பொறுப்பற்ற கல்வி ஆபத்தானதா?
ஆசிரியர் என்ற முறையில் எனக்கு ஒரு சந்தேகம். எது சிறந்த கல்வி முறை? முக்கியமாக கிராமங்களில் இருப்பவர்களுக்கு எந்த மாதிரி கல்வி தேவை?
 
 

Question:ஆசிரியர் என்ற முறையில் எனக்கு ஒரு சந்தேகம். எது சிறந்த கல்வி முறை? முக்கியமாக கிராமங்களில் இருப்பவர்களுக்கு எந்த மாதிரி கல்வி தேவை?

சத்குரு:

"இன்றைக்குக் கல்வி முறையின் நோக்கம், 'இருப்பதை எல்லாம் மனிதனுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்திக்கொள்வது' என்பது பற்றித்தான் இருக்கிறது.

பொறுப்பு உணர்வு, மற்றவரிடத்தில் கருணை, எல்லோரிடத்திலும் அன்பு... இவற்றை வளர்க்கமுடியாத கல்வி ஆபத்தானது.

ஆதாயத்துக்காக மட்டுமே சொல்லிக்கொடுக்கப்படுவது சரியான கல்வி அல்ல. மற்றவரையும் எப்படி உங்களில் ஒருவராகப் பார்ப்பது என்று சொல்லித் தருவதே கல்வி. வெறும் ஏட்டுப் படிப்பு முழுமையான கல்வி ஆகிவிடாது.

விஞ்ஞானி ஒருவர் தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணைக்க ஜெம்க்ளிப் ஒன்றைத் தேடினார். மேஜையில் கிடைத்த ஒரு க்ளிப் வளைந்து இருந்தது. அதைச் சீர்ப்படுத்த அவருக்கு ஒரு கருவி தேவைப்பட்டது.

எல்லாவற்றையும் கலைத்துத் தேடியபோது, முதலில் கிடைக்காத ஜெம்க்ளிப் பெட்டியே கையில் கிடைத்தது. விஞ்ஞானி அதிலிருந்து ஒரு புதிய க்ளிப்பை எடுத்தார். ஒழுங்கான க்ளிப்பின் உதவியுடன் வளைந்து இருந்த க்ளிப்பைச் சீர்செய்ய ஆரம்பித்தார். இதைக் கண்டு திகைத்துப்போன உதவியாளர் சுட்டிக்காட்டியதும்தான் விஞ்ஞானிக்குத் தன் முட்டாள்தனம் புரிந்தது.

அந்த விஞ்ஞானி யார் தெரியுமா? ஐன்ஸ்டீன்!

அதனால்தான் சொல்கிறேன்... கற்பது என்பது வேறு. விழிப்புணர்வுடன் செயல்படுவது என்பது வேறு!

நம் கிராமங்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பல தலைமுறைகளாக அப்படியே தேங்கி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஒருகாலத்தில் வளமான, பாதுகாப்பான, மிகத் திறமையான சமூகமாக இருந்த மக்கள், இன்றைக்குச் சிறகு ஒடிக்கப்பட்டவர்களாகத் தென்படுகிறார்கள். பொது வளத்திலோ, பொருளாதாரத்திலோ, சமூக அந்தஸ்திலோ, புவி அமைப்பிலோ அவர்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. தங்களுடைய முப்பாட்டான்கள், தாத்தாக்கள், பெற்றோர்கள் சிக்கிப்போயிருந்த சகதிகளில் இருந்து இன்றைய அற்புதமான தலைமுறை தப்பித்து வெளியே வரவேண்டும் என்றால், அதற்கு முக்கியப் படிக்கட்டுகளாக கல்விதான் அமையும். ஆனால் நடைமுறையில் இருக்கும் கல்விமுறை அவர்களை இந்தத் தளைகளில் இருந்து விடுவிப்பதற்குப் பதிலாகக் குழப்பமும், போராட்டமுமாக அமைந்துவிட்டது.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, இங்கே வாழ்ந்த மக்கள் அத்தனை பேரும் எழுதப் படிக்கக் கற்றவர்களாகவே இருந்தனர். கல்வியும் கலாச்சாரமும் இந்தியாவின் இரண்டு அடிப்படையான சக்திகளாக விளங்கும்வரை, அவர்களை அடிமைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை மெக்காலே ஆங்கில அரசுக்குத் தெரியப்படுத்தினார். அந்த மாபெரும் சக்திகளைச் சிதைத்துக் குலைப்பதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டன. 200 வருடங்களில் ஐனத்தொகையின் 70 சதவிகிதம் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் ஆகிவிட்டனர்.

கல்வியை அரசியலும், மதங்களும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, மக்களை ஏய்த்து கையாலாகாதவர்களாக மாற்றிவிட்டன. திட்டமிட்டு ஒன்றைச் சிதைக்க முடியுமானால், திட்டமிட்டு ஏன் ஒன்றை நாம் நிர்மாணிக்கக்கூடாது? இந்த முனைப்பு இல்லாமல், இன்றைய நிலையைக் குற்றம் சொல்லிக்கொண்டு மட்டும் சும்மா இருந்தால், எதுவும் மாறப்போவது இல்லை.

தேசம் என்பது பூகோளரீதியாகப் பார்க்கவேண்டியது அல்ல, அங்கு வாழும் மனிதர்களின் பிரதிபலிப்பாகக் காண வேண்டியது. முறையான கல்வியோ, ஒற்றுமையோ, உடல் வளமோ, ஒரு முனைப்போ, நோக்கமோ எதுவுமே இல்லாமல், கோடிக்கணக்கான மக்கள் புழங்கிக்கொண்டு இருந்தால், மூக்கைத் திணறடிக்கும் இந்தச் சுமையை வைத்துக்கொண்டு எந்த நாடும் முன்னேற்றம் காணமுடியாது.

அதே கோடிக்கணக்கான மக்கள் கற்றவர்களாக, ஒழுக்கம் உடையவர்களாக, சிறந்த உடல்நலத்துடன், ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றக் கூடியவர்களாக விளங்கினால், எப்பேர்ப்பட்ட அற்புதங்களை நிகழ்த்தலாம் என்று யோசியுங்கள்.

உரிய கல்வி வழங்கி, உலகின் எந்த ஒரு புள்ளியிலும் தங்கள் வாழ்க்கையைத் திறமையுடன் கையாள அவர்கள் தயாராக்கப்பட வேண்டும் என்பதே என் அவா.

தயக்கத்தை உடைத்த சீடன்

ஒரு குருகுலத்தில் பயின்ற சீடர்கள் நீச்சல் பயிற்சிக்குப் புறப்பட்டனர். ஒவ்வொருவராக நதியில் குதித்து நீந்திக் கரை சேரவேண்டும் என்பது ஏற்பாடு. ஒரு குறிப்பிட்ட சீடன் எப்போதுமே வரிசையில் கடைசியாகப் போய் நின்றுகொள்வதைப் பல நாட்களாகக் குரு கவனித்து வந்தார்.

ஒருநாள் அவனை அழைத்தார். இன்றிலிருந்து நீதான் முதலில் குதிக்கவேண்டும் என்றார். நடுங்கிக்கொண்டு நின்றவனைத் தண்ணீரில் தள்ளிவிட்டார்.

என்ன ஆச்சர்யம் சீடன் அநாயாசமாக நீந்தினான். அவனுக்குத் திடீரென்று அச்சம் நீங்கித் தைரியம் வந்திருந்தது.

குரு சொன்னார், 'உடனடியாகப் பொறுப்பு எடுத்துக்கொண்டு கவனிக்கவேண்டிய சில வேலைகள் உண்டு. அந்த நேரங்களில் தாமதம் ஆபத்தானது. தயக்கத்தை உடைத்து உடனடியாகச் செயல்பட நீ பழகவேண்டும். அதற்கான பயிற்சியும் இன்று உனக்குக் கிடைத்தது' என்றார்.

நம்மால் செய்ய முடியாததைச் செய்யாது இருந்தால் தவறு இல்லை. செய்யக்கூடியதைச் செய்யாமல் இருப்பது மாபெரும் குற்றம். தாமதம் இன்றிச் செயல்பட வேண்டிய தருணம் இது.

அண்மையில், கிராமப்புறங்களில் ஆரம்பப் பள்ளிக்கூடங்களாக ஈஷா வித்யா இயங்கி வருவதன் ஆண்டு விழாக்கள் நடந்தன. ஆறு பள்ளிகளைத் துவக்கியதற்கு மக்கள் கைதட்டினார்கள். லட்சம் மரங்கள் நட்டதற்கும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மருத்துவ வசதி கொண்டு சென்றதற்கும் ஆரவாரித்தார்கள். இந்தச் சிறு செயல்களுக்கே மக்கள் திருப்தியாகிக் கைதட்டும்போது எல்லாம் எனக்கு இதயத்தில் வலிக்கிறது. ஆறு பள்ளிகள் போதாது, ஆயிரக்கணக்கில் பள்ளிகள் இயங்கவேண்டும். லட்சம் மரங்கள் போதாது, கோடிக்கணக்கில் மரங்கள் வளர்க்கப்பட்டாக வேண்டும். தங்களுடைய எலும்புக்கூட்டின் முழுத்திறனுக்குக்கூட வளரமுடியாத உடல்வாகு கொண்ட அத்தனை கிராம மக்களுக்கும் உடல்வளம் பற்றிய அறிவும், அடிப்படை மருத்துவ வசதிகளும் வழங்கப்பட்டாக வேண்டும்.

பொறுப்பற்ற அறிவுதான் உலகின் பல அழிவுகளுக்குக் காரணமாகி இருக்கிறது. பொறுப்பு உணர்வு, மற்றவரிடத்தில் கருணை, எல்லோரிடத்திலும் அன்பு... இவற்றை வளர்க்கமுடியாத கல்வி ஆபத்தானது.

நீங்கள் வாழும் வீட்டையோ, நாட்டையோ ஏளனமாகப் பார்க்கச் செய்து, சொந்த தேசத்திலேயே அந்நியன் போல் உணரச் செய்யும் கல்வி நல்லதல்ல. பிழைப்புக்கு வழி செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், கற்பவனுடைய பார்க்கும் கோணத்தைக் கல்வி வளப்படுத்த வேண்டும். கலாச்சாரத்தின் வேர்களை அது உறுதிப்படுத்த வேண்டும். அச்சமற்ற, பராபட்சமற்ற வாழ்க்கைக்கு உங்களை உயர்த்துவதாக இருக்க வேண்டும். சுதந்திரமான சூழலையும், மற்றவரை இணையாக மதிக்கும் தன்மையையும் வளர்த்த நம் கலாசாரத்தை மீட்டுத்தருவதாக அமையவேண்டும்.

மனிதச் சரித்திரத்தில் இதற்குமுன் இப்படியொரு சாதகமான சூழல் அமைந்தது இல்லை. தேவையான மூலவளம், தொழில்நுட்பம், செயல்திறன் எதற்கும் இப்போது குறைவே இல்லை. தேவையானது எல்லாம் விருப்பமும் முனைப்பும்தான். முழுமையான அர்ப்பணிப்புடன் முனைந்தால், அடுத்த 20 ஆண்டுகளில் அற்புதமான சூழலை இங்கே கொண்டுவர முடியும்".

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1