புதுவருடம் பிறக்கும் வேளை
சத்குருவுடனான தரிசன நேரம் - தியான அன்பர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஓர் நிகழ்வு. அதுவும் புத்தாண்டு பிறப்பதற்கு முன் என்றால்? இங்கு கூடியோர் ஏராளம், அருள்பெற்றார் அனைவரும். தரிசன நேரத்தில் அவர் உதிர்த்த சில துளிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்...
 
 

சத்குருவுடனான தரிசன நேரம் - தியான அன்பர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஓர் நிகழ்வு. அதுவும் புத்தாண்டு பிறப்பதற்கு முன் என்றால்? இங்கு கூடியோர் ஏராளம், அருள்பெற்றார் அனைவரும். தரிசன நேரத்தில் அவர் உதிர்த்த சில துளிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்...

6:28

புதுவருடத்தை வரவேற்க வேறு சிறந்த வழியும் உண்டோ என்ற பெருமிதத்தில் வெகுநேரம் முன்பிருந்தே அமர்ந்திருந்த அனைவருக்கும் தரிசனமளித்திட சத்குரு வந்து அமர்ந்தார்.

6:35

ஆதி சங்கரரின் யோகரதோவா போகரதோவா பாடலை, சத்குருவைத் தொடர்ந்ந்து அனைவரும் உச்சரித்தோம்.

சூரியமண்டலத்தைப் பொருத்தவரை ஜனவரி 4ஆம் தேதியே புது வருடம் பிறக்கும் நாள், ஏனென்றால் அன்று தான் பூமி சூரியனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. காலத்தை கணக்கிட நாம் சற்று மாற்றிக்கொண்டோம்.

காலம் என்பது சுழற்சியான தன்மையின் அடையாளம். சூரியனின் சுழற்சி, சந்திரனின் சுழற்சி, மனிதனுக்குள் உள்ள சுழற்சியான தன்மை, எல்லாம் தொடர்புடையதாக உள்ளது. காலத்தின் மீது நாம் சவாரி செய்யமுடியும், அல்லது காலத்தின் சக்கரத்தால் நாம் நசுங்கிட முடியும். இரண்டும் அவரவர் கைகளிலே உள்ளது.

6:55

பூமியின் வடதுருவத்தில் இருப்பவர்களுக்கு, இந்த மார்கழி மாதத்தில் சூரியன் பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பினும் அது எதிர்திசையில் இருப்பதால், கீழ்நோக்கிய ஈர்ப்பின் காரணமாக ஒரு மந்தமான தன்மை இருக்கிறது. யோகக் கலாச்சாரம் எப்போதுமே அண்டத்தின் வடிவியலுடன் இந்த பிண்டத்தின் வடிவியலை இணக்கமாக வைத்துக்கொள்வது நோக்கியே இருந்துள்ளது.

7:05

இந்த புதுவருடம் பிறக்கும் வேளை, ஒரு மனிதனாக நான் முன்னோக்கிச் சென்றுள்ளேனா பின்னோக்கிச் சென்றுள்ளேனா என்று கணக்குப் பார்ப்பதற்கான தருணம். இதை கணக்கிட ஒரு எளிமையான வழி, நான் சென்றவருடம் இருந்ததைவிட இந்த வருடம் எனக்குள் இன்னும் ஆனந்தமான, அன்பான, கருணையான, லேசான மனிதனாக உணர்கிறேனா என்று பார்ப்பதுதான். நீங்கள் செய்யவேண்டிய இன்னொரு விஷயம், நான் வரும் வருடத்தில் எனக்குள் எப்படி இன்னும் சிறப்பான மனிதனாக இருப்பது என்று தெளிவான, திட்டவட்டமான, பெரிய திட்டமொன்றை தீட்டிடவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் இதைத் தெளிவாகத் திட்டமிடவேண்டும்.

7:15

இந்த புதுவருடத்தில், ஜூன் 21ஆம் தேதி அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது. முதன்முறையாக ஐக்கிய நாடுகளில் 177 நாடுகள் இதை ஏற்று இந்த தினத்தை அறிவித்துள்ளது. இந்த தினத்தை பெரிய தினமாக்கிட பல திட்டங்கள் நம்மிடம் உள்ளது. ஒரு சாதாரண மனிதனாக இருப்பதிலிருந்து, மிகப்பெரிய சாத்தியமாக பரிணமிக்கும் இந்த வாய்ப்பை அனைவருக்கும் எடுத்துச்செல்வதற்கான நேரமிது.

7:25

பைனியல் சுரப்பி தரும் இன்பத்திற்கும் ஆன்மீக அனுபவத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி ஒருவர் கேட்க, "இந்த சுரப்பிகளுக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பில்லை. இன்பம் என்பது வாழ்க்கையை நலமாக நடத்திடத் தேவையான மிக அடிப்படையான விஷயம். இது பெரிய சாதனையல்ல. அறிவியலை இப்படி துண்டுதுண்டாக புரிந்துகொண்டு அர்த்தம் பெயர்க்க முயலாதீர்கள்." என்று சத்குரு பதிலளித்தார்.

7:40

சக்தி வடிவமாக இருக்கும் யந்திரங்களுக்கும் உடலுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியும், உடலை சக்திவாய்ந்த யந்திரமாக மாற்றுவது பற்றியும் ஒருவர் கேட்க, "எல்லாம் யந்திரங்கள்தாம், மனித உடல் உட்பட... மனித உடலில் சக்திப்பாதைகளாகத் திகழும் நாடிகள் சந்திக்கும் சந்திப்புகள், அதாவது சக்கரங்கள் 114 உள்ளன. உங்கள் தூக்கத்திலும் உங்கள் சக்திகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்த சக்தி அமைப்பை முழுவதும் புரிந்துகொண்டு மறு ஒருங்கிணைப்பு செய்வது மூலம் உங்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். உடல் எனும் யந்திரத்தை இனப்பெருக்கம் செய்யும் யந்திரமாகவோ, பிசாசாகவோ, தெய்வீகமாகவோ செய்துகொள்ள முடியும்." என்று சத்குரு பதிலளித்தார்.

8:10

உலகம் முழுவதும் கொண்டாடிக்கொண்டு இருக்க நீங்கள் கால்கடுக்க அமர்ந்தது போதும் என்று சொல்லி, உயிர்நோக்கம் பாடலைப் பாடி அனைவரையும் மெட்டுப்போட வைத்துவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1