சத்குரு

"பிளாஸ்டிக்கை தடை செய்யவேண்டும் என்றில்லை. அதை சரியாக உபயோகிக்கத் துவங்கவேண்டும் அவ்வளவுதான்!" - சத்குரு

பிளாஸ்டிக்குடன் ஆன நம் உறவு மிகவும் முரண்பட்டதாக உள்ளது.

இன்று நம் வாழ்வின் அனைத்து அம்சத்திலும் அநேகமாக பிளாஸ்டிக் பங்கு பெற்றிருக்கிறது, சாதாரண தண்ணீர் பாட்டிலில் இருந்து விமானங்கள் வரை. பிளாஸ்டிக்கின்றி "நம் வாழ்வு" என்பதை சிந்திப்பதும்கூட கடினமாக உள்ளது. என்றாலும், பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவுகள் அதை அடியோடு அகற்றவேண்டும் என்ற எண்ணத்தை பலருக்குள் வித்திட்டுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் தெருக்கள், ஆறுகள், ஏரிகள், கடற்கரை, ஏன் நம் சமுத்திரத்தின் அடி ஆழத்திலும் கூட பிளாஸ்டிக் குப்பைகளை நாம் காணமுடியும். இன்னும் 30 ஆண்டுகளில் சமுத்திரத்தில் இருக்கும் மீன்களைவிட பிளாஸ்டிக்கின் அளவு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த பிளாஸ்டிக் ஒன்றும் செய்யாமல் சும்மா அங்கேயே இருக்கும் என்று முட்டாள்தனமாக எண்ணவேண்டாம். மீன்களும் மற்ற கடல் பிராணிகளும் அதை உண்பதால் ஏற்படும் பெரும் பாதிப்பு மட்டுமல்ல, பின் அவற்றை உண்ணும் மற்றவர்களின் உடலிலும் இந்த பிளாஸ்டிக் கலக்கிறது.

பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக்கை தடை செய்யவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். பிளாஸ்டிக்கை மிக அபாயமானதாக மாற்றுவது அதன் நீடித்து உழைக்கும் தன்மையும், நீண்ட வாழ்நாளும்தான். ஆனால் இதே குணங்கள்தான் அதை ஒப்பற்ற ஒன்றாகவும் மாற்றுகிறது. 500 வருடங்கள் ஆகியும் அழியாத, அழிக்கமுடியாத ஒன்று மிகவும் மதிப்பானது. கிட்டத்தட்ட வரையறையின்றி அதை நாம் உபயோகித்துக் கொண்டே இருக்கலாம். அதனால் இங்கு பிரச்சினை, பிளாஸ்டிக் அல்ல. அதை கவனமின்றி உபயோகிக்கும் நம் பொறுப்பற்ற தன்மைதான்.

தொடர்ந்து மறுஉருவாக்கம் (recycle) செய்யக்கூடிய பொருட்கள் நம் சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் மிக உகந்தது. அதுவும் மக்கட்தொகை அதிகரித்துக் கொண்டே போகும் இக்காலத்தில், நம் வாழ்க்கைமுறையும் தேவைகளும் பன்மடங்காக அதிகரித்துக் கொண்டே இருக்கும் இந்நேரத்தில், இதுபோன்ற பொருள் ஒரு வரம் நமக்கு. அதனால் பிளாஸ்டிக்கை தடைசெய்வது தீர்வல்ல. அதை பொறுப்போடு உபயோகித்து, மறுஉருவாக்கம் செய்வது நிகழவேண்டும். இதைதான் நாம் செயல்படுத்த வேண்டும்.

இருப்பினும் பிளாஸ்டிக்கை மறுஉருவாக்கம் செய்வதில் பல சிக்கல்கள் உள்ளது. பிளாஸ்டிக்கில் வெவ்வேறு தரம் உள்ளது. ஒவ்வொன்றையும் அதற்கேற்ப தனித்துவமாக கையாள வேண்டும். இவற்றில் சில வகைகளை மறுஉருவாக்கம் செய்வது வர்த்தகரீதியாக பலனளிக்காது. இந்த வெவ்வேறு வகையான பிளாஸ்டிக்குகளை சேகரித்து, அவற்றை தனித்தனியாகப் பிரித்து கையாள்வதில் பல சிரமங்கள் உள்ளன. அதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதியின்மை, குப்பை போடுவதில் சமூக விழிப்புணர்வு குறைவாக இருப்பது என இதில் இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன.

"குப்பையும் செல்வமாக மாறும்" என்பதை அமலாக்கும் திட்டங்கள்தான் இப்போதைய உடனடித் தேவை. பிளாஸ்டிக்கை மறுஉருவாக்கம் செய்வது வர்த்தகரீதியாக பலனளிக்கும் விதத்தில், நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை நாம் இயற்றவேண்டும். பிளாஸ்டிக்கை பொறுப்புணர்வோடு உபயோகிப்பது பற்றியும், அதன் மறுஉருவாக்கம் பற்றியும் சமூகத்தில் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இதைச் செய்வது பிளாஸ்டிக் தொழில்துறையின் பொறுப்பு. பிளாஸ்டிக் மிகமிக மதிப்பானது என்பது மக்களுக்குப் புரிந்தால், பிளாஸ்டிக் குப்பைகளை நாம் எங்கும் காணமுடியாது.

2018ன் உலக சுற்றுச்சூழல் தினத்தின் விருந்தோம்பியாக செயல்படும் நம் நாடு இதற்கு ஒரு முன் உதாரணமாக செயல்பட்டு, "சிங்கிள்-யூஸ்" பிளாஸ்டிக்கை தடை செய்யவேண்டும். இதை உபயோகிப்பது சட்டரீதியாக குற்றம் என்பது அமலாக்கப்பட வேண்டும். இன்றைய உலகின் பெரும் சக்திகளாக இருக்கும் இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்ப ஒன்றியம் இதை ஒரு கொள்கையாக அமலாக்கம் செய்தால், உலகின் மற்ற பகுதிகளுக்கும் இது இயல்பாகவே பரவிவிடும்.

இன்று நாம் பின்பற்றும் வாழ்க்கைமுறைக்கும், நம் உலகின் ஜனத்தொகை அளவிற்கும் நம் தேவைகள் மிகமிக அதிகமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நாம் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்தையும் மறு-உபயோகம் செய்வதும் மறு-உருவாக்கம் செய்வதும் எவ்வளவு அத்தியாவசியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏதோ சேவை செய்யும் மனப்பான்மையோடு அணுகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது நாம் செய்யும் சேவையல்ல - நம் வாழ்வே இதைச் சார்ந்துதான் இருக்கிறது. நம் உடல் என்பது இப்பூமியில் இருந்து நாம் உருவாக்கியது. இப்பூமியை பாதுகப்பதும், வளமாக்குவதும் நம் நல்வாழ்விற்கு நாம் அமைத்துக்கொள்ளும் வழிதானே தவிர்த்து இது நாம் உலகிற்கு செய்யும் சேவையல்ல. நம் உயிரும் வாழ்க்கையும் இப்படைப்போடு, இப்பூமியோடு ஆழமாக ஒன்றியுள்ளது. இப்பூமி நன்றாக இல்லாவிட்டால், நமக்கும் நல்வாழ்க்கை என்பது இருக்காது.

வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பொருளாதாரம் பற்றிய நம் முன்முடிவுகள், நிதர்சனத்தில் இருந்து நம்மை விலக்கி வைத்திருக்கிறது. வாழ்க்கை பற்றியும் இவ்வுலகம் பற்றியும் நாம் வளர்த்து வைத்திருக்கும் கற்பனைகள் வேலை செய்யவில்லை என்பதை இப்போதாவது நாம் உணரவேண்டும். பொறுப்புணர்வோடு, மதிநுட்பத்தோடு நாம் செயல்பட வேண்டும். இது, தொழில், தொழில்துறை மற்றும் அரசாங்கம் தரப்பில் இருந்து நிகழவேண்டும்.

நம்மால் முடியாததை நம் வாழ்வில் நாம் செய்யாவிட்டால் பிரச்சினையில்லை. ஆனால் நம்மால் முடிந்ததையும் நாம் செய்யாவிட்டால் நாம் பெரும் பிழையாகிவிடுவோம். ஒரு தலைமுறையாக நாம் பெரும் பிழையாகிவிடக் கூடாது என்பதுதான் என் விருப்பம்.