பிறப்பிலேயே அழகற்றுப்போனது என் தவறா..?
நான் அழகற்றவள். கல்லூரியில், என் தோழிகளுக்கு எல்லாம் ஆண் நண்பர்கள் இருக்கின்றனர். என்னைத் திரும்பிப் பார்க்கும் ஆண்கள் இல்லை. இதனால் என் மனம் மிகவும் சோர்ந்துவிட்டது. பிறப்பிலேயே அழகற்றுப்போனது என் தவறா, இயற்கை என்னை மட்டும் ஏன் வஞ்சித்துவிட்டது?
 
 

Question:நான் அழகற்றவள். கல்லூரியில், என் தோழிகளுக்கு எல்லாம் ஆண் நண்பர்கள் இருக்கின்றனர். என்னைத் திரும்பிப் பார்க்கும் ஆண்கள் இல்லை. இதனால் என் மனம் மிகவும் சோர்ந்துவிட்டது. பிறப்பிலேயே அழகற்றுப்போனது என் தவறா, இயற்கை என்னை மட்டும் ஏன் வஞ்சித்துவிட்டது?

சத்குரு:

"என்னிடம் ஒருவர் வந்தார். 'எனக்கு ஆன்மீகத்தில்தான் நாட்டம். 24 மணி நேரமும் தியானம் செய்ய ஆசை. ஆனால் அதில் ஈடுபடமுடியாதபடி, தாங்கமுடியாத முழங்கால் வலியால் எப்போதும் வேதனையாகவே இருக்கிறது. சரி செய்ய வெளிநாட்டு டாக்டர் 20 ஆயிரம் டாலர் கேட்கிறார்' என்றார்.

மற்றவருடன் ஒப்பிட்டு நீங்கள் அழகாக இருக்கிறீர்களா இல்லையா என்பதைக் கவனிப்பதைவிட, ஏதோ ஓர் அதிசயமான திறமை உங்களுக்குள் ஒளிந்து இருக்கிறதே, அது என்ன என்பதைக் கவனியுங்கள்.

'தியானத்திலேயே நீ மூழ்கியிருக்க வழி செய்கிறேன். ஆனால் ஒரு ஆபரேஷன் செய்து உன் வலிக்கும் காலை முதலில் எடுத்துவிடுவோம்' என்றேன்.

'ஐயோ, என் காலை எதற்காக எடுக்க வேண்டும்?'

'உட்கார்ந்த இடத்தில் உனக்குச் சாப்பாடு வர ஏற்பாடு செய்கிறேன். நீ பாட்டுக்கு 24 மணிநேரமும் தியானம் செய்துகொண்டு இருக்கப்போகிறாய். முழங்காலுக்குக் கீழே இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?'

'ஐயோ, என்னால் முடியாது'.

'அப்படி என்றால், ஆன்மீகம், தியானம் என்று தேவை இல்லாத வாய்ச் சவடால்களை நிறுத்து' என்றேன்.

ஒரு சிறு யோகப்பயிற்சி சொல்லிக்கொடுத்து, 'இதைச் செய்து வா' என்றேன். மூன்று மாதங்கள் அதைத் தீவிரமாகச் செய்தார். முழங்கால் வலி காணாமல் போய்விட்டது.

அவருக்கு 20 ஆயிரம் டாலர் மிச்சமாகிவிட்டது. எதற்காக இதைச் சொன்னேன் என்றால், இந்தப் பூமிக்கு வந்திருக்கும் ஒவ்வோர் உயிரும் வெவ்வேறு சாத்தியங்களுடன்தான் வந்திருக்கின்றன. பிரதி உயிரும் தனக்கெனச் சில திறமைகளோடுதான் வந்திருக்கிறது. அந்த திறமை என்னவென்று புரிந்துகொண்டு, அதை முழுமையாக மலரவைப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால், முதலில் இன்னோர் உயிருடன் ஒப்பிடக்கூடாது. வகுப்பில் யாரோ ஒருவன் முதல் ரேங்க் வாங்குகிறான். அவனுடன் ஒப்பிட்டுப் பார்த்து மற்றவர்கள் திட்டப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். அவனையும் எப்படியாவது கீழே இழுத்துப் போடமுடியுமா என்று பார்க்க ஆரம்பிக்கிறார்கள். இப்படிப்பட்ட உலகம் உருவாக நாம்தான் காரணம்.

எந்தப் போட்டியும் இல்லாமல், யாருடனும் ஒப்பிடாமல், செய்யக் கூடியதை ஆனந்தமாகச் செய்வோம் என்று யாரும் நினைப்பதே இல்லை. அதற்கான சூழலை உருவாக்கத் தவறிவிட்டோம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மலர்ந்த சிரிப்புடன் இருக்கும் ஓர் ஆனந்தமான முகத்தை எங்கே பார்த்தாலும், அது அழகாக இருக்கும். எந்த நிறம் கொண்டு இருந்தாலும், அதற்கு மூக்கே இல்லை என்றாலும் அது அழகாகத்தான் தெரியும். விலை உயர்ந்த பொருட்களைக்கொண்டு ஒப்பனை செய்வதால், முகத்தில் அந்தத் தூய அழகு வராது.

54 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப்போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள். 'என் காலம் முடிந்துவிட்டதா?' என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம். 'இல்லை... இல்லை... உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன' என்றார் கடவுள்.

இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பிழைத்து விழித்ததும், அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள். 'என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப்போன கன்னச் சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கிவிடுங்கள். தொய்ந்துபோன அங்கங்களைத் திடமாக்கி, என் தொப்பைக் கொழுப்பை அகற்றிவிடுங்கள். என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை இருக்கிறது' என்றாள். ஏராள செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றமே மாற்றப்பட்டது. கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக்கொண்டாள்.

எல்லாம் முடிந்து, மருத்துவமனையில் இருந்து வெளிப்பட்டாள். இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை ரசித்துக்கொண்டு தெருவைக் கடந்தாள். வேகமாக வந்த லாரி ஒன்றின் கீழ் சிக்கினாள். தலத்திலேயே உயிர் இழந்தாள்.

கடவுளின் முன் கொண்டு போகப்பட்டாள்.

'எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டாமா?' என்று கோபமாகக் கேட்டாள். 'அட, நீயா அது? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே!' என்றார் கடவுள்.

பெரிய கண்களும், எடுப்பான மூக்கும் கொண்டு, நீங்கள் தோற்றத்தில் மட்டும் அழகாக இருந்தால், ஆண்களில் ஒரு குறிப்பிட்ட வயதினர் மட்டும்தான் உங்களால் கவரப்படுவார்கள். நீங்கள் ஆனந்தமானதோர் உயிராக இருந்தால், அற்புத அழகு உங்களிடம் மிளிரும். ஆண்கள் மட்டும் அல்ல, பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், மற்ற உயிர்கள் என்று பாகுபாடு இல்லாமல், உலகத்தின் அடிப்படையே உங்களால் கவரப்பட்டு உங்களை நோக்கி வரும்.

மனிதநேயம் உங்களிடம் பொங்கி வழிந்தால், தெய்வீகம்கூட உங்களிடம் நெருக்கமாகிவிடும். அப்படிப்பட்டதோர் அற்புத வாழ்க்கையை வாழ்வதை விடுத்து, அழகான ஒரு பொம்மையாக இருக்க ஆசை கொள்ளாதீர்கள்.

பறக்கவே சக்தி இருக்கும் ஒருவன், தனக்கு இறக்கைகள் இருப்பதில் கவனம் வைக்காமல், பக்கத்தில் முடமாக இருப்பவனைவிட வேகமாகத் தவழ்ந்து நகரமுடியுமா என்று போட்டி போட்டுக்கொண்டு இருந்தால், அது எவ்வளவு அபத்தமான விஷயம்?

மற்றவருடன் ஒப்பிட்டு நீங்கள் அழகாக இருக்கிறீர்களா இல்லையா என்பதைக் கவனிப்பதைவிட, ஏதோ ஓர் அதிசயமான திறமை உங்களுக்குள் ஒளிந்து இருக்கிறதே, அது என்ன என்பதைக் கவனியுங்கள். அதற்காக நீங்கள் அழகான தோற்றத்துடன் இருக்க விரும்புவது தவறு என்று நான் சொல்லவில்லை. பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு அழகு பற்றிய கவனம் இருக்கத்தான் செய்யும். உங்களுடைய தோற்றத்தை எந்த அளவு அழகாக வைத்துக்கொள்ள முடியுமோ, அந்த அளவு அழகாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் வெறும் மூக்கும், முழியும்தான் கவர்ச்சியானவை என்பது உண்மையல்ல. காலத்தின் ஓட்டத்தில், அழகு தொலைந்துவிடும். உங்களுடைய திறமை கண்டு, புத்திசாலித்தனம் கண்டு, நீங்கள் வெளிப்படுத்தும் நல்ல உணர்வைக்கண்டு கவரப்படுபவர்கள் இருப்பார்கள். ஆனந்தமான முகமும், ஆரோக்கியமான உடலும்தான் அழகான தோற்றத்துக்கு அடிப்படை!"

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1