சத்குருவின் புகைப்படத்தில் இருக்கும் ரகசியம்!
நமஸ்காரம் சத்குரு. உங்களுடைய புகைப்படத்தை சிறியதிலிருந்து பெரியதுவரை பல அளவுகளில், ஈஷா யோகா மையம் மூலமாகவே விற்கிறார்கள். ஈஷா யோகா வகுப்புகளில் இருந்தே இந்த புகைப்படத்தை விநியோகம் செய்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
 
 

Question:நமஸ்காரம் சத்குரு. உங்களுடைய புகைப்படத்தை சிறியதிலிருந்து பெரியதுவரை பல அளவுகளில், ஈஷா யோகா மையம் மூலமாகவே விற்கிறார்கள். ஈஷா யோகா வகுப்புகளில் இருந்தே இந்த புகைப்படத்தை விநியோகம் செய்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

சத்குரு:

உங்களுக்கு தேவை இருந்தால் எடுத்துக் கொண்டு போகலாம். யாரும் உங்களை வற்புறுத்துவது இல்லையே. தேவை இருக்கின்றவர்கள் எடுத்துச் செல்கிறார்கள், தேவை இல்லாதவர்களுக்கு வேண்டாம், அவ்வளவுதானே? இப்போது யாரோ ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை, அவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்றால், நாம் அவர்களுடைய புகைப்படத்தை அனுப்புங்கள் என்று சொல்கின்றோம். இறந்த யாரோ ஒருவருக்கு காலபைரவ கர்மா செய்ய வேண்டும் என்றால், அவர்களுடைய புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கூறுகின்றோம். அவர்களுடைய புகைப்படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எவ்வளவோ செய்கின்றோம். நாங்கள் அவரை பார்த்ததே இல்லை என்றாலும் புகைப்படத்தை வைத்தே பலவிதமான செயல்கள் செய்கின்றோம். அப்படியென்றால் அவருடைய பதிவு அந்த புகைப்படத்தில் இருப்பதால்தானே ஏதோ ஒன்று செய்ய முடிகிறது. கொஞ்சம் இதனை கவனித்தோமானால் அங்கு ஏதோ ஒன்று இருப்பதை உணர முடியும். இவையெல்லாம் புரியவில்லை என்றால், நமக்கு புகைப்படம் வேண்டாம் (கரவொலி).

நமக்கு புரியாதது பிரபஞ்சத்தில் நிறைய இருக்கிறது. எனக்கு புரியாதது எதுவும் இல்லை, எனக்கு புரியாதது உலகத்தில் இருக்கக்கூடாது என்றால், இது நம்முடைய முட்டாள்தனத்தின் உச்சம்.

இந்த பிரபஞ்சம் என்பதே பலவிதமான உருவம் தானே? பூமி என்பது ஒருவிதமான உருவம், சூரியன் இன்னொரு விதமான உருவம், சந்திரன் மற்றொரு விதமான உருவம். ஆண் என்பது ஒருமாதிரியான உருவம், பெண் என்பது இன்னொரு மாதிரியான உருவம். அதிலும் ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொரு மாதிரியான உருவம். இந்த உருவம், இந்த ரூபம் இப்படி வரவேண்டும் என்றால் அதற்கு அடிப்படையான ஒரு சக்தி இருக்கிறது. தானாகவே அப்படி வரவில்லை. அந்த உருவத்தில், அந்த சக்தியினுடைய பதிவு எப்போதுமே இருக்கும். இதை வைத்துதான் யந்திரங்கள் செய்கிறோம். இதை கொண்டுதான் பலவிதமான கடவுள்கள் உருவாக்கினோம். இவையெல்லாம் உங்களுடைய காரண அறிவில் நடக்கும் பிரச்சினைகள்.

நீங்கள் எங்கேயோ வெகுதொலைவில் இருக்கிறீர்கள். வீட்டிற்கு சென்று ஒரு வருடம் ஆகிவிட்டது என்றால், உங்களுடைய குழந்தையின் புகைப்படத்தையோ, மனைவியின் புகைப்படத்தையோ, கணவரின் புகைப்படத்தையோ பார்த்தால், எங்கிருந்தோ இல்லாத உணர்ச்சிகள் எல்லாம் வருகிறது இல்லையா? புகைப்படத்தில் என்ன இருக்கிறது என்று மறுத்துவிடுவீர்களா? வெறுமனே புகைப்படத்தை பார்த்தாலே ஏதேதோ நடக்கிறதா? இல்லையா? இப்போது இங்கே நிறைய பேருக்கு தமிழ் புரியாது. தமிழ் தெரிந்த நீங்கள் சிரிக்கின்றீர்கள், கை தட்டுகிறீர்கள், என்னென்னவோ செய்கிறீர்கள். தமிழ் தெரியாதவர்களோ வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தமிழ் மக்கள் தொட்டதிற்கெல்லாம் சிரிக்கிறார்கள் என்று மொழி புரியாதவர்கள் நினைத்தால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமா?

இதுவும் அப்படிதான். ஏதோ ஒன்று புரியவில்லை என்றால், எனக்கு புரியாதது எதுவும் உலகத்தில் இருக்கக்கூடாது என்று முடிவு எடுக்கவேண்டாம் (கரவொலி). நமக்கு புரியாதது பிரபஞ்சத்தில் நிறைய இருக்கிறது. எனக்கு புரியாதது எதுவும் இல்லை, எனக்கு புரியாதது உலகத்தில் இருக்கக்கூடாது என்றால், இது நம்முடைய முட்டாள்தனத்தின் உச்சம். இது ஒன்றை வைத்தே மதங்களை உருவாக்கிவிட்டார்கள். அவர்கள் சொன்னதுதான் உண்மை, அவர்கள் சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், உங்களை சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுவார்கள், அப்படித்தானே? இதுபோன்ற மனநிலையை நாம் உருவாக்க வேண்டாம்.

நான் செம்மேடு கிராமம் வழியாக செல்லுவது வழக்கம். அவ்வழியில் செல்லும் போது அங்கே வழியில் ஒரு புற்று இருக்கிறது. மக்கள் அதற்கு நல்ல சேலை கட்டி, மஞ்சள் பூசி, பூஜை செய்கிறார்கள். அது கரையான் புற்று என்பது நான் நன்கு அறிந்ததே. ஆனால் மக்களோ அதற்குள்ளே பாம்பு இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதில் பாம்பெல்லாம் கிடையாது. கரையான் தான் இருக்கிறது. பாம்பு கரையானை சாப்பிடத்தான் போகிறது. அப்படியிருந்தாலும் மக்கள் கும்பிடுகிறார்கள். நானும் காரை நிறுத்திவிட்டு கும்பிட்டு செல்கிறேன் (சிரிப்பலை).

ஒரு மனிதனுக்கு சில விஷயங்கள் மதிப்பானதாக இருக்கின்றன, அவர் அதை பக்தியாக பார்க்கிறார். அந்த புற்றில் பாம்புகூட இல்லை, அது கரையான்தான் என நான் நன்கு அறிவேன். கரையான் புற்றாய் இருந்தால் என்ன அதனையும் நான் கும்பிடுவேன், வெறும் ஒரு கரையான் வந்தாலும் கும்பிடுவேன், என்ன பிரச்சினை? (கரவொலி).

நம்முடைய கலாச்சாரத்தின் அடிப்படையே இதுதான். இதுதான் அல்லது அதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி நம் கலாச்சாரம் இல்லை. மரம் பார்த்தால், மரத்தை கும்பிட்டுக் கொள்ளலாம், மாடு பார்த்தால், மாட்டை கும்பிட்டுக் கொள்ளலாம், புற்றை பார்த்தால், புற்றை கும்பிட்டுக் கொள்ளலாம், நாய் பார்த்தால் நாயை கும்பிட்டுக் கொள்ளலாம், நமக்கு இவற்றில் எல்லாம் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஏனென்றால், எந்த படைத்தலும் படைத்தவனுடைய பதிவு இல்லாமல் இல்லை. படைத்தல் எல்லாவற்றிலுமே படைத்தவனுடைய பதிவு இருக்கிறது என்று புரிந்தால்தானே பார்த்ததை எல்லாம் கும்பிடுவோம். நம் வீட்டில் ஒரு பாத்திரம் கையில் எடுக்கவேண்டும் என்றால் கூட கும்பிட்டுதான் எடுத்துக் கொள்கிறோம், இல்லையா? இந்த பழக்கம் இன்னும் இருக்கிறதா அல்லது எல்லா பழக்கத்தையும் விட்டுவிட்டீர்களா? ஏனென்றால், பக்தி என்பது அந்த பொருளை பற்றியது இல்லை, நம்மை பற்றியது (கரவொலி).

இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த காலத்தில், வங்காளத்தில் ஒரு ராஜா இருந்தார். அந்த ராஜாவினுடைய ஆஸ்தானத்தில் ஒரு மேதை இருந்தார். அவருக்கு இராமகிருஷ்ணர் பேசுவது எல்லாம் பிடிக்கும். ஆனால் இராமகிருஷ்ணர் காளியின் புகைப்படம் ஒன்றை வைத்துக் கொண்டு கும்பிடும் போது, அவருக்கு கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. இதை பார்த்து, புகைப்படத்தில் என்ன கடவுளா இருக்கிறார்? காகிதம்தானே? என்று அந்த மேதை இராமகிருஷ்ணரிடம் தொடர்ந்து விவாதம் செய்தார். ராமகிருஷ்ணர் ஒன்றும் பேசவில்லை. ஒருநாள் அந்த மேதை இராமகிருஷ்ணரிடம் வந்தபோது, இராமகிருஷ்ணர் ராஜாவினுடைய பெரிய புகைப்படத்தை வைத்திருந்தார். ராஜாவினுடைய புகைப்படத்தை பார்த்தவுடனே அந்த மேதை தலை வணங்கி கும்பிட்டார். அப்போது இராமகிருஷ்ணர் அந்த மேதையிடம், “இந்த புகைப்படத்தின் மேல் துப்புங்கள்” என்று சொன்னார். அதற்கு அந்த மேதை, “அய்யோ! நம் மகாராஜாவினுடைய புகைப்படத்தின் மேல் நான் எப்படி துப்புவது” என்றார். துப்பினால் தலை போய்விடும் என்று அவருக்கு தெரியும் (சிரிப்பலை).

என்னுடைய தலை போய்விடும் என்று துப்பாமல் இருப்பவர்கள் ஒருவகையை சேர்ந்தவர்கள். தலை சரியான இடத்தில் இருப்பதால் துப்பாமல் இருப்பவர்கள் மற்றொரு வகையை சேர்ந்தவர்கள் (கரவொலி). எந்த வகையினரை போன்று நீங்கள் வளர வேண்டும், என்பதே கேள்வி. நம்முடைய தலை சரியான இடத்தில் இருப்பதால் எதையாவது பார்த்தால் துப்ப வேண்டும் என்று நமக்கு தோன்றுவதில்லை. எதை பார்த்தாலும் வணங்க வேண்டும் என்றுதான் நமக்கு தோன்றுகிறது (கரவொலி). இது பக்தி.

புகைப்படத்திலும் பிரச்சனை இல்லை, கல்லிலும் பிரச்சனை இல்லை, மரத்திலும் பிரச்சனை இல்லை, மாட்டிலும் பிரச்சனை இல்லை, புற்றிலும் பிரச்சனை இல்லை. அதுமட்டுமல்ல, விஞ்ஞானபூர்வமாக பார்த்தாலும்கூட அதற்கென்று தனித்தன்மை இருக்கிறது. அதை வைத்துதான் காலபைரவ கர்மா செய்கின்றோம். இல்லையென்றால், உங்களுடைய தாத்தா இறந்துவிட்டார்கள் என்றால், தாத்தாவை கொண்டு வாருங்கள் என்று சொல்ல வேண்டும். இப்போது மின்னஞ்சலில் புகைப்படத்தை அனுப்புகிறார்கள், இருந்தும் அது வேலை செய்கிறது. அப்படி என்றால் இதுவும் வேலை செய்யும்தானே? என்னுடைய புகைப்படத்தை இலவசமாக கொடுக்க மாட்டார்கள், நீங்கள்தான் வாங்க வேண்டும். அப்படியே அதன் முன்னால் கண் சிமிட்டாமல் 3 நாட்கள் உட்கார்ந்து பாருங்கள், ஏதோ ஒன்று நடக்கும் (கரவொலி).

 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
3 வருடங்கள் 6 மாதங்கள் க்கு முன்னர்

love u sathguru.....