சத்குருவும் சினிமாவும்
சினிமா என்பதோ கனவுலகம். ஆன்மீகம் என்பதோ கற்பனை, கலப்படத்திற்கு அப்பாற்பட்ட நிதர்சன உண்மை. இவ்விரண்டும் எதிர்மறை துருவமாய் இருக்க, ஞானியும் யோகியுமான சத்குருவின் வாழ்வில் சினிமாவின் தாக்கம் இருந்ததா..? அல்லது சினிமாவை ஒதுக்கி வைத்தே தான் அவர் வளர்ந்து வந்தாரா..? என்றும் போல் இன்றும் நாம் எதிர்பாரா வகையில் அமைகிறது சத்குருவின் பதில்...
 
சத்குருவும் சினிமாவும், Sadhguruvum cinemavum
 

சினிமா என்பதோ கனவுலகம். ஆன்மீகம் என்பதோ கற்பனை, கலப்படத்திற்கு அப்பாற்பட்ட நிதர்சன உண்மை. இவ்விரண்டும் எதிர்மறை துருவமாய் இருக்க, ஞானியும் யோகியுமான சத்குருவின் வாழ்வில் சினிமாவின் தாக்கம் இருந்ததா..? அல்லது சினிமாவை ஒதுக்கி வைத்தே தான் அவர் வளர்ந்து வந்தாரா..? என்றும் போல் இன்றும் நாம் எதிர்பாரா வகையில் அமைகிறது சத்குருவின் பதில்...

Question:புத்தகங்கள் போன்றே உங்களுக்கு சினிமாவின் மீதும் ஆர்வம் இருந்ததா?

சத்குரு:

என் இளவயதில் நான் பல படங்களைப் பார்த்திருக்கிறேன். வளரும் காலத்தில், நாங்கள் குடும்பமாக வாரா வாரம் திரையரங்கிற்குச் செல்வதுண்டு. ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்களுக்கு ‘சினிமா’ தினம். என் பெற்றோர் ஹிந்தி திரைப்படத்திற்குச் சென்றாலும், எங்களை ஆங்கிலப் படத்திற்குத்தான் அழைத்துச் செல்வர். அதனால் வாரம் ஒரு படம் என்பது எங்கள் வாழ்க்கையின் அங்கம்.

கல்லூரி செல்லும் நாட்களில், வகுப்பிற்குச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவு என் கையில் இருந்தபோது, நான் வாரம் இரு ஆங்கிலப் படங்கள் காண்பேன். ஆம், மைசூரில் இரு ஆங்கிலத் திரையரங்குகள் இருந்தன. அவர்கள் வாரம் ஒரு படம் மாற்றுவார்கள். அதனால் வாரம் இரண்டு, சில சமயம் மூன்று திரைப்படங்கள்கூடக் காண்பேன். அடுத்து வந்த ஒன்றரை இரண்டு ஆண்டுகளில் அங்கு திரையிடப்பட்ட எல்லா படங்களையுமே நான் கண்டு ரசித்திருக்கிறேன். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அது சலிக்க ஆரம்பித்தது.

ஒரு படத்தில், அதன் கதைக் கருவைவிட, அதன் ஒவ்வொரு காட்சியும் பதிவு செய்யப்பட்ட விதம் தான் என்னை அதிகமாக கவர்ந்தது. இன்றும்கூட ஒரு படத்தைப் பார்த்தால், அதன் ஒவ்வொரு காட்சியும் படமாக்கப் பட்டிருக்கும் விதம், அக்காட்சியைப் படமாக்க நிகழ்ந்திருக்கும் ஒருங்கிணைப்பு, அதன் ஆக்கப்பூர்வமான நேர்த்தி, இவைதான் என்னைக் கவருமே தவிர்த்து, அப்படத்தின் கதையல்ல. காரணம், அந்தக் கதை முழுவதும் கற்பனை, நிஜமல்ல என்பதை நான் அறிவேன். படத்தின் ஒவ்வொரு காட்சியும் நடிப்புதான். அதற்காக அதை ஒதுக்கிவிடுவேன் என்றல்ல, அதையும் நான் ரசிப்பேன்! ஏன், சில நேரங்களில் சில காட்சிகளில் கண்ணீர்கூட உகுத்திருக்கிறேன்... அது சோகமான கதைகளுக்காக அல்ல, படத்தில் நிஜமாகவே அழகாக ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால், என் கண்கள் பனித்திருக்கின்றன. அன்பு பெருக்கெடுக்கும் நொடிகள், சந்தோஷம் ஊற்றெடுக்கும் நொடிகள் என நான் விரும்பினால் அந்நேரங்களில் கண்ணீர் வடிப்பதுண்டு, அல்லது சும்மா வெறுமனே அமர்ந்து படத்தைத் திறனாய்வு செய்வதும் உண்டு. என்னால் இரண்டுமே முடியும். என்றாலும், என் மனம் பொதுவாகவே காட்சி நிர்வாகத்தில்தான் லயிக்கும். உதாரணமாக, ஒரு போர்க் காட்சி நடக்கிறது என்றால், ஒரு 4,000 - 5,000 பேர், அவர்களின் சீருடை - இதெல்லாம் எப்படிச் செய்திருப்பார்கள், எந்த அளவிற்கு மெனக்கெட்டிருப்பார்கள், அதை எப்படி நிர்வகித்திருப்பார்கள் போன்றவைதான் என் மனதில் ஓடும். படத்தை ரசிக்கும் அதேநேரத்தில் இந்த எண்ணங்களும் மறுபுறம் ஓடிக் கொண்டிருக்கும்.

பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள்தான் பார்த்திருக்கிறேன். ஒரு சில ஹிந்திப் படங்களைப் பார்த்திருப்பேன். என் சொந்த ஊருக்குச் செல்லும்போது மட்டும், கூட இருக்கும் சக வயது சிறுவர்களுடன் சும்மா ஏதேனும் தெலுங்குப் படத்திற்குச் செல்வதுண்டு. மற்றபடி, ஆங்கிலப் படம்தான் பெரும்பாலும்.

Question:எம்மாதிரியான படங்கள் உங்களைக் கவர்ந்தன? காந்திஜியை ‘ஹரிஷ்சந்திரா’ படம் ஈர்த்ததைப் போல், உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்க ஏதேனும் ஒரு படம் உங்களுக்கு ஊக்கமளித்ததா?

சத்குரு:

என்னைப் பார்த்தால் யாரிடமிருந்தும் ஊக்கம் பெற்றது போலா உங்களுக்குத் தோன்றுகிறது? (சிரிக்கிறார்) வாழ்க்கையின் யதார்த்தங்களைப் பார்த்து, எனக்கு வாழ்க்கையின் மீதான மயக்கம் தெளிந்திருந்தது. எதைப் பற்றியும் பெரிதாக அபிப்ராயம் இல்லாமற் போனது. இருந்தாலும் உற்சாகமும் உயிரும் தேவையான அளவில் செயல்பட்டதால், எல்லா செயல்களிலும் துடிப்போடு ஈடுபட்டேன். அதனால் எந்த நிகழ்வோ, சரித்திரமோ எனக்கு ஊக்கமளிக்கத் தேவையிருக்கவில்லை.

பொதுவுடைமை, புரட்சி போன்றவை என் இள வயதில் என்னைக் கவர்ந்தவை. இது சம்பந்தமாக நான் பல புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ரஷ்ய புரட்சி, இத்தாலியப் புரட்சிகள், ‘இரத்தம் மட்டுமே சரித்திரத்தின் சக்கரங்களை நகர்த்த வல்லது’ போன்ற வாக்கியங்கள், ஹிட்லர், முஸோலினி, லெனின், ஸ்டாலின், குரிய நாட்டின் புரட்சிகள் என பலவற்றை நான் விரும்பிப் படித்திருக்கிறேன். அவை எல்லாம் படிப்பதற்குக் கிளர்ச்சியூட்டினாலும், அவற்றில் இழையோடிய பிழைகள் எனக்கு அப்பட்டமாய்த் தெரிந்தன. அவர்களின் எண்ணத்தில், சித்தாந்தத்தில், செயல்களில் இருந்த குறைகளை என்னால் பார்க்க முடிந்தது. இவையனைத்தும் பெரும் புரட்சியாய் வடிவம் பெற்றது... ஏன் நமது சுதந்திரப் போராட்டமும் கூடத்தான். இவற்றில் வெளிப்பட்ட துணிச்சல், தைரியம், தன்னலமற்ற ஈடுபாடு எல்லாமே போற்றத் தகுந்தவை என்றாலும், இவற்றில் தொனிக்கும் குறைகள் எனக்கு அப்பட்டமாய்த் தெரிந்தன. குறைகள் இருப்பதாய் உங்களுக்குத் தோன்றிவிட்டால், பின் அவை உங்களுக்கு ஊக்கமளிக்க முடியாது அல்லவா..?

இதனாலேயே என் வாழ்வில் எதையும் எவரிடம் இருந்தும் நான் ஏற்கவில்லை. இது என் அகந்தையினால்கூட இருந்திருக்கலாம். மற்றபடி நன்றாக எடுக்கப்பட்ட எந்தப் படமாய் இருந்தாலும், ‘இதுதான், அப்படி இருந்தால்தான்’ என்றில்லாமல், நான் விரும்பிப் பார்த்திருக்கிறேன்.

Question:புரட்சிகள், புரட்சியாளர்கள் பற்றிப் படிக்கும்போது, அவர்கள் சித்தாந்தத்தில் குறைகள் இருப்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது என்று சொன்னீர்கள். இது நீங்கள் சந்தேகக் கண்ணுடனே அதை அணுகியதால் நடந்ததா... அல்லது..?

சத்குரு:

நான் சந்தேகக் கண்ணுடன் எதையும் பார்ப்பதில்லை. ஏனெனில் சந்தேகம் என்பதே, ‘என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் இப்படி நடந்து கொண்டிருக்கலாம்‘ என்பது போன்ற யூகத்தால் வருவது. எனக்கு ‘சந்தேகத்தின்’ அவசியம் இருந்ததில்லை, அது என் குணமும் இல்லை. ஏனெனில், என் மிக மிக முக்கியமான அம்சம் தெள்ளத் தெளிவான கிரகிக்கும் திறன். இருப்பதை இருக்குமாறு தெளிவாகப் பார்ப்பது. அதனால் குறைகளை நான் தேடிக் கண்டுபிடிக்கவில்லை. தெளிவாகப் பார்க்கும்போது, குறைகள் இருந்தால் அது அப்பட்டமாய்த் தெரியும். சும்மா, தெளிவாகப் பார்த்தாலே போதும்.

ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தால், அது இல்லாவிட்டாலும் அது இருப்பது போன்ற பிரமை உண்டாகும். உதாரணமாக, மரத்தடியில் பேய்களைத் தேடினால், அவை உங்கள் கண்களுக்குத் தட்டுப்படலாம், நிஜத்தில் அங்கு பேய்களே இல்லாவிடினும். அதனால் என் வாழ்வில் நான் எதையும் தேடுவதில்லை. என்ன இருக்கிறதோ, அதை அவ்வாறே பார்ப்பேன். இதைத்தான் நான் மக்களுக்கு இப்போது கற்றுத் தர முயற்சிக்கிறேன். இப்பொழுதெல்லாம், ஆன்மிகம் என்றாலே கடவுளைத் தேடி செல்வது என்று நினைக்கிறார்கள். உண்மையாகவே ஆன்மிகத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினால், எதையுமே தேடாதீர்கள், இருப்பதை இருப்பது போல் பாருங்கள். அப்படிப் பார்த்தால், அங்கிருப்பதை உங்களால் பார்க்க முடியும்.

அங்கிருப்பதைப் பார்க்க வேண்டுமா, அல்லது நீங்கள் பார்க்க விரும்புவதைப் பார்க்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உண்மையிலேயே ஆன்மீக நாட்டம் உங்களுக்கு இருந்தால், என்ன இருக்கிறதோ, அதைத்தான் பார்க்க விரும்புவீர்கள். எதையும் தேடாமல், எந்தக் கலப்படமும் செய்யாமல், சும்மா இருப்பதை இருப்பதுபோல் பார்க்கும் குணம் உங்களுக்குள் வராதவரை, உங்களால் எதையுமே தெளிவாகப் பார்க்க முடியாது. மனதினுள் ஒரு எண்ணத்தை உருவாக்கிவிட்டு, அதன் பிறகு இருப்பதைப் பார்க்க ஆரம்பித்தால், உங்கள் கண்கள் கண்களாய் வேலை செய்யாது. உங்கள் மனதின் கையாளாக, உங்கள் மனம் பார்க்க விரும்புவதையெல்லாம், அது நிஜத்தில் இல்லாவிடினும், அது காண்பிக்கும். உங்களுக்கு ஏதேதோ தெரியலாம், தெரிவதுபோல் தோன்றலாம், ஆனால் எதுவுமே நிஜமாக இருக்காது. அதனால் எவ்வித நோக்கமும் இல்லாமல், சும்மா இருப்பதை இருப்பதுபோல் பாருங்கள்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1