Question: சத்குரு, உங்களுடைய வாழ்க்கையில் நேர்ந்த மிக விசித்திரமான அனுபவம் என்று எதைச் சொல்வீர்கள்?

சத்குரு:

"என்னுடைய இளமைக் காலம்.

பொதுவாகவே, எனக்கு ஒரு பிரச்சினை உண்டு. எதிலாவது கவனம் வைத்தால், அது முழுமையாகத்தான் இருக்கும். அதில் இருந்து என்னை விலக்குவது கடினமாக இருக்கும். ஒரு தோட்டத்தைக் கடந்துபோனால், அங்கே எத்தனை மரங்கள் இருந்தன, எந்தவிதமான பூக்கள் பூத்திருந்தன, என்னென்ன பட்சிகள் எங்கெங்கே உட்கார்ந்து இருந்தன என்பதுவரை என்னால் துல்லியமாகச் சொல்லமுடியும்.

யாராவது என்னிடம் பேசினால், முழுமையான கவனத்துடன் வெறித்துப் பார்ப்பேன்.

ஒரு சிறு குழந்தையைப்போல, உலகில் எதைப் பார்த்தாலும், அதைப் புரிந்துகொண்டுவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு, ஆழ்ந்த வியப்போடு, அதை உற்றுப் பார்ப்பது என் வழக்கம். அறியாமை காரணமாக, என்னால் எதையும் யூகத்துக்கு விடமுடியாது. விவரங்களைத் துல்லியமாகக் கவனித்து அறிந்தால்தான் உண்டு.

ஒரு புத்தகத்தைப் படித்தால் ஓர் எழுத்துவிடாமல் படிப்பேன். ஏதோ ஒரு பகுதி போரடித்தால்கூட வேகமாகத் தாண்டிப் போவோம் என்ற பேச்சே கிடையாது. யாராவது என்னிடம் பேசினால், முழுமையான கவனத்துடன் வெறித்துப் பார்ப்பேன். ஒரு வார்த்தைகூட விடாமல் கேட்பேன். அவர்களுடைய வார்த்தைகள் தெளிவாகப் புரியும். அவற்றின் அர்த்தம் எனக்கு விளங்கும்.

ஒரு கட்டத்தில், மற்றவர்கள் பேசியபோது உற்றுக் கவனித்ததில் அவர்கள் சும்மா ஒலி எழுப்புகிறார்கள், அவற்றுக்கு நான்தான் அர்த்தம் கற்பித்துக்கொண்டு இருக்கிறேன் என்று உணர்ந்தேன்.

உங்களுக்குப் புரியாத மொழியில் ஒருவர் உங்களிடம் பேசுவதாக வைத்துக்கொள்ளுங்கள். அவை வெறும் ஒலிக் குறிப்புகளாகத்தானே இருக்கும்? அதேசமயம், அந்த மொழி தெரிந்தவர் அங்கே வந்தால், அந்த ஒலிக் குறிப்புகளுக்கு அவரால் அர்த்தம் விளங்கிக்கொள்ள முடியும் அல்லவா? அதாவது, பேசுபவர்கள் வெறும் ஒலிக்குறிப்புகளைத்தான் உதிர்க்கிறார்கள். கேட்பவர்கள்தான் அர்த்தம் கற்பித்துக்கொள்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த உண்மை விளங்கியதும், யார் எதைப் பேசினாலும், அவர்கள் ஏதோ புரியாத மொழி பேசுவதுபோல் கவனித்தேன். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கற்பித்துக்கொள்ளாமல், அவற்றை வெறும் ஒலிக் குறிப்புகளாகக் கேட்க ஆரம்பித்தேன்.

அவர்கள் ஏதோ மும்முரமாகச் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அர்த்தத்தைக் கவனிக்காமல், ஒலியை மட்டும் கேட்க ஆரம்பித்ததும், மற்றவர் பேசுகையில், ஒரு கட்டத்தில் ஒலிகளே அற்றுப்போயின. அவர்கள் வாயில் இருந்து ஏதேதோ வடிவமைப்புகள் (Patterns) வெளியே பொழிவதுபோல் தோன்றியது. பிளந்த வாயுடன் வியப்பாக அதை நான் பார்க்க ஆரம்பித்தேன்.

மிகச்சிறு குழந்தைகளிடம் இதை நீங்கள் கவனித்திருக்கலாம். மதிப்பெண்கள் வாங்குகிறார்களோ இல்லையோ, பார்ப்பதை விழுங்குவதுபோல் உற்றுப் பார்ப்பார்கள். சரியானபடி பராமரித்தால், அவர்கள் மிக அற்புதமானவர்களாக உருவாக வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அப்படி உற்றுப் பார்ப்பவர்கள் சமூகத்தின் உருட்டல், புரட்டல்களில் சிக்கிப்போகாமல், வாழக்கையை அதன் பூரணத்துவத்தை நேரடியாகக் கவனித்து உணர்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஆனால் எனக்கு ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டது, என்னை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகவேண்டும் என்று என் வீட்டாருக்குப் பயம் வந்துவிட்டது.

இன்னும் சில நாட்கள் போயின. பேசுபவர்களின் ஒலிகள் மட்டுமல்ல, அவர்களே கரைந்துபோய், எந்த வடிவமும் வார்ப்பும் இல்லாமல், காற்றில் கலைந்த புகைபோல் மிதக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் எழுப்பும் ஒலி வாயில் இருந்து மட்டுமல்லாமல், எல்லா இடங்களில் இருந்தும், உருகிப் பரவும் கலைந்த வடிவங்களாயின.

எனக்குப் புலப்பட்டதை அவர்களாலும் கவனிக்க முடிந்திருந்தால், மிரண்டுபோய் இருப்பார்கள். அவர்கள் உளறியது எதுவும் எனக்குப் புலப்படவில்லை. மாறாக, இந்தக் கரையும் வடிவமைப்புகளைக் காணக்காண, அவர்களுடைய இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் எனக்குத் தெளிவாகப் புலப்பட்டது. ஏன் இப்படி நேர்கிறது என்ற மாபெரும் குழப்பம் என்னைத் தாக்கியது.

அப்போதுதான் என் வாழ்வில் வேறொரு முக்கிய நிகழ்வு நேர்ந்தது.

ஒரு செப்டம்பர் மாதம்... மதிய நேரம்

பலமணி நேரம் தொடர்ந்து கண்களை மூடியே வைத்திருந்தேன். என் வாழ்க்கையில் நேர்ந்த மிகப்பெரிய மாற்றம் அது.

சாமுண்டி மலையில் ஒரு பெரிய பாறையில் தனியே அமர்ந்து, மலைக்காற்றை அனுபவித்து ரசித்துக்கொண்டு இருந்தேன். திடீரென்று என்னில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன். அத்தனை நாட்களாக 'நான்' என்று எதை நினைத்திருந்தேனோ, அது என் உடலின் கட்டுப்பாடுகளைத் தகர்த்துவிட்டிருந்தது. பாறை, மரம், பூமி, மலை என்று எங்கு பார்த்தாலும் நான் பரவிக்கிடந்தேன். நான் வேறு, அவை வேறு என்ற பாகுபாடு கலைந்து எல்லாமுமாக நான் இருந்தேன். நானாக எல்லாம் இருந்தது.

மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியபோது, சுமார் நான்கு, நான்கரை மணிநேரம் அந்த ஆனந்த அனுபவத்தில் திளைத்திருந்தேன் என்பதை உணர்ந்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி ஓடிக்கொண்டே இருந்தது.

அந்தப் பேரானந்தத்தைச் சுவைத்தபின், வாழ்வின் ஆதாரம் என்று அதுவரை நினைத்திருந்த எல்லாமே அபத்தமாகத் தோன்றியது. அத்தனை நாட்களாக 'நான்' என்று எதை நினைத்திருந்தேனோ, அந்த உடல் உண்மையில் நான் அல்ல, அதுவரை சாப்பிட்டிருந்த உணவின் சேகரம்தான் அது என்று புரிந்தது. அந்த உடலுடன் அடையாளப்படுத்திக் கொண்டு, மிகப் புத்திசாலித்தனமானது என்று பெருமையுடன் நினைத்திருந்த மனம், அதுவும் நானல்ல என்று புரிந்தது.

வேறு யாரையோ பார்ப்பதுபோல் என்னையே தள்ளி நின்று பார்க்கமுடிந்தது. எப்போது என் உடல், மனம் இரண்டில் இருந்தும் என்னால் விலகி நின்று பார்க்க இயன்றதோ, அப்போதே நேரமும் வெளியும் (Time and Space) அற்றுப்போயின. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் ஒன்றாகக் கலந்துவிட்டன. உள்ளே மிகப் பரவசமாகவும், வெளியே தெளிவற்ற வெகு குழப்பமான நிலையிலும் இருந்தேன். எனக்கு மனநிலை தவறுகிறதா என்று சந்தேகம் துளைத்தது.

அதற்கப்புறம் சில சோதனைகள் செய்து பார்த்தேன். இரண்டு முக்கியமான முடிவுகளுக்கு என்னால் வரமுடிந்தது.

பிரபஞ்சம் என்பது மனிதனை மையப்படுத்தி இல்லை. எல்லாமே தங்களுக்காகவும் தங்களைச் சுற்றியும் படைக்கப்பட்டு இருப்பதாக மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல, பிரபஞ்சத்தின் மிகச்சிறு பகுதிதான் மனிதர்கள். பிரபஞ்சம் நம்மைச்சுற்றி இயங்கிக்கொண்டு இருக்கவில்லை.

மனிதனின் அனுபவமானது 100 சதவிகிதம் அவனே உற்பத்தி செய்துகொள்வதுதான். அவனுடைய சூழ்நிலைகளோ, அவனைச்சுற்றி உள்ளவர்களோ அதற்குக் காரணம் இல்லை. வெளிச்சமோ, இருளோ, ஆனந்தமோ, துக்கமோ, பயமோ, பரவசமோ எதுவானாலும், உள்ளிருந்துதான் உற்பத்தியாகிறது. வெளியில் இருந்து அல்ல.

இதைப் பூரணமாக உணர்ந்தபின், வெளியே உற்றுப் பார்ப்பதை விடுத்து, கண்களை மூடிக்கொண்டேன். பலமணி நேரம் தொடர்ந்து கண்களை மூடியே வைத்திருந்தேன். என் வாழ்க்கையில் நேர்ந்த மிகப்பெரிய மாற்றம் அது.

வெளியில் குவித்துவைத்திருந்த கவனம் உள்நோக்கித் திரும்பியபோது, என் வாழ்வில் பல உலகங்கள் திறக்கப்பட்டன. அவற்றை விளக்கிச் சொல்வது அரிது. எப்போது கண்களை மூடிக்கொண்டேனோ, அதற்கப்புறம் எல்லாமே எனக்குள்தான் நேர்ந்துகொண்டு இருக்கின்றன".