'பக்தியா? வழிபாடா? ஏமாந்தவர்கள் இருப்பார்கள்... அவர்கள் காதில் பூ சுற்றுங்கள்' என்றுதான் இன்றைய 'மாடர்ன் தாட்ஸ்' இளைஞர்கள் எண்ணுகிறார்கள். இவர்கள் ஒரு ரகம் என்றால், பரீட்சையில் பாஸ் செய்யவும், வேலையில் ப்ரமோஷன் கிடைக்கவும் வேண்டுபவர்கள் மறுபுறம். இவ்விரண்டும் வெவ்வேறு துருவம். இதில், நடுவே இருக்கும் 'ஈகுவேட்டர்' ஐ அடிக்கோடு இடுகிறார் சத்குரு...

Question: கடவுளை வழிபடுவதால் கஷ்டங்கள் தீரும் என்கிறார்கள். இது வியாபாரம் போல் அல்லவா இருக்கிறது? இது சரியா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் கலாச்சாரத்தில், பேரம் பேசுவதற்கான மொழியாக வழிபாட்டை உருவாக்கவில்லை. வழிபட்டால், கடவுள் நமக்கு ஏதேனும் செய்வார் என்ற எதிர்ப்பார்ப்புடன் செய்வதற்கும் வழிபாடு உருவாக்கப் படவில்லை. உங்களுக்குள் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கவே வழிபாடு எனும் கருவி உருவாக்கப்பட்டது.

பக்தி என்பது ஒரு மனிதனுக்குள் நுழையும் போது, அவனிடம் எல்லாவிதமான நல்ல தன்மைகளும் உருவாகிறது. என்றாலும் சும்மா அமர்ந்தநிலையில் அனைவராலும் பக்தியை உணர முடிவதில்லை. அதை உணர்வதற்கு ஏதேனும் செயல் தேவைப்படுகிறது. அதற்கான கருவியாய் உருவாக்கப் பட்டதுதான் வழிபாடு. இந்த வழிபாடு காலப்போக்கில் பல வடிவங்களை ஏற்றது. இதில் பக்தியென்பது மறக்கப்பட்டு, வியாபாரம் மேலோங்கி நிற்கிறது.

கோவிலில் செய்தால் தான் வழிபாடு என்றில்லை. வழிபாட்டை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது வழிபாடு செய்யாமல் பக்தியோடு இருக்கமுடியும் என்றால் அப்படியும் இருக்கலாம். பக்தியை பெருக்கெடுக்கச் செய்வதற்குத் தான் வழிபாடு. கோவிலில் வழிபடலாம். பணியாற்றுமிடத்தில் பக்தியோடு செயல்படலாம். முடியுமெனில் மரத்தடியில் சும்மா அமர்ந்தபடியே பக்தியோடு இருக்கலாம். இது உங்கள் விருப்பம். ஆனால் பக்தி என்பது உங்களுக்குள் வரவேண்டும். வாழ்வை முழுமையாய் உணர்வதற்கு பக்தியை போல் எளிமையான கருவி இல்லை. இதை உயர்நிலை புத்திசாலித்தனம் என்றும் கூட சொல்வர்.

கோவிலில் செய்தால் தான் வழிபாடு என்றில்லை. வழிபாட்டை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது வழிபாடு செய்யாமல் பக்தியோடு இருக்கமுடியும் என்றால் அப்படியும் இருக்கலாம்.

சில காலங்களுக்கு முன்பாக என்னிடம் ஒருவர், "நான் 25 வருடங்களாக கடவுளை வழிபட்டு வந்தும் எனக்குள் பக்தி என்பதை நான் உணர்ந்ததில்லை. ஆனால் எனக்குத் தெரிந்த மனிதர் ஒருவர் கடவுள் முன்பு அமர்ந்தவுடனேயே, அவர் கண்களில் கண்ணீர் வருகிறது. எப்பொழுதும் அவர் ஆனந்தமாக இருக்கிறார். எனக்கு ஏன் அப்படி நடக்கவில்லை?" என்று கேட்டார். "உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் யார்?" என்று கேட்டேன். அவர், "எனக்கு என் மனைவியை அதிகம் பிடிக்கும். ஆனால் அவர் இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன." என்றார்., "அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியின் புகைப்படத்தை வைத்து வழிபடுங்கள். பின்பு பார்ப்போம்" என்று அவரை அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து வந்தவர், "இப்போது என் கண்களிலும் கண்ணீர் வருகிறது. ஆனந்தமாக இருக்கிறது" என்றார்.

பக்தியை உருவாக்குவதற்குத் தான் வழிபாடு பிறந்தது. அதை மூட நம்பிக்கையாக மாற்றிடாமல் சரியான முறையில் உபயோகிக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களை ஏற்க மனமில்லை, ஆனால் கடவுள் மீது மட்டும் நமக்கு அன்பு இருக்கிறது. இது எப்படி? படைத்தவர் மீது அன்பாக இருந்தால், அவர் உருவாக்கிய படைப்புகளின் மீதும் அன்பு வர வேண்டும் தானே? நமக்கு யாரோ ஒருவரை மிகவும் பிடிக்குமென்றால் அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் நமக்குப் பிடிக்கும் அல்லவா!

பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுளின் மீது வழிபாட்டின் காரணமாக அன்பு பெருகுமாயின், அதே வழிபாட்டை சரியான விதத்தில் பயன்படுத்தினால் அவர் உருவாக்கிய படைப்புகளின் மீதும் அன்பு பெருகும். எல்லாவற்றின் மீதும் அன்பு பெருக்கெடுக்கும் போது, சொல்லில் அடங்கா இனிமையால் அவன் ஆளப்படுவான். தன்னிச்சையாக, எவ்வித முயற்சியும் இன்றி அவன் வாழ்வே இன்பமாக, ஆனந்தமாக மாறும். இதனால் தான் பக்தியும், அதை வெளிக் கொணரும் கருவியான வழிபாடும் நம் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.