இரசவாத ரகசியம்...
ஆண்-பெண் தன்மை குறித்த கேள்விகள் இந்த வாரமும் தொடர்கிறது. இந்திய இரசவாதம்; பைரவி ஏன் பூமிக்குக் கீழ் இருக்கிறாள்? தென்மேற்குத் திசையின் தனித்துவம் போன்ற புதிதான தகவல்களைக் கொண்டு அமைகிறது இந்த வாரப் பகுதி...
 
 

சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 6

ஆண்-பெண் தன்மை குறித்த கேள்விகள் இந்த வாரமும் தொடர்கிறது. இந்திய இரசவாதம்; பைரவி ஏன் பூமிக்குக் கீழ் இருக்கிறாள்? தென்மேற்குத் திசையின் தனித்துவம் போன்ற புதிதான தகவல்களைக் கொண்டு அமைகிறது இந்த வாரப் பகுதி...


சேகர் கபூர்: ஆன்மீகம் என்பது பெண் தன்மையானதா?

சத்குரு: இல்லை, அது மிகவும் சமநிலையில் இருக்கிறது, சமநிலையில் இல்லையென்றால் அது வேலை செய்யாது. ஆன்மீகம் மட்டுமல்ல, இந்த பிரபஞ்சமே ஆண்மை, பெண்மைக்கிடையில் மிகவும் சமநிலையுடன் இருக்கிறது. எனவே ஆன்மீகம் என்பதே மிகவும் பிரபஞ்சத்திற்கு உரியதுதான். ஆக, ஆன்மீகம் நிகழ்வதில் ஆண்மை, பெண்மை இரண்டும் சமபங்கு வகிக்கின்றன.

ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் கோவிலுக்குப் போகத் தேவையில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு சுயமாக சக்தியை நிரப்பிக்கொள்ளும் வழி தெரிந்திருக்கிறது. எனவே கோவில் கிரகஸ்தர்களுக்காகத்தான் நிர்மாணிக்கப்பட்டது.

சேகர்: இங்கே இப்போது கல்லில் சிற்பம் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். மென்மையாக, கலையுணர்வுடன், அழகுணர்ச்சியுடன்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் இந்தப்பணி பெண்மையைச் சேர்ந்ததா?

சத்குரு: ஆமாம், இந்தப் பணி கிட்டத்தட்ட பெண்மை நிறைந்ததாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தக் கல் இங்கு வருவதற்கு முன் எங்கேயோ மலையில் பாறையாக ஒளிந்து கொண்டிருந்தது. அந்தப் பாறையைப் பெயர்த்தெடுத்து, வண்டியில் போட்டு இங்கு கொண்டு வந்து இறக்கியது... இவையெல்லாமே ஆண்மை நிறைந்த வேலைகள். அந்த ஆண்மை நிறைந்த வேலைகள் நடக்கவில்லை என்றால், இப்போது நீங்கள் பார்க்கும் இந்த பெண்மை நிறைந்த வேலை நடைபெற வாய்ப்பே இல்லை, இல்லையா? நமது சமூகத்தில் எப்போதும் இப்படித்தான் நடக்கிறது. ஆண் வெளியில் சென்று இயற்கையாக உள்ளவற்றைத் தகர்த்து முதலில் வீட்டை உருவாக்குகிறான். பிறகு அங்கு பெண் வந்து அந்த வீட்டை அழகு செய்கிறாள். பெண் வரவில்லை என்றால் அந்த வீடு அழகானதாக மாறாது. அப்போது யாரும் அந்த வெறுமையான பாறை வீட்டில் இருக்க விரும்ப மாட்டார்கள். வீடு இருக்கும், ஆனால் வெளியில்தான் வசிப்பார்கள். பெண்மை நசுக்கப்பட்ட கலாச்சாரத்தில் அப்படி நடந்திருக்கிறது. பெரிய வீடுகள் இருக்கும், ஆனால் எப்போதும் வெளியில் செல்லவே விரும்புவார்கள் (இருவரும் சிரிக்கின்றனர்).

சேகர்: சரி, பிரதிஷ்டை என்றால் என்ன? எதை பிரதிஷ்டை செய்கிறீர்கள்?

சத்குரு: இது எப்போதும் உங்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுதான். இருப்பின் அல்லது சக்தியின் ஒரு வடிவம் இன்னொரு வடிவமாக மாறுவதுதான் இது. முன்பு மண் ஆக இருந்ததுதான் ஒரு நாள் பூவாகவோ, பழமாகவோ மாறுகிறது, இல்லையா? துர்நாற்றமான அசிங்கம் கூட நறுமணம் வீசும் மலராக மாறுகிறது. நீங்கள் இன்று சாதம் சாப்பிட்டால் அது நாளையே மனிதனாக மாறுகிறது. ஆக, மண் உணவாக மாறும்போது அதை விவசாயம் என்கிறோம். உணவு உடலாக மாறும்போது அதை செரித்தல் என்கிறோம். இதே உடலை மண் ஆக மீண்டும் மாற்றும்போது பொதுவாக மக்குதல் என்கிறோம்.

எனவே ஒரு கல்லையோ அல்லது சாதாரண ஒரு பொருளை தெய்வீகமான, நுணுக்கமான அதிர்வுகள் கொண்டதாக மாற்றும்போது அதை பிரதிஷ்டை என்கிறோம். எனவே முழு பிரபஞ்சமும் எப்போதும் இதை பல வழிகளில் செய்து கொண்டுதான் இருக்கிறது. இது ஒரு விஞ்ஞானம். இதை சித்து, இரச வாதம் என்றெல்லாம் சொல்லலாம்.

மேற்கத்திய இரசவாதம் எப்போதும் எதையாவது தங்கமாக மாற்றுவது பற்றியே பேசுகிறது. மனிதனின் பேராசைதான் தங்கத்தின் மதிப்புக்கு காரணமாக இருக்கிறதே தவிர, தங்கத்திற்கு தனியாக மதிப்பு ஏதும் இல்லை. இந்திய இரசவாதம் எப்போதும் தங்கமாக மாற்றுவதைப் பற்றிப் பேசுவதில்லை. சாதாரண தனிமத்தை மதிப்புள்ள நுணுக்கமான தனிமமாக மாற்றுவது குறித்தே பேசுகிறது. அல்லது ஒரு கல்லை தெய்வமாக மாற்றுவது குறித்தே பேசுகிறது. ஆக, முழு இந்திய இரசவாதமே ஒரு பிரதிஷ்டை செயல்முறையாகத்தான் இருக்கிறது. இப்படித்தான் இங்கு ஒவ்வொரு கல்லும் நுணுக்கமான சக்தி அதிர்வுகள் கொண்ட தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

மேலும் கோவில் என்பது நமது கலாச்சாரத்தில் பிரார்த்தனைக்குரிய இடமாக எப்போதும் இருந்ததில்லை. ஒருவர் சென்று தனக்குள் சக்தியை நிரப்பிக் கொள்ளும் விதமாகத்தான் கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் கோவிலுக்குச் சென்றால் சிறிது நேரம் உட்கார்ந்து வருமாறு உங்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால் பலர் இப்போது கோவிலுக்குச் சென்றால் உட்கார்வது போல பாசாங்கு செய்விட்டு வந்து விடுகின்றனர். அதே நேரத்தில் ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் கோவிலுக்குப் போகத் தேவையில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு சுயமாக சக்தியை நிரப்பிக்கொள்ளும் வழி தெரிந்திருக்கிறது. எனவே கோவில் கிரகஸ்தர்களுக்காகத்தான் நிர்மாணிக்கப்பட்டது.

ஆக, இந்தக் கோவில் பெண்மை சக்திக்கானது. இந்தக் கோவிலில் தேவி நிலமட்டத்திற்கும் கீழ் இருப்பாள். மக்கள் கீழிறிங்கி வந்து தரிசிக்க வேண்டும். பூமிக்குள் கால் புதைத்திருப்பது பெண்மைக்கு மிகவும் முக்கியமானது. மேலும் இந்தக் கோவில் முக்கோண வடிவிலானது. அதன் கூர்முனை தென்மேற்கு திசை நோக்கி இருக்கிறது. ஏனெனில் தென்மேற்கு முனை மிகவும் பெண்மைக்குரியது. மற்ற திசைகளைவிட தென்மேற்கு எப்படி பெண்மைக்கு உரியது என்பது செய்முறை மூலமும் நிரூபித்துக் காட்டமுடியும்.


அடுத்த வாரம்...

குழந்தைப் பருவம் பற்றியும் ஈஷா ஹோம் ஸ்கூல் பற்றியும் சேகர் கபூரின் கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள் வர உள்ளன.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1