சத்குருவின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு எப்போதும் வியப்பையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. அந்த வகையில் சத்குரு தன் இளமைக் காலத்தில் செய்த முட்டைக்கோஸ் விவசாயம் நமக்கு சொல்லும் செய்தி என்ன என்று இப்பதிவின் மூலம் அறிந்துகொள்ளுங்கள்!

சத்குரு:

இருபத்தைந்தாவது வயதிலிருந்து யோகா வகுப்புகளை எடுக்கத் தொடங்கினேன். வகுப்புகளுக்காக பயணம் செய்வது, வகுப்புகளை ஒருங்கிணைப்பது ஆகிய வேலைகளிலேயே இருந்த பணம் வேகமாகக் கரைந்தது. யோகா வகுப்புகளுக்கென பெறப்பட்ட குறைந்த கட்டணங்களின் வரவையும் செலவையும் கடைசி நாளில் கணக்கு பார்த்து, பங்கேற்பாளர்கள் முன்னிலையிலேயே மீதமுள்ள தொகையை அனாதை இல்லத்திற்கோ முதியோர் இல்லத்திற்கோ மொத்தமாகக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டி விடுவோம்.

உங்களினும் மேம்பட்ட பேரறிவுக்கு அடிமைப்படும்போது அது உங்கள் அதிர்ஷ்டம். உங்களினும் கீழான அறிவு படைத்தவர்கள் உங்களை அடிமை கொள்ள நேர்ந்தால் அது துரதிருஷ்டம்.

மூன்றரை ஆண்டுகளில் என் மொத்த சேமிப்பும் கரைந்தது. எனவே வாழ்க்கைக்காக ஏதேனும் செய்யத் திட்டமிட்டேன். அப்போது சந்தையில் முட்டைக்கோஸ் நன்கு விற்பனையானதால் முட்டைக்கோஸ் வளர்க்கத் திட்டமிட்டேன். எங்களுக்கு சொந்தமான நிலம் பின்தங்கிய பகுதியொன்றில் இருந்தது. அங்கே முட்டைக்கோஸ் நட்டால் அங்கிருக்கும் காட்டுப்பன்றிகளுக்குத்தான் அவை உணவாகும்.

நண்பர் ஒருவர் தன்னுடைய நிலத்திலிருந்து சில ஏக்கர்களை எனக்குத் தந்தார். நிலத்தைப் பண்படுத்தி, முட்டைக்கோஸ் வளர்ப்பதில் இருந்து, அறுவடை வரை அனைத்தையும் செய்ய அங்கேயே தொண்ணூறு நாட்கள் தங்குவதற்காக சென்றேன்.

எனக்கென எளிய உணவைத் தயார் செய்து கொண்டேன். உயர்ரக முட்டைக்கோஸ் விதைகளுக்கு விலை அதிகம். அவற்றைப் பகலில் நட்டால் வாடிவிடும். எனவே வீட்டுக்குள் ஒரு தட்டில் அவற்றைப் பகலில் நட்டு இரவில் ஒரு மணிவரை டார்ச் விளக்கின் துணையுடன் அவற்றை வயல்களில் நடுவேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பத்துப் பதினைந்து நாட்கள் முதுகொடிய வேலை செய்ததில் பலனில்லாமல் இல்லை. பிஞ்சு முட்டைக்கோஸ்கள் உருவாகத் தொடங்கின.

அது நவம்பர் மாதம். மைசூரில் பனி படர்ந்திருக்கும். காலையில் கதிரவனின் முதல் கீற்று பயிர்களில் விழுவதைப் பார்க்க வயல்வெளியில் அமர்ந்திருப்பேன். அவ்வளவு அற்புதமான காட்சி அது. பத்தாயிரம் குழந்தைகளைப் பெற்ற பரவசம் அதிலே கிடைக்கும். ஒவ்வொரு நாள் காலையிலும் வயல்வெளியில் அமர்ந்திருப்பேன். முட்டைக்கோஸ்களைப் பார்த்து மகிழ்வதற்கும், பாதுகாப்பதற்கும்!!

என் தந்தைக்கோ அளவில்லாத கோபம். "நன்கு நடந்த தொழிலை விட்டுவிட்டு முட்டைக்கோஸ் வளர்த்துக் கொண்டிருக்கிறான்! அதுவும் வேறொருவருடைய வயலில்" என்று பொருமித் தள்ளிவிட்டார்.

முட்டைக்கோஸ் வளர்ப்பது மகத்தான அனுபவமாக இருந்த போதிலும் அறுவடை நேரத்தில் அதன் விலை அடிமட்டத்துக்குப் போய்விட்டது. ஒரு கிலோ இருபத்தைந்து பைசாவுக்கு விற்றது. அறுவடை செய்து விற்றால் போக்குவரத்து செலவுக்குக்கூட ஆகாது.

எனவே கிராமத்தில் உள்ளவர்களையெல்லாம் அழைத்து, குடும்பத்துக்கு ஐந்து முட்டைக்கோஸ்கள் பிடுங்கிக் கொள்ளச் சொன்னேன். அப்போதும் வயலில் முட்டைக்கோஸ்கள் மீந்திருந்தன. எனவே கால்நடைகள் மேய்ந்து கொள்ள அனுமதித்தேன். சாரம்மிக்க முட்டைக்கோஸ்களை அதுவரை அவை மேய்ந்திருக்கவில்லை. மிக நல்ல விளைச்சல். மோசமான அறுவடை. எனவே சந்தைக்கென்று சிலவற்றை நீங்கள் அறுவடை செய்யப் போனால் அந்த அனுபவம் மோசமானதாக அமையக் கூடும்.

பலருக்கும் கல்லூரி வாழ்க்கை இனிக்கிறது. தேர்வெழுதப் போனால் கசக்கிறது. பணமாகவோ மதிப்பெண்ணாகவோ மற்றவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்த்தால் இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படும்.

நடக்கும் சம்பவத்தைச் சார்ந்து ஆன்மீக வளர்ச்சி நிகழ்வதில்லை. என்ன சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை உங்களுக்கு சாதகமாகவே உணரும் தன்மைதான் ஆன்மீக வளர்ச்சி.

எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் அறுவடை அனுபவம் அமோகமாக இருக்கும். விளைந்த முட்டைக்கோஸ்களை கால்நடைகள் சாப்பிடும் காட்சியைப் பார்த்த போது, முதலில் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவற்றின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்க்கும் போது போனால் போகட்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

என் திட்டங்கள் எல்லாவற்றிலுமே பெரும் வெற்றி நிகழ்ந்தாலும் அதன் பயனாகிய பணமென்று வரும்போது சூழல்கள் மாறின. ஒன்று எனக்கு விவசாயத்தில் விருப்பம் குறைந்திருக்கும், அல்லது வேறெதிலோ கவனம் சென்றிருக்கும்.

புகார்கள் செய்வதென்று நான் நினைத்திருந்தால் பல வகைகளில் புகார்கள் செய்திருக்கலாம். ஏனெனில் சில இடங்களில் ஓர் அடிமை போல் என்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள். மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக சிலவற்றை செய்ய வேண்டிய சூழலுக்குப் பலபிறவிகளில் ஆளாகியிருக்கிறேன். ஆனால் அப்படி இருப்பதும் எனக்குப் பிடித்திருந்தது.

உங்களினும் மேம்பட்ட பேரறிவுக்கு அடிமைப்படும்போது அது உங்கள் அதிர்ஷ்டம். உங்களினும் கீழான அறிவு படைத்தவர்கள் உங்களை அடிமை கொள்ள நேர்ந்தால் அது துரதிருஷ்டம்.

அறுவடை நேரத்தில், கிடைப்பதை அறுவடை செய்துகொண்டால் ஆனந்தமாக இருக்கலாம். எதிர்பார்ப்புகள் வளர்ந்தால் இன்னும் இன்னும் என்னும் எண்ணம் வளரும். 60 நாட்களில் இன்னொரு பயிர் வளர்ப்பது எப்படியென நான் எண்ணத் தொடங்கலாம்.

பாதகமான சூழல்கள் ஏற்படும் போது அவற்றை உங்களுக்கு சாதகமாகவே கருத வேண்டும். ஏனெனில் ஆழமான அறிவோ தெளிவோ அந்த வலியின் மூலம் விளையலாம். சமூக வாழ்வைப் பொறுத்தவரை சாதகம், பாதகம் என்பதற்கெல்லாம் பொருள் வேறு. ஆனால் உங்கள் வாழ்வைப் பொறுத்தவரை அதற்கான பொருளே வேறு.

நடக்கும் சம்பவத்தைச் சார்ந்து ஆன்மீக வளர்ச்சி நிகழ்வதில்லை. என்ன சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை உங்களுக்கு சாதகமாகவே உணரும் தன்மைதான் ஆன்மீக வளர்ச்சி.

உங்கள் சக்திநிலை, அறிவு, வாய்ப்புகள் ஆகியவை முற்றிலும் வேறொரு பரிமாணத்தைத் தொடும்போது அதிர்ஷ்டம் துரதிருஷ்டம் என்பதையெல்லாம் முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்க்கத் தொடங்குவீர்கள். சமூகம் உங்களைப் பழக்கிய பழைய முறையிலேயே சாதகம் பாதகம் ஆகியவற்றைப் பார்க்காதீர்கள்.

உங்களுக்கு பாதகமாகத் தோன்றுவது உண்மையில் சாதகமானதாக இருக்கலாம். அப்படி இருந்தால் உங்கள் நன்மைக்காக ஏற்படும் சூழலைக்கூட தீமையென்று நினைப்பீர்கள். நன்மையைக் கூட தீமை என்று எண்ணுவது தான் மிகப்பெரிய துரதிர்ஷ்டம். பலருக்கும் இந்தச் சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே எச்சரிக்கையாய் இருங்கள்.