ஒருவர், “சத்குரு! உங்கள் முழுமையான செயல் சக்தியில் 3% மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக ஒருமுறை சொன்னீர்கள். அதன் 100% வெளிப்படும் சூழலை உருவாக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு சத்குரு சொன்ன பதில் இது:

சத்குரு:

முழுமையான சக்தி செயல்பட்டால் எப்படியிருக்கும் என்பதை பலரும் பலவிதங்களில் சொல்லியிருக்கிறார்கள். கிருஷ்ணர், “ஒளிவீசுபவற்றில் நான் சூரியனாக இருக்கிறேன். நட்சத்திரங்களில் நான் நிலவாக இருக்கிறேன். விலங்குகளில் நான் சிங்கமாக இருக்கிறேன். நதிகளில் நான் கங்கையாக இருக்கிறேன். மலைகளில் நான் இமயமாக இருக்கிறேன்” என்றார். இத்தகைய கவித்துவமான நடையில் விவரித்துக் கொண்டே போனார். “நான் கடவுளின் மகன். கடவுளின் ஒரே மகன்” என்றார் இயேசு. இது வேறுவிதமான மொழி.

இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு முட்டாளுக்கும் ஞானோதயம் தருவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.

கௌதம புத்தர் இதை இன்னும் சூட்சுமமாக சொன்னார். “என்னுடைய பாதையில் நீங்கள் நடந்தால் திரும்பி வரத் தேவையிருக்காது” என்றார். பாரத நாட்டில் “அகம் பிரம்மாஸ்மி” என்னும் உச்சாடனம் மிகவும் பிரபலம். “நான் பேருண்மை” என்பது அதன் பொருள். சூஃபி நெறியைச் சேர்ந்தவரான மன்சூர்அல் ஹல்லாஜ், பாரதம் வந்தார். தன் நாடு திரும்பிய பிறகு, “அனல் ஹக்” என்றார். “நானே உண்மை” என்பது இதன் பொருள். இதனால் அவருக்கு பலவிதமான தொல்லைகள் நேர்ந்தன.

நான் அவ்விதமான மொழிகளில் பேசப்போவதில்லை. மிகவும் எளிமையாகச் சொல்கிறேன். இந்த இருப்பின் தன்மையில் என்னவிதமான இயக்கவியலும் பரிமாணங்களும் உண்டோ, உரிய சூழலை நீங்கள் ஏற்படுத்தித் தந்தால் அவற்றில் எந்த ஒன்றையும் நோக்கி உங்களை அழைத்துச் சென்று எந்த ஒன்றையும் கையாளவும் சீர்செய்யவும் என்னால் முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான் ஒரு மெக்கானிக் - சத்குரு

நான் கடவுளும் அல்ல. நான் குருவும் அல்ல. நான் ஒரு மெக்கானிக். இந்த இருப்பின் தொழில்நுட்பம் எந்தப் பரிமாணத்தில் இருந்தாலும் என்னால் உங்களை அங்கே கொண்டு செல்ல முடியும். சீர்ப்படுத்த வேண்டியதை சீர்ப்படுத்த முடியும். நான் சொல்லும் இந்த மொழி, “விலங்குகளில் நான் சிங்கமாக இருக்கிறேன், மலைகளில் இமயமாக இருக்கிறேன், நதிகளில் கங்கையாக இருக்கிறேன்” என்பதைப்போல் கவித்துவமாக இல்லை. ஆனால், இருப்பின் தன்மையில் எனக்கிருக்கும் ஈடுபாடு, பலன் தருகிறது. இருப்பின் தன்மை அளவிட முடியாததாக, பிரம்மாண்டமான புதிராக, ஆதியும் அந்தமும் அறிய முடியாததாக இருக்கிறது. ஆனாலும் அது இயங்குகிறது.

இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்று குறித்து உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டால் இயல்பாகவே நீங்கள் மெக்கானிக்தான். இதற்கு உகந்த சூழலை உருவாக்குவது மிகப்பெரிய சவால். அப்படி உருவாக்கிவிட்டால், இருப்பின் எந்த நிலையிலும் என்னால் செயல்பட வைக்க முடியும். என் விருப்பமாக இருந்ததெல்லாம் இது ஒன்றுதான். இருப்பதெல்லாமும் இது ஒன்றுதான்.

இதற்கென்ன செய்ய வேண்டும்? முதலில் என் தலைமேல் இருக்கும் சில பொறுப்புகளை தரையில் இறக்கி வைக்க வேண்டும். அந்தத் தரையாக நீங்கள் இருக்க முடிந்தால் என்னால் பலவற்றைச் செய்ய முடியும்.

சூட்சுமமான முறையில், தேவையான அனைத்துமே அறிதல் என்னும் வடிவில் இல்லையென்றாலும் அறிய வேண்டிய அனைத்துக்குமான சாவிகள் ஒரே இடத்தில் இருக்கின்றன. போதிய விழிப்புணர்வுடன் ஒருவர் வந்தால், அவற்றைப் பெற முடியும். தியானலிங்கம் உருவாக்கியதன் நோக்கமே இதுதான். எனக்குத் தெரிந்த அனைத்தும் மட்டுமல்ல, என் குருவுக்கு என்னவெல்லாம் தெரியுமோ, அவை அனைத்தும், இந்த ஞானமரபுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவை அனைத்தும் அதிலே இருக்கிறது. அறிவின் வடிவில் இல்லை. சாவிகளின் வடிவில் இருக்கிறது. போதிய விழிப்புணர்வுடன் ஒருவர் வந்தால் இந்த இருப்பின் எந்த ஒரு கதவையும் திறந்து கொண்டு உள்ளே நுழைய முடியும். இது படைப்பின் தன்மைக்கான சாவித்துவாரம்.

21ம் நூற்றாண்டின் நிலை

ஆனால், இருபத்தோராம் நூற்றாண்டு பேச்சுகளால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய காலகட்டமாக இருக்கிறது. பேசாமல் எதையும் புரிய வைக்க முடியாது. அதேநேரம் பேச வேண்டியதைப் பேசிவிட்டால் பிறகு, நீளப் பேசுவதற்கான தேவையிருக்காது. பேச்சு விரைவாக முடிய வேண்டுமென்றால், அது கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்க வேண்டும். முரட்டுத்தனமாகவும் பேச வேண்டும், வந்தவர்களும் ஓடிவிடக் கூடாதென்றால், நம் அன்பு, பக்தி, தீவிரம் ஆகியவற்றைக் கொண்டு உரிய சூழலை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால் இங்கு வருபவர்களிடம் அதிகம் பேசாமல் என்னால் நேராக அவர்களுக்குள் நுழைய முடியும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். மென்மையாகப் பேசிக் கொண்டேயிருந்தால் எவ்வளவு பேசினாலும் மக்களுக்குப் புரியாது.

இந்த உலகையே உங்களால் திருப்பிவிட முடியாது. ஆனால், உரிய சூழலை ஏற்படுத்தினால், உலகம் தானாகத் திரும்பும்.

முரட்டுப் பேச்சு வந்தவர்களை விரட்டும் பேச்சாக இருக்கக் கூடாதென்றால் அந்த முரட்டுத்தனத்தின் பின்புலத்தில் உள்ள பேரறிவு அவர்களுக்கு புரிபட வேண்டும். இதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

மன உணர்வுகளின் ஏற்றத்தாழ்வுகள், மாறும் மனநிலைகள் ஆகியவற்றைத் தாண்டி, உறுதியாக இருக்கும் தன்மையுடன் மனிதர்கள் வருவார்களேயானால் அவர்களே அந்தச் சூழலுக்கான அடித்தளமாய் அமைவார்கள். அப்போது எவ்வளவோ செய்ய முடியும். 100% உறுதியை வெளிப்படுத்தும் சில பேர் இருந்தாலும் இதைச்செய்ய முடியும். உலகம் முழுவதும் இந்தத் தன்மையில் இருக்க வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. ஆனால், சிலரிடமாவது இந்தத் தன்மை இருந்தாக வேண்டும்.

எனவே தேவையான நேர்மை, சமநிலை, உறுதி, எண்ணம் எல்லாம் கொண்ட மனிதர்கள் நமக்குத் தேவை. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு முட்டாளுக்கும் ஞானோதயம் தருவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. உலகமென்பது நேர்மறையான அம்சங்களும் எதிர்மறையான அம்சங்களும் விளையாடுகிற கூடம். அடுத்த தலைமுறைக்கு நேர்மறையான அம்சங்களை நாம் அதிகப்படுத்தித் தந்தால் அதுவே நாம் எண்ணி பெருமைப்படக் கூடியதாக இருக்கும். குறைகளே இல்லாத உலகம் என்பது சாத்தியமில்லாத வீண்கனவு. குறைகளை விட நிறைகளே அதிகமிருக்கும் உலகில் வாழ்க்கை நன்றாக நடக்கும்.

இந்தத் தன்மையை உருவாக்க இலட்சக்கணக்கானவர்கள் தேவையில்லை. முழு உறுதியும் அர்ப்பணிப்பும் கொண்ட, ஒவ்வொரு நாளும் அடிப்படை கேள்விகளையே கேட்டுக் கொண்டிருக்காத, ஐம்பது பேர் இருந்தால் கூடப் போதும். மக்களை பெருமளவு சென்றடைய இன்றிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் மகத்தானவை.

மக்களை சென்றடைவது என்று பார்த்தால் அந்தக் காலங்களில் கிருஷ்ணருக்கோ, புத்தருக்கோ, ஏசுவுக்கோ இத்தனை வசதிகள் இருந்ததில்லை. ஒலித்தகடுகள் ஒளித்தகடுகள், தொலைக்காட்சி, இணையம் போன்றவை வழியாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இன்று சென்றுவிட முடியும். இன்றைய உலகில் எவ்வளவோ இடர்ப்பாடுகள் இருந்தாலும் இது மிகவும் மகத்தான வசதி. இதைப் பயன்படுத்தி மக்கள் தொகையின் ஒரு சதவிகிதத்தை லௌகீக சார்பிலிருந்து ஆன்மீக சார்புக்கு மாற்ற முடிந்தால் அதுவே நம்வாழ்வின் மகத்தான சாதனையாக இருக்கும். அதன்பின் எல்லோரும் இந்தத் திசையில் திரும்புவார்கள்.

இந்த உலகையே உங்களால் திருப்பிவிட முடியாது. ஆனால், உரிய சூழலை ஏற்படுத்தினால், உலகம் தானாகத் திரும்பும்.

இன்னும் உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. இதை எந்தவிதமாகக் கொண்டு செலுத்த வேண்டுமென்று முடிவெடுங்கள். உங்கள் கண்களில் தெறிக்கிற கனல், கோபத்தாலோ பேராசையாலோ எரியும் கனலாய் இல்லாமல், குளிர்ந்த கனலாக, தன்னையே எரித்துக் கொள்ளாமல் எல்லா காரியங்களையும் நிகழ்த்தும் கனலாக நின்றெரியட்டும். அதற்கான அனைத்தும் நம்வசம் இருக்கிறது.

இந்த நீரில் விஷமிருக்கிறதா, இந்தக் காற்றில் விஷம் கலந்திருக்கிறதா என அடிப்படைச் சந்தேகங்கள் அன்றாடம் கேட்காமல் இருந்தாலே உங்களால் வாழ்க்கையை இன்னும் நன்றாக வாழ முடியும். நிலத்தில் ஏணி உறுதியாக ஊன்றியிருக்கிறதா என ஆராயாமல் உங்களை ஏணி மேல் ஓடச் சொல்லவில்லை. ஆனால், ஒவ்வோர் அடியிலும் நீங்கள் பரிசோதித்துக் கொண்டேயிருந்தால் எங்கும் செல்ல இயலாது.

நேரம் என்பது வந்து வந்து போகிற ஒன்றல்ல. போய்க்கொண்டே இருக்கிற ஒன்று. இன்னும் சொல்லப்போனால் நேரம் என்பதே இல்லை. வாழ்க்கைதான் இருக்கிறது. போதிய உறுதியும் உண்மையும் சமநிலையும் உள்ள மனிதர்களை உருவாக்கினால் நம் உச்சகட்ட செயல்சக்தி உருவாவதற்கான சாத்தியங்களை நடைமுறைப்படுத்தலாம்.