பிறருக்கு உதவும்போது கவனிக்க வேண்டியவை!
உண்மையிலேயே பிறருக்கு உதவி செய்பவர்கள், யாருக்கும் தெரியாமல் உதவிசெய்துவிட்டு போவார்கள். ஆனால் உள்நோக்கத்தோடு உதவி செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். பிறருக்கு உதவிசெய்ய முடிவெடுத்தால், அதை எப்படி செய்ய வேண்டும்?! இங்கே தெரிந்துகொள்ளலாம்!
 
 

உண்மையிலேயே பிறருக்கு உதவி செய்பவர்கள், யாருக்கும் தெரியாமல் உதவிசெய்துவிட்டு போவார்கள். ஆனால் உள்நோக்கத்தோடு உதவி செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். பிறருக்கு உதவிசெய்ய முடிவெடுத்தால், அதை எப்படி செய்ய வேண்டும்?! இங்கே தெரிந்துகொள்ளலாம்!

சத்குரு:

யாரோ ஒருவருக்கு மிக அவசியமாக ஒரு தேவை இருக்கிறது. அதை வழங்கக்கூடிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனாலும், அதை வழங்க உங்களுக்கு மனமில்லை என்றால், நீங்கள் மனிதரே அல்ல.

சூழ்நிலைகளுக்கேற்றபடி செயல்படாமல் வழங்குவது, வழங்க மறுப்பது என்பதை வறட்டுக் கொள்கைகளாக வைத்துக் கொள்வது கெடுதல்தான்.

அதே சமயம், "இன்னொருத்தருக்கு இன்று நீ வழங்கினால், உனக்கு பிற்பாடு ஆனந்தமும், அமைதியும் கிடைக்கும்" என்று யாரோ அறிவுரை சொன்னதற்காக, ஒரு கடமையாக மற்றவருக்குக் கொடுப்பது என்பதைக் கொள்கையாக வைத்துக் கொள்வதால் எந்த லாபமும் இல்லை.

ஊராரிடம் உங்களை நல்லவராகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்றோ, தானம் செய்தால், உங்களுக்கு சொர்க்கத்துக்கு டிக்கெட் கிடைக்கும் என்றோ நினைத்து, வரைமுறையின்றி வழங்கி வந்தால் அது ஒரு விதத்தில் கெட்டதுதான்.

மனிதத் தன்மையுடன் எதையும் அணுகினால், சூழ்நிலையின் அவசியம் பொறுத்து யாரும் சொல்லாமலேயே வழங்க வேண்டிய சமயத்தில், வழங்குவீர்கள். அதை வழங்குவது என்று கூட சொல்வது தவறு. உங்களிடம் உள்ளதை உளமாறப் பகிர்ந்து கொள்வீர்கள்.

ஒருவருடன் பகிர்ந்து கொள்கிறீர்களா, ஒரு கோடி பேருடன் பகிர்ந்து கொள்கிறீர்களா என்பதுதான் கேள்வி. உங்களிடம் இருப்பது எளிமையானதொரு விஷயமாக இருந்தால், அதை நண்பருடனோ, அடுத்தவருடனோ பகிர்ந்து கொள்ளலாம். அதுவே வாழ்க்கையை மேம்படுத்தும் மிக முக்கியமான அம்சமாக இருந்தால், கணக்கற்றவரோடு பகிர்ந்து கொள்ளவே உங்கள் மனம் விழையும்.

மற்றபடி, சூழ்நிலைகளுக்கேற்றபடி செயல்படாமல் வழங்குவது, வழங்க மறுப்பது என்பதை வறட்டுக் கொள்கைகளாக வைத்துக் கொள்வது கெடுதல்தான்.

நிலையறியாது வழங்குவதும் ஆபத்துதான். அதேபோல், எந்த செயலுமின்றி, உட்கார்ந்தபடி அடுத்தவரிடம் கையேந்திக் காத்திருப்பதும் வெகு கெடுதல்தான்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1