சத்குருவிற்கு கொள்ளுப் பாட்டி தந்த அனுபவம்!

பாட்டியிடம் கதை கேட்பது, விளையாடுவது, மடியில் உறங்குவது என்றால் அனைத்து பேரக் குழந்தைகளுக்கும் அலாதி பிரியம்தான். மற்றவர்களைப் போலவே சத்குருவிற்கும் அவரது கொள்ளுப் பாட்டியின் மேல் மதிப்புதான். ஆனால் அவர் சொன்ன கதைகளால் அல்ல, அப்படியென்றால் வேறு என்ன இருக்க முடியும்....? தொடர்ந்து படியுங்கள்....
 

பாட்டியிடம் கதை கேட்பது, விளையாடுவது, மடியில் உறங்குவது என்றால் அனைத்து பேரக் குழந்தைகளுக்கும் அலாதி பிரியம்தான். மற்றவர்களைப் போலவே சத்குருவிற்கும் அவரது கொள்ளுப் பாட்டியின் மேல் மதிப்புதான். ஆனால் அவர் சொன்ன கதைகளால் அல்ல, அப்படியென்றால் வேறு என்ன இருக்க முடியும்....? தொடர்ந்து படியுங்கள்....

சத்குரு:

என் சிறுவயதில், என் கொள்ளுப் பாட்டி, அதாவது என் தாத்தாவின் தாய் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறாள்.

என் கொள்ளுப்பாட்டி பூஜை அறையில் இருந்தால், எல்லாமே வித்தியாசமாக இருக்கும். அழுவாள், சிரிப்பாள், பாடுவாள், நடனமாடுவாள்.

தன் காலை உணவை வெளியில் எடுத்துச் சென்று, எறும்புகளுக்கும், குருவிகளுக்கும், அணில்களுக்கும் பிரித்துக் கொடுத்து அவளும் உண்பாள். சில நேரம் அனைத்தையும் அவற்றிற்கே கொடுத்துவிட்டு, அவள் ஆனந்தமாக இருப்பாள். சில நேரம் அவற்றின் பாஷையில் அவற்றோடு உரையாடுவாள், மற்ற நேரம் மௌனப் பரிமாற்றம் நடப்பது போல் இருக்கும்.

பெரியவர்கள் அவளை மனநலம் குன்றியவளாகப் பார்த்தனர். எனக்கோ, குழந்தைகள் பறவையோடும், பல்லியோடும் பேசி விளையாடுவது போல் அவளும் செய்தது தவறாகவே தெரியவில்லை.

என் தாத்தா வீட்டின் பூஜை அறையில், விதவிதமான சாமி படங்கள் தொங்கும். அனைத்துக் கடவுள்களும் தன் வியாபாரத்தில் உதவுவதாக தாத்தாவுக்கு நம்பிக்கை. வீட்டில் எல்லோருமே காலையிலேயே எழுந்து, குளித்து, பூஜை அறையில் பல ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுவார்கள். ஆனால் என் கொள்ளுப்பாட்டி பூஜை அறையில் இருந்தால், எல்லாமே வித்தியாசமாக இருக்கும். அழுவாள், சிரிப்பாள், பாடுவாள், நடனமாடுவாள்.

பூஜை அறையின் மையத்தில் மரத்தால் செய்த ஒரு சிறு மண்டபத்தில் ஒரு கடவுள் இடம் பெற்றிருந்தார். அந்த மண்டபத்தில் இருந்த சாமியை நகர்த்திவிட்டு அங்கே நான் அமர்வேன். வேறு யாராவது அங்கே இருந்தால், என்னை அடித்திருப்பார்கள். ஆனால் கொள்ளுப் பாட்டி அதை சந்தோஷமாக அனுமதிப்பாள். பலகாலம் கழித்து, ஆன்மீக அனுபவத்தின் ஆழங்களை நான் உணர்ந்தபோது தான், என் கொள்ளுப்பாட்டி ஆன்மீகத்தில் எந்த அளவிற்கு ஊன்றி இருந்தாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

என் கொள்ளுப்பாட்டியின் தலைமுறையிலும், என் தாத்தாவின் தலைமுறையிலும் வாழ்வை அணுகுவதில் இருந்த தெளிவு, என் தந்தையின் தலைமுறையில் இருக்கவில்லை. இதை பொதுப்படையாக சொல்வது சரியில்லை எனினும், அனேகமாக, நமக்கு முந்தைய தலைமுறையில் வாழ்வை அணுகுவதில் நிறைய குழப்பம் இருந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு வந்த தலைமுறையினர் தங்கள் அணுகுமுறையில் நிஜத்திலிருந்து சற்றுத் தள்ளி இருந்துவிட்டார்கள். ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுபட்டதும், அவர்கள் அதுவரை அறியாத புதிய நாடு, புதிய கலாச்சாரம் இவற்றை எதிர்கொள்வதில் சிரமப்பட்டார்கள். தங்களை இந்தியர்களாகவும் கருதாமல், ஆங்கிலேயர்களாகவும் கருத முடியாமல் திணறினார்கள். ஆங்கிலக் கலாச்சாரத்தை இந்திய முறைக்கு ஏற்றபடி சற்றே திருத்தி அமைத்துப் பின்பற்றப் பார்த்ததால் வந்த கோளாறு இது. என்றாலும் இதில் சிலர் விதிவிலக்காக இருந்தது உண்மைதான்.

பொதுவாக, ஒரு தலைமுறையினர் தாங்கள் கற்றுக் கொண்ட பாடங்களை அடுத்த தலைமுறைக்கு வழங்குகிறார்கள். அதனால்தான் முந்தைய கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல முடிகிறது. ஆனால், கருவிகளை இயக்கும் தொழில்நுட்பங்களையும், அறிவியல் சார்ந்த தகவல்களையும் மட்டும்தான் அவர்களால் முழுமையாக வழங்க முடிகிறது. வாழ்க்கையின் உண்மையான உயிர்ப்பையும் உயிரோட்டத்தையும் அல்ல. இதற்குக் காரணம், அவர்கள் கற்று அறிந்தது பிழைப்புடன் தொடர்புள்ளதாக இருக்கிறதே தவிர, வாழ்க்கையுடன் தொடர்புள்ளதாக இல்லை.

ஸ்பெயின் தேசத்தில் ஒரு மன்னன் தன் மூதாதையர் பற்றி மிகவும் அகம்பாவம் கொண்டிருந்தான். தன் அரச குடும்பத்தைத் தவிர, வேறு யாரையும் அவன் மதிக்கத் தயாராக இல்லை. ஒருமுறை, தன் தந்தை போரிட்டு மாண்ட பகுதியை பெருமையோடு பார்வையிட அவன் வந்திருந்தான். அங்கே ஒரு துறவியை அவன் எதிர்கொண்டான்.

"உன் முன்னோர்கள் உனக்கு எதையுமே விட்டுச் செல்லவில்லை. நீயாவது உன் வாரிசுகளுக்கு எதையாவது விட்டுப்போ" என்றார் துறவி.

வெகுண்டு எழுந்தான் அரசன். "பெரிய நாடு, பிரமாண்டமான அரண்மனை, கருவூலம் நிறைய அரிய பொக்கிஷங்கள் எல்லாம் என் மூதாதையர் விட்டுச் சென்றவை தான். அப்படியிருக்க, அவர்களை நீங்கள் எப்படிப் பழிக்கலாம்?" என்றான்.

துறவி புன்னகைத்தார். போரில் மரணமடைந்தவர்களின் எலும்புகள் குவியலாக இருந்த பகுதியைக் காட்டினார். "இதில் சாதாரண சிப்பாய்கள், தளபதிகள், உன் உறவினர்கள் எல்லோருடைய எலும்புகளும் கலந்து கிடக்கின்றன. உன் தந்தையின் எலும்புகளைக் கண்டுபிடித்து பொக்கிஷ அறையில் வைத்துக் கொள்" என்றார்.

அரசன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் அவனுடைய தந்தையின் எலும்புகள் எவை என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

"மற்றவர்களைப் போல்தான் உன் தந்தையும் மண்ணில் கலந்தார். உன் முன்னோர்கள் விட்டுச் சென்றதெல்லாம் அரைகுறை வாழ்க்கைக்குத்தான் பயன்படும். பிழைப்பைத்தாண்டி, வாழ்க்கையின் உண்மையான பரிமாணத்தைப் புரிந்து கொண்டவர்களால்தான், மேன்மையான அந்த உணர்வை அடுத்த தலைமுறைக்கு வழங்கிட முடியும்" என்றார் துறவி.

அரசன் தலைகுனிந்தான்.

அடுத்த தலைமுறைக்கு அன்பையும் ஆனந்தத்தையும் விட்டுச் செல்ல வேண்டுமெனில், வாழ்க்கையின் உண்மையான அழகை நீங்கள் முதலில் உணர வேண்டும். இது தான் என் ஆசையும் கூட!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1