தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 8

தான் படித்த பள்ளி விழாவிற்கு வருகை தரும்படி சத்குருவிடம் பள்ளி நிர்வாகத்தினர் கேட்டபோது, "நான் ஒரு நல்ல மாணவனாக இல்லை என்பது மட்டுமல்ல, நான் ஒரு மாணவனாகவே இல்லை" என்று வேடிக்கையாகக் கூறியதை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் சத்குரு. சத்குருவின் பள்ளி கல்லூரி வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சற்று விரிவாகக் கூறுகிறார் இந்த வாரப் பகுதியில்.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

இந்தப் பிறவியில், தான் இப்படி ஒரு ஆன்மிகச் சாதனை நிகழ்த்துவதற்காகவே பிறப்பெடுத்த மனிதர் என்பது சத்குருவுக்கு அவரது குழந்தைப் பருவத்திலேயே தெரியுமா, இல்லையெனில் எப்போது எப்படித் தெரியவந்தது, அப்போது அவரது அனுபவநிலை எப்படி இருந்தது போன்ற பல கேள்விகளுக்கு விடை அறிய... சத்குருவின் பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் காலங்களை விரிவாகப் பார்க்கலாம்.

புத்தகங்களைத் தொடுவதில்லை, வகுப்பறைக்குச் செல்வதில்லை, ஆனால் ஒவ்வொருவருட முடிவிலும் தேர்வுகளில் பிரமாதமாக எழுதி அடுத்தடுத்த வகுப்புக்குச் செல்வதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை.

சத்குரு அவரது குடும்பத்தில் ஒரு மாறுபட்ட குழந்தையாகத்தான் வளர்ந்திருக்கிறார். கைக் குழந்தையாக மழலை பேசிய பருவத்தில் நிகழ்ந்த சம்பவங்களும் உரையாடல்களும் யாருக்கும் நினைவில் இருப்பதில்லை. சிலருக்கு நான்கு, ஐந்து வயதில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்துதான் நினைவில் தங்கும்.

ஆனால், சத்குருவுக்கு அவர் கைக்குழந்தையாக இருந்தபோது நிகழ்ந்த பல சம்பவங்களும், சந்தித்த நபர்களும், அவர்கள் பேசிக்கொண்ட உரையாடல்களும் நன்றாக நினைவில் இருந்திருக்கிறது. அவற்றை பின்னாட்களில் தனது தாயாரிடம் சொன்னபோது... அவர் மிகவும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பள்ளிப் பருவத்தில் சத்குருவுக்கு வகுப்பறைகள் ஈர்க்கவே இல்லை. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாதவையாக உணர்ந்திருக்கிறார். பலசமயங்களில் வகுப்பறைக்குப் போகாமல் அங்குமிங்கும் சுற்றித் திரிந்திருக்கிறார். பெரும்பாலும் மரங்களின் மேல் ஏறி உட்கார்ந்துகொள்வது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காகவும் மனதுக்கு நிறைவு தரும் செயலாகவும் இருந்திருக்கிறது. மதிய உணவும் புத்தகங்களும் எடுத்துக்கொண்டு பள்ளிக்குச்செல்வது போல சைக்கிளில் புறப்பட்டு... ஆனால் பள்ளிக்குச் செல்லாமல், பள்ளிக்கு அருகில் உள்ள பெரியமரங்களில் ஏறி உச்சாணிக் கிளைக்குச் சென்று அமர்ந்துகொள்வார். உறக்கம் வந்தால் உறக்கம், பசியெடுத்தால்... எடுத்துச்சென்ற உணவு! புத்தகங்களை மட்டும் தொடுவதில்லை. பள்ளி முடிந்து எல்லோரும் புறப்படும் சமயம் மரத்திலிருந்து இறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவார்.

அதைத் தவிர, அந்த வயதிலேயே சத்குருவுக்குத் தனிமையில் காட்டுக்குள் சுற்றித் திரிவதும் மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. கொஞ்சம் பணம் கிடைத்தாலும், ரொட்டி, முட்டை என்று வாங்கிக் கொண்டு, வீட்டில் தேடப்போகிறார்களே என்று துண்டுச் சீட்டு மட்டும் எழுதிவைத்துவிட்டு, மோட்டார் சைக்கிள் எடுத்துக் கொண்டு காடுகளுக்குள் இயற்கையோடு இயற்கையாய் ஒன்றி சுற்றித் திரிவதும் மரங்களில் ஏறி அமர்வதுமே தொடர்கதையாக நிகழ்ந்தது. அதோடு மட்டுமில்லாமல், சகலவிதமான பாம்புகளையும் தைரியமாகப் பிடிக்கும் பயிற்சி பெற்றிருந்தார் சத்குரு. மூன்று நாட்களில் ஒரு பை நிறைய பாம்புகளைப் பிடித்து வைத்துக் கொள்வதுண்டு.

மரங்களின் மீது அவர் இருந்த தருணங்களில் மிகவும் ஆனந்தமாக உணர்ந்திருக்கிறார். பரவசமாக இருந்திருக்கிறார். அவை எல்லாம் தியானநிலைகள் என்பதை உணராமலேயே உணர்ந்திருக்கிறார். பிற்பாடு தன்னை உணர்ந்த ஞானியாக மாறிய பிறகுதான் அவருக்கு அந்தத் தினத்தின் உணர்வுகளுக்கு அர்த்தம் புரிந்திருக்கிறது.

புத்தகங்களைத் தொடுவதில்லை, வகுப்பறைக்குச் செல்வதில்லை, ஆனால் ஒவ்வொருவருட முடிவிலும் தேர்வுகளில் பிரமாதமாக எழுதி அடுத்தடுத்த வகுப்புக்குச் செல்வதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை.

சத்குருவின் தந்தை ஒரு புகழ்மிக்க மருத்துவர். அதனால் சத்குருவின் பள்ளிப்பருவம் முடிந்த பிறகு, அவரை மருத்துவம் படிக்கச் சொன்னார். பள்ளி எப்படி இவருக்குப் பிடிக்காத விஷயமோ, அதே போலத்தான் கல்லூரியும். மருத்துவராக விரும்பவில்லை என்று இவர் சொல்ல... குடும்பத்தினருக்கு ஆச்சரியம். சரி, பொறியியல் படி என்று சொல்ல... அதையும் சத்குரு ஏற்காததால், இவரை என்ன செய்வதென்றே புரியாமல் குழம்பிப் போனார்கள்.

கல்லூரிக்கு மற்ற மாணவர்கள் போகத்துவங்க... சத்குரு நூலகங்களுக்குப் போகத் துவங்கினார். நூலகம் திறக்கிற நேரத்துக்கு முன்பே சென்று காத்திருந்து... நூலகம் மூடும்போது கடைசி நபராக வெளியே வருபவர் இவர். ஒரு வருட காலம் நூலகத்தில் விரும்பிய புத்தகங்களைப் படித்திருக்கிறார். அதனால் ஆங்கில இலக்கியம் படிக்க ஆர்வம் வந்திருக்கிறது.

அடுத்த வருடம் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கிறேன் என்று சொன்னபோது, மீண்டும் குடும்பத்தினரிடம் எதிர்ப்பு. வேறு சில பட்டப் படிப்புகளை அவர்கள் சிபாரிசு செய்தார்கள். கல்லூரியில் படிப்பது என்றால் ஆங்கில இலக்கியம், இல்லையென்றால் கல்லூரிப் படிப்பே வேண்டாம் என்று பிடிவாதமாக நின்றதால்... சத்குருவின் பிடிவாதமே வென்றது.

ஆனால் கல்லூரியின் நடைமுறைகள் சத்குருவுக்குச் சரிவரவில்லை. விரிவுரையாளர்கள் பாடங்களை நோட்ஸ் தருவதும் அதை எல்லோரும் எழுதிக்கொள்வதும் முட்டாள்தனமாகத் தோன்ற... ‘இதுதான் வகுப்பென்றால்... அந்த நோட்ஸை அப்படியே தந்தால் ஆளுக்கொரு நகல் எடுத்துக் கொள்வோமே. நேரவிரயத்தைத் தவிர்க்கலாமே!’ என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கிறார். அது மட்டுமில்லாமல், வகுப்பறை நடைமுறைகள் பற்றிய சத்குருவின் பல நியாயமான கேள்விகளுக்கு அந்தக் கல்லூரியின் நிர்வாகத்தினரிடம் சரியான பதில்கள் இல்லை.

எனவே நிர்வாகத்துக்கும் சத்குருவுக்கும் வாய்மொழி ஒப்பந்தம் ஒன்று உருவானது. பட்டப்படிப்பு காலமான மூன்று வருடங்களுக்கும் சத்குரு வகுப்புகளுக்கு வர வேண்டுமென்பதில்லை. ஆனால் அவருக்கு வருகைப் பதிவும் மூன்றாவது ஆண்டின் இறுதியில் தேர்வெழுத அனுமதியும் தரப்படும் என்பதே அந்த ஒப்பந்தம்.

அதேபோல மூன்று ஆண்டுகளும் வகுப்புகளுக்குச் செல்லாமல் மூன்றாவது ஆண்டு இறுதியில் ஒரே சமயத்தில் பதினைந்து தேர்வுகள் எழுதி... கல்லூரியில் இரண்டாவது மாணவராகத் தேறியவர் சத்குரு.


அடுத்தவாரம்...

ஜீன்ஸ்-டீ-சர்ட் என மாடர்ன் இளைஞராக இருந்த ஜகி, தான் ஒரு ஞான மனிதர் என்பதைஎப்படி உணர்ந்து கொண்டார்? தியானலிங்கத்துக்காகவேதான் பிறப்பெடுத்திருக்கிறோம் என்பது அவருக்கு எப்படித் தெரிந்தது? தன்னுடைய முற்பிறவிகள் பற்றி எப்போது, எப்படித் தெரிந்துகொண்டார்? தெரிந்துகொள்ள காத்திருங்கள்!

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை