Question: ஆன்மீகப் பாதையில் இருக்கும் ஒருவர், புனித நூல்களைப் படிக்க வேண்டுமா? அது அவருக்கு நன்மை தருமா?

சத்குரு:

அறிவு என்பது உங்கள் நினைவுகளின் ஒரு தொகுப்பு. நினைவுகளின் தொகுப்பு என்னும்போது, நீங்கள் வாழ்க்கை பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். சேகரித்துள்ள அறிவை வைத்து இந்த வாழ்க்கை பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் பிறகு அது மிகவும் பாரபட்சமாகி விடும். பிறகு எதையும் புதிதாக அனுபவிக்க உங்களை அது அனுமதிக்காது. புதிதாக எதுவும் உங்களுக்கு நடக்காது. அறிவு, உங்கள் பிழைப்புக்கு பயனுள்ளதாக இருக்குமே தவிர, உங்கள் முக்திக்கு உதவாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நீங்கள் பாலைவனத்தில் வாழ்ந்தால், தண்ணீர் நிறைந்த ஒரு தொட்டி, உங்களுக்கு கடல் போலத் தோன்றலாம்.

"அப்படியென்றால், பிழைப்பு பற்றி அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டாமா?" நிச்சயமாக வேண்டும்தான். ஆனால் துளி மூளையைக் கொண்ட ஒரு புழு தன் பிழைப்பை பிரச்சனையில்லாமல் பார்த்துக் கொள்ளும்போது, இவ்வளவு பெரிய மூளையைக் கொண்ட நீங்கள் பிழைப்புக்காக முழு வாழ்க்கையும் முழு நேரமும் செலவிட வேண்டுமா? யோகத்தில், மூளை பதினாறு பாகங்கள் கொண்டதாக பார்க்கப்படுகிறது. இந்த பதினாறில் ஒரு பகுதி மட்டுமே பொருள் உலகில் அதீத வெற்றியடைய போதுமானது. மீதமுள்ள பதினைந்து பகுதிகளும், உங்கள் உள்நிலை நலத்துக்காக செலுத்தப்பட வேண்டும். ஏனெனில், பொருள் உலகைவிட விரிந்த இடம் உங்கள் உள்நிலைதான்.

இன்று கூட விஞ்ஞானிகள், இந்த பிரபஞ்சத்தில் நான்கு சதவிகிதம்தான் படைப்பு, மீதி உள்ள அனைத்தும், இருண்ட பொருள் அல்லது கறுப்பு சக்தி என்று சொல்கிறார்கள். ஆகையால், நான்கு சதவிகித மூளையே போதுமானது, ஆனால், ஆதிகாலத்து யோகிகள் கொஞ்சம் பெருந்தன்மையானவர்கள். இந்த பொருள் சார்ந்த வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி செல்ல அவர்கள், அதைவிட அதிகமாக, ஆறு சதவிகிதம் உங்களுக்குக் கொடுத்துள்ளனர்.

ஆகையால், மதிப்புக்குரிய இந்த நூல்கள், அறிவின் மொத்த குவியல் மட்டும்தான். பொறியியல், இலக்கியம் அல்லது வரலாற்று புத்தகமாக இருந்தால், நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். நீங்கள் இங்கே உயிர்ப்புடன் இருந்தால், மற்ற புத்தகத்தை படிப்பதை விட "நீங்கள்" என்னும் புத்தகத்தை படிப்பது சிறந்தது. அந்த படைத்தவன், தானே எழுதிய புத்தகம் நீங்கள். இந்த வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்களைப் படிப்பதே சிறந்தது. மற்ற எந்த புத்தகங்களை எடுத்து கொண்டாலும், அது கடவுளின் சொந்த வார்த்தைகளே என்றாலும், எந்த மொழியில் இருந்தாலும், அது மனிதனால் எழுதப்பட்டது. எதையும் திரித்துக் கூறுவதில் மனிதர்கள் கெட்டிக்காரர்கள்.

உதாரணமாக, நீங்கள் உங்கள் கண்களால், எதோ ஒன்றை பார்த்ததை, பக்கத்து வீட்டுகாரரிடம் சொல்ல, அவர் அதை வேறு யாரோ ஒருவரிடம் சொல்ல, இப்படி இருபத்தி நான்கு மணி நேரத்தில், இருபத்தி ஐந்து பேர் வழியாக சென்று வந்தால், பிறகு அந்தக் கடைசி மனிதர் சொல்லும் கதை நீங்கள் ஆரம்பத்தில் சொன்னதிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கும். ஏனெனில் எதையும் திரித்துக் கூறுவதில் மனிதர்கள் மிகவும் சிறந்தவர்கள். எனவே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்து நிற்கும் இந்த நூல்கள் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளமுடியும்.

உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், யாரோ ஒருவர் எழுதிய ஒரு புத்தகத்தை படிக்க வேண்டாம். நீங்கள் உங்களைப் பற்றி, ஒரு புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், பிறகு 'நீங்கள்' என்பது நிஜம் அல்ல, வெறும் கதை மட்டுமே. உங்களை நீங்கள் உள்நோக்கிப் பார்க்க வேண்டும். உள்நோக்கி பார்க்கத் தேவையான கருவிகள் உங்களிடம் இருக்க வேண்டும். எழுதப்பட்ட அனைத்தையும் குப்பையில் போட நான் முயற்சிக்கவில்லை, ஆனால், ஆழமான பரிமாணங்களில் உள்நோக்கி பார்க்க கற்றுக்கொண்டால், புனிதநூல்கள் அனைத்தும் சலிப்பு உண்டாக்குவதாகவே தோன்றும்.

கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணன் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று கூறினார். இளவரசனாக இருந்ததால் அந்த நாட்களில் சிறந்த கல்வியை பெற்ற அர்ஜுனன், "நீங்கள் சொல்வது சரியாக இல்லை, இதைப் பற்றி இன்ன புத்தகத்தில் வேறு விதமாக சொல்லப்பட்டிருக்கிறது" என்று கூறுவார். தான் படித்த அனைத்து புத்தகங்களையும் மேற்கோள் காட்டிப் பேசுவார். கிருஷ்ணன் சிரித்தபடி சொன்னார், "மனிதனுக்குள் ஒரு ஒளி பிறக்கும்போது, உங்கள் புனித நூல்கள் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்தோடும் இடத்தில் தண்ணீர் நிறைந்த ஒரு தொட்டி இருப்பதுபோல்தான்".

நீங்கள் பாலைவனத்தில் வாழ்ந்தால், தண்ணீர் நிறைந்த ஒரு தொட்டி, உங்களுக்கு கடல் போலத் தோன்றலாம். ஆனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, நீர் நிரம்பிய தொட்டியினால் என்ன பெரிய பயன்? ஒவ்வொரு கணமும் படைத்தவர் உங்களுள் துடித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் உள்நோக்கிப் பார்க்க வேண்டும்.