங்களிடம் இருந்தால், இந்த வாழ்வில் அனைத்தையும் உணர்ந்திடவே இந்த உயிர் விரும்பும். அப்படியென்றால் அது முழு விழிப்புடன் செயல்படும். அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் நீங்கள் இறக்கப்போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், வாழ்வின் ஒவ்வொரு சிறு அம்சத்தையும் நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்கள். எதையுமே தவறவிடமாட்டீர்கள்.

வாழ்வின் மிக அடிப்படையான இந்த 'மரணத்தை' சார்ந்திருக்கும் வகையில் நீங்கள் உங்கள் மனதையும் உணர்வுகளையும் அமைத்துக் கொண்டால், 'மரணத்தை' வாழ்க்கைச் செயல்முறையின் ஒரு அங்கமாக நீங்கள் ஏற்றால், ஒவ்வொரு நொடியிலும் இந்த ஞாபகம் உங்களுடன் இருந்தால்... வாழ்க்கை பற்றிய உங்கள் கண்ணோட்டம், உங்கள் வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதெல்லாம் முற்றிலுமாய் மாறிப்போகும். காலையில் பூத்து மாலையில் உதிர்ந்திடும் மலரைப் போன்றேதான் உங்கள் வாழ்க்கையும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று மலர்ந்திருக்கும் நீங்கள் நாளையே இறந்தும் விடுவீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்துவிட்டால், சாலையில் ஒரு மலரைக்கூட நீங்கள் தவறவிட மாட்டீர்கள். நீங்கள் முழுமையாய் 'உயிர்' சார்ந்த கண்ணோட்டத்தில் வாழத் துவங்குவீர்கள். பொருள்தன்மை தாண்டிய ஒன்றை நோக்கி மிக இயல்பாகவே உங்கள் வாழ்க்கை நகரும். அப்போது ஆன்மீக செயல்முறை உங்கள் வளர்ச்சிக்கான செயல்முறையாய் உருவெடுக்கும்.