Question: ரெய்கி, பிரானிக் ஹீலிங் போன்றவை மூலம் மற்றவர்களுக்கு சிகிச்சை செய்வதனால், செய்பவருக்கும் அதில் ஈடுபடுத்தப்படுபவருக்கும் என்ன நடக்கிறது. இதனால் ஏதாவது பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடுமா?

சத்குரு:

நம் உடல்நலம் எப்போதும் காரணம் மற்றும் விளைவு பொறுத்தே இருக்கிறது. இப்போது உங்களுக்கு தொற்றுநோய் வந்தது என வைத்துக்கொள்ளுங்கள். தொற்றுநோய்க்கான காரணம் ஒரு கிருமி. இது வெளிப்புறக் காரணம். இப்போது நீங்கள் கிருமிநாசினி மருந்தை உட்கொண்டு கிருமியை அதாவது அந்த வெளிப்புறக் காரணத்தை அழிக்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சக்திநிலையில் ஒருவரைக் குணப்படுத்துவது என்பது ஒரு நிலையில் கடவுளுடன் விளையாட முயற்சிப்பதாகும். தவறான வழியில் சக்தி நிலையைக் கையாள்வதாகும்.

ஆனால், மற்ற நோய்கள் வெளிக் காரணங்களால் ஏற்படுவதில்லை. அந்த நோய்களுக்கான காரணங்கள் மிகவும் ஆழமானவை, சக்தி நிலை தொடர்பானவை. நீங்களே உண்டாக்கிய கர்மவினை சக்தி நிலையில் பாதிப்பை உண்டாக்கும்போது சக்திநிலையின் சமநிலை மாறுகிறது அல்லது தவறாக இயங்குகிறது. அப்போது அது உடல் அல்லது மனத்தில் நோயாக வெளிப்படுகிறது.

ரெய்கி மற்றும் பிரானிக் ஹீலிங் போன்ற சக்தி நிலையிலான சிகிச்சை முறைகளில் நீங்கள் விளைவை மட்டும் சரி செய்கிறீர்கள். ஆனால், காரணம் அப்படியே இருக்கிறது. உங்கள் சக்திநிலையின் மேல் உங்களுக்குள்ள சிறிய கட்டுப்பாட்டால் காரணத்துக்கும் விளைவுக்கும் இடையில் ஒரு திரை போட்டு விடுகிறீர்கள். எனவே விளைவு போய்விடுகிறது. ஆனால், நோய்க்கான காரணம் போகவில்லை.

இப்போது உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சக்திநிலை மிகவும் பாதிப்பில் இருக்கிறது என்பதைக் குறிக்கவே உங்களுக்கு இந்த ஆஸ்துமா வந்தது. பிரானிக் ஹீலிங் மூலம் இப்போது ஆஸ்துமாவை குணப்படுத்திவிடுகிறோம். இப்போது விளைவு போய்விட்டது, ஆனால், காரணம் அப்படியே இருக்கிறது. எனவே, விளைவு இப்போது இன்னும் ஆழமாக வேறு ஒரு வடிவம் எடுத்து உங்கள் நிலையை உங்களுக்குத் தெரிவிக்கும். எனவே, இப்போது அடுத்த வினாடி உங்களுக்கு வேறு ஏது வேண்டுமானாலும் நேரலாம். வேறு நோய்தான் வர வேண்டும் என்பதில்லை. நீங்கள் விபத்தில்கூட சிக்க நேரிடலாம்.

சக்திநிலையில் ஒருவரைக் குணப்படுத்துவது என்பது ஒரு நிலையில் கடவுளுடன் விளையாட முயற்சிப்பதாகும். தவறான வழியில் சக்தி நிலையைக் கையாள்வதாகும். இந்த சிகிச்சை முறையில் சிகிச்சை கொடுப்பவர் மற்றும் சிகிச்சை பெறுபவர் இருவருமே பாதிக்கப்படுகின்றனர்.

நோயின் மூலத்தையே, முழுக் காரணத்தையே அடுத்தவரிடம் இருந்து உங்களுக்குள் வாங்கிக்கொள்ள முடியாவிட்டால், சிகிச்சை பெறுபவர்க்கு உண்மையான குணம் என்பது நடக்காது. அப்படி நோயின் காரணத்தையே அடுத்தவரிடம் இருந்து உங்களால் பெற முடிந்தாலும், அது உங்கள் சக்திநிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சக்திநிலையைக் கையாள்வதில் நிபுணத்துவம் இல்லாமல் இதுபோன்ற சிகிச்சையில் இறங்கக்கூடாது.

தியானலிங்கம் பிரதிஷ்டைக்காக நான் சிலமுறை நோய்க்கான காரணங்களையே அடுத்தவர்களிடம் இருந்து பெற்றிருக்கிறேன். அப்படி நான் வாங்கியபோது, காரணம் மற்றும் விளைவு என்ற இரு வகையிலும் அவர்களுக்கு நோய் நீங்கிவிட்டது. அவர்கள் தங்கள் உடலை உபயோகித்து அந்த நோயை ஓரளவு விரட்ட 10 வருடங்கள் எடுத்திருக்கலாம். ஆனால், நான் 10 நாட்களிலேயே அதை முழுவதும் நீக்க முடிந்தது. ஆனால், குறிப்பிட்ட நோக்கத்துக்காக மட்டுமே நாம் இப்படிச் செய்கிறோம். தொழில்ரீதியாகச் செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை.

யோகக் கிரியைகள் கர்மாவையே கரைத்துவிடுகின்றன. எனவே, காரணம் போய்விடுகிறது. காரணமே காணாமல் போகும்போது விளைவும் அதாவது நோயும் காணாமல் போகும்.

உங்கள் நோயின் மீது நீங்கள் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வந்தாலே, நீங்கள் நோயின் காரணத்துடன் தொடர்புகொள்கிறீர்கள். உடலின் ஒரு பாகத்தின் மீது நீங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவரும் விநாடியிலேயே உங்கள் சக்திநிலை தீவிரமாகி பல விஷயங்கள் நடக்கத் தொடங்குகின்றன. இப்படி சக்திநிலை மூலம் ஓரளவு சரி செய்தாலும், காரணமான கர்மவினை முற்றிலும் அகலுவதில்லை.

எல்லாவிதச் சிகிச்சையாளர்களும் இப்போது உலகில் பெருகி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் சக்தி நிலையிலான சிகிச்சை மேளாக்கள் நடைபெறுகின்றன. உண்மையிலேயே, மக்களை குணப்படுத்தும் ஆர்வம் சிகிச்சையாளருக்கு இருந்தால், பிரபஞ்சத்தின் சக்தி அவர் கைகளில் இருந்தால், அவர் ஏன் மருத்துவமனைக்கே சென்று அங்குள்ள நோயாளிகளைக் குணப்படுத்தக் கூடாது?

எனவே, மிகவும் சரியான வழி - யோகக் கிரியைகளைச் செய்வதே. இப்படிச் செய்யும்போது இயற்கையாகவே முழுமையாகக் குணம் அடைகிறீர்கள். யோகக் கிரியைகள் கர்மாவையே கரைத்துவிடுகின்றன. எனவே, காரணம் போய்விடுகிறது. காரணமே காணாமல் போகும்போது விளைவும் அதாவது நோயும் காணாமல் போகும். உண்மையில் எளிய சில யோகக் கிரியைகளை 3 அல்லது 4 வாரங்கள் செய்து வந்தாலே, ஆயுளுக்கும் இருக்கும் என்று நீங்கள் கருதியிருந்த நோய்கள்கூட அகன்றுவிடுகின்றன. இது ஏதோ அதிசயம் என்பதல்ல. அறிவைப் பயன்படுத்துவது. அவ்வளவுதான்!

Tamara van Molken@flickr4