Question:
சத்குரு, சமூக அளவில் யாரும் சாதிக்க முடியாததை நீங்கள் சாதித்து வருகிறீர்கள். இது எப்படி சாத்தியமாயிற்று?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏதாவது செய்துவிட்டு அதைப் பற்றியே நினைத்து நேரத்தை செலவழிக்க வேண்டாம். இன்னமும் நம் நாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கின்றன. நாட்டில் பெரும்பாலான மக்கள் சரியாக உணவு இல்லாமல் இருக்கிறார்கள். அதற்குள் சாதித்து விட்டதாக நினைக்காதீர்கள். ஒன்றும் சாதிக்க வில்லை. நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு நின்றால்தான் ஏதோ சாதிக்க முடியும். பல இலட்சம் மரக்கன்றுகளை மட்டும் நட்டுவிட்டு ஏதோ சாதித்து விட்டதாக கை தட்டிக் கொள்ள வேண்டாம்.

அவரவருடைய ஊர்களில் அவரவர் என்னென்ன செய்ய முடியுமோ அதைச் செய்தால்தானே நம்முடைய வாழ்க்கை, நம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கை, நம் நாட்டு வாழ்க்கை நலமாக இருக்க முடியும்?

கை தட்டியே நம் நாட்டினரின் கைகள் தேய்ந்து போகின்றன. அந்தக் கரங்களால் வேறு உபயோகமான செயல்கள் செய்யலாம். பெரும்பாலான மக்களுக்கு உணவில்லை. நன்றாகச் சாப்பிடுபவர்களும் ஆரோக்கியமாக இல்லை. எல்லாம் இருந்தாலும் மற்றவர்களுக்கு ஒரு உதவி செய்ய முடியவில்லை. இவ்வளவு நீண்ட பாரம்பரியமும், ஆயிரமாயிரம் வருடங்களாக வளர்ந்து வந்திருக்கின்ற கலாச்சாரமும் கொண்ட நாம் இன்னமும் எவ்வளவோ வளர்ந்திருக்கலாம். அந்த வளர்ச்சி இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு.

அடிப்படையான காரணம் என்னவென்றால் நாம் ஒரு வேலை செய்துவிட்டால் அதற்கு பத்து வார்த்தை கூற வேண்டும். ஒரு மரம் வைத்து விட்டால் அதற்கு ஒரு விழா வைக்க வேண்டும். பத்து மரம் வைத்தால் கொண்டாட்டமே நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். செய்ய வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவரவருடைய ஊர்களில் அவரவர் என்னென்ன செய்ய முடியுமோ அதைச் செய்தால்தானே நம்முடைய வாழ்க்கை, நம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கை, நம் நாட்டு வாழ்க்கை நலமாக இருக்க முடியும்? ஊரில் நீங்கள் ஒருவர் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா?

சுற்றிலும் உள்ளவர்கள் எப்படி இருந்தால் எனக்கென்ன என்றிருந்தால் ஒருநாள் உங்களை இழுத்து கிழித்துப் போட்டு விடுவார்கள். உதாரணமாக இந்த ஊரில் நான் மட்டும் நன்றாக சாப்பிடுவதாக இருந்தால் பசியோடு இருப்பவர்கள் எத்தனை நாட்கள் வேடிக்கை பார்ப்பார்கள்? ஒரு நாள் உங்களை அழித்து விடுவார்கள். பசியோடு இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்று அனுமானிக்க முடியாது. இல்லையா? அப்படியெல்லாம் நடக்கத் தேவையில்லை. ஆனால் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு, சூழ்நிலைக்குத் தேவையான செயல்களை கவனித்துச் செய்தோமானால், அப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

எதையோ சாதித்து விட்டோம் என்று கை மட்டும் தட்டாமல் மேலும் என்ன செய்ய முடியும் என்று கவனித்து நம் உயிர் உள்ளவரை நம்மால் இயன்ற ஆக்கபூர்வமான செயல்களைச் செய்தோமானால் அடுத்த தலைமுறையினர் நம்மைப் பற்றி பெருமிதமாக நினைத்துப் பார்ப்பார்கள். “எல்லாவற்றையும் அழித்து விட்ட முட்டாள்கள்” என்று நம்மைப் பற்றி நம் குழந்தைகள் நினைப்பது போல நாம் செய்து விடக்கூடாது. இந்த மாதிரி முட்டாள் தாய் தந்தைக்குப் பிறந்து விட்டோமே என்று அவர் நினைக்க வேண்டுமா? இப்பொழுது அப்படித்தான் செய்து விட்டோம்.

எதிர்கால சந்ததியினருக்கு நல்ல நீர் இல்லாமல், மூச்சுக்குக் காற்று இல்லாமல் அனைத்து அழிவு வேலையும் செய்து வருகிறோம். அதனால் நம் வாழ்க்கையைக் கவனித்து செய்ய வேண்டிய செயல்களைத் துரிதமாகச் செய்ய வேண்டும். இதில் பாராட்டுவதற்கான தேவையே இல்லை. அனைவரும் நின்று செய்ய வேண்டும். இது நம் அனைவருக்குமான பணி.