மலர்களுடன் தனக்கு நேர்ந்த சிறு வயது அனுபவத்தைக் கூறும் சத்குரு, மனிதர்களும் மலரக் கூடியவர்களே என்பதை பளிச்சென்று உணர்த்துகிறார். பெண்களின் பற்று எத்தகையது என்பதை விளக்கும் பௌத்த பெண் துறவியின் கதையுடன் இதோ உங்களுக்காக.

சத்குரு:

பூக்களின் உண்மையான மதிப்பை, சிறு வயதில் நான் உணர்ந்திருக்கவில்லை. ஒரு பூவைப் பார்த்தால், அதன் அழகில் கவனம் செலுத்தியதில்லை.

'இது இவ்வளவு அழகாக இருக்கிறது என்றால், இந்தப் படைப்பின் 'மூலம்' இதைவிட எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்!!' என்று மனம் பரபரக்கும். உடனே அது பூத்திருக்கும் செடியைப் பற்றியும் அதன் வேர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் விழைவே ஏற்படும். எதைப் பார்த்தாலும், அதன் மூலத்தைப் பற்றிய கவனமே பெருகும்.

'நீ காதலுக்கும், கவிதைக்கும் லாயக்கற்றவன்!' என்று மற்றவர்கள் சொல்வார்கள்.

நான் மண்ணாக இருந்தவரை மண்தான் எனக்கு முக்கியமாகத் தோன்றியது. நானே மலர்ந்ததும், மலர்கள் என் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றன.

எனக்கு எட்டு, ஒன்பது வயது இருக்கும். அப்போதெல்லாம் ஊட்டி என்றாலே, எங்களுக்கு ஏதோ வெளிநாடுபோல் தோன்றும். ஊட்டியிலிருந்து கொண்டுவரப்பட்ட ரோஜாச் செடிகள் என்றால், சொர்க்கபுரியிலிருந்தே கொண்டுவரப்பட்டவை என்பது போன்ற மயக்கம்.

என் சகோதரிகள், ஊட்டி ரோஜாச் செடிகளை வீட்டில் வளர்த்தார்கள். சகோதர-சகோதரிகள் நான்கு பேரும் அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு. பொதுவாக, பெண்களுக்கு தங்கள் உடைமைகள் மீது எப்போதுமே கூடுதலான பற்று இருக்கும். ஒரு உதாரணம் சொல்கிறேன்...

ஒரு பௌத்த பெண் துறவி இருந்தார். எங்கே பயணம் செய்தாலும் தன் புத்தர் சிலையைக் கையோடு எடுத்துப் போவார். ஒருமுறை புத்த மடம் ஒன்றில் அவர் தங்க நேர்ந்தது. அங்கே ஆயிரக்கணக்கில் புத்தர் சிலைகள் இருந்தன. காலையில் புத்தரை வழிபட அவர் ஊதுவத்தி ஏற்றினார். அதிலிருந்து எழுந்த நறுமணப் புகை படர்ந்து பரவியது. தன் புத்தருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நறுமணம் கிடைக்காமல், மற்ற புத்த சிலைகளுக்கும் பங்கு போடப்படுவதை அவரால் பொறுக்க முடியவில்லை. காகிதத்தால் புனல்போல் ஓர் அமைப்பைச் செய்தார். புகையை அதனூடே தன் புத்தர் சிலைக்குத் திருப்பிவிட்டார். சற்று நேரத்தில் அந்த புத்தரின் மூக்கு மட்டும் கறுத்துப்போனது.

புத்த பிட்சு இது கண்டு சிரித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"புத்தரைப் பார்த்து சிரிக்கிறீர்களே?" என்று பெண்துறவி கேட்டார்.

"நான் சிரித்தது கறுத்த புத்தரைப் பார்த்து அல்ல. உன்னைப் பார்த்து!!" என்றார் பிட்சு.

துறவியாக இருந்தும்கூட பெண்களுக்கே உரிய உடைமை உணர்விலிருந்து அவரால் மீளமுடியவில்லை.

துறவியே அப்படியென்றால் என் சகோதரிகள் எம்மாத்திரம்? அந்த ரோஜாச்செடிகள் மீது உயிரையே வைத்திருந்தார்கள். செடிகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பது என் ஆசை. அதனால், தோட்டத்தில் சிதறிய சருகுகள், தின்ற பழங்களின் மிச்சங்கள், வாழைத் தோல், எஞ்சிய தயிர், சாம்பார் என்று எல்லாவற்றையும் ரோஜாச் செடிகளுக்கு வளமான எருவாகப் போடுவேன்.

ஒரு கட்டத்தில் ரோஜாக்கள் கொத்தாகப் பூத்தன.

சகோதரிகளுக்கு ஒரே குதூகலம். எனக்கோ ஏமாற்றம். எவ்வளவு எரு போட்டாலும் இவ்வளவு பெரிய செடியில் இவ்வளவு சிறிய பூக்கள்தான் மலருமா? ஒருவேளை வேர்களுக்கு போஷாக்கு போதவில்லையோ?

ஏதோ உந்துதலில் அந்த ரோஜாக்களையே பறித்து மண்ணில் எருவாகப் புதைத்துவிட்டேன்.

ரோஜாக்கள் புதைக்கப்பட்டது கண்டு சகோதரிகள் காட்டிய சீற்றம் இருக்கிறதே... பல மாதங்களுக்கு என்னை எதிரியாகவே பார்த்தார்கள். என்ன செய்வது? என் பார்வை அப்படி!

நீங்களும் மலரைப்போல் இருக்கலாம். மற்றவர்கள் பாராட்டுகிறார்களோ இல்லையோ உங்கள் தன்மையை உன்னதமாக வைத்திருக்கலாம். மற்றவர்கள் உங்களிடம் அன்பாக இருக்கிறார்களோ, இல்லையோ நீங்கள் அன்பாக இருக்கலாம்.

அழகுணர்ச்சியில் எதையும் நான் செய்தது இல்லை. ஒரு பழத்தை ருசித்தால், இதை இவ்வளவு இனிப்பாக ஆக்கியது எது என்று யோசிப்பேன். எதைப் பார்த்தாலும், அதற்குப் பின்னால் இயங்குவது எது என்பதை அறிய ஆர்வம் கொள்வேன்.

எது கிடைத்தாலும் முதலில் அதை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்வேன். பொருட்களோடு இது நிற்கவில்லை. உடலுக்குள் இயங்கும் உயிர் எங்கே போகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தற்கொலைக்குக் கூட முயன்றதைச் சொல்லியிருக்கிறேன்.

அதனால், மண்ணில் இருந்த ஆர்வம் அன்றைக்கு மலரில் இல்லை. பிற்பாடு என் அனுபவம் மேன்மையுற்றபோது, எனக்குள் ஒரு மலர்ச்சி நிகழ்ந்தது. அதன் பிறகு, பூக்களைப் பார்க்கும் என் பார்வையும் மாறியது. மனித உயிரும் மலர முடியும் என்பதை உணர்ந்த பேறு அது.

நான் மண்ணாக இருந்தவரை மண்தான் எனக்கு முக்கியமாகத் தோன்றியது. நானே மலர்ந்ததும், மலர்கள் என் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றன.

அதன் பிறகு, பூக்களின் அழகை ரசித்தேன். இசையை ரசித்தேன்.

அண்மையில் பொருளாதார மாநாட்டில் சந்தித்த ஒரு நிபுணர், "நீங்கள்தான் மரங்கள் நடுபவரா? ஒரே நாளில் பல லட்சம் மரங்களை நட்டதாகச் சொன்னார்களே?" என்றார்.

"உண்மைதான். ஆனால் மரம் நடுவதல்ல என் பணி. மனிதர்களை மலரச் செய்வதே என் நோக்கம்" என்றேன்.

பூக்கள் சொல்லும் சேதி அறிவீர்களா?

காட்டில் மலர்ந்த பூவைப் பார்த்திருக்கிறீர்களா?

யாராவது வருவார்கள், தன்னைப் பார்த்து ரசிப்பார்கள் என்று எண்ணியா அது அவ்வளவு அழகாகப் பூத்திருக்கிறது? உதிர்ந்து விழும்வரை யாரும் கவனிக்கவில்லை என்றாலும், அதன் இயல்பு மாறப்போவது இல்லை.

நீங்களும் மலரைப்போல் இருக்கலாம். மற்றவர்கள் பாராட்டுகிறார்களோ இல்லையோ உங்கள் தன்மையை உன்னதமாக வைத்திருக்கலாம். மற்றவர்கள் உங்களிடம் அன்பாக இருக்கிறார்களோ, இல்லையோ நீங்கள் அன்பாக இருக்கலாம். வெளிச்சூழ்நிலைகள் பற்றி கவலையின்றி உங்களுக்குள் முழுமையாக மலர்ந்திருக்கலாம்.

நினைவில் கொள்ளுங்கள்.
மண்தான் மூலம்,
ஆனால் மலர்தான் நோக்கம்.
அதேபோல், தெய்வம்தான் மூலம்,
வாழ்வுதான் நோக்கம்!

Parvin @ flickr